

மதிமுக சட்டமன்ற உறுப்பினர் சதன் திருமலைக்குமாருக்கு நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் மருத்துவர் சதன் திருமலைக்குமார், நிதி நிறுவனம் ஒன்றில் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாதது தொடர்பான வழக்கில் இந்த அதிரடித் தீர்ப்பு வெளியாகியுள்ளது.
இந்த வழக்கின் பின்னணி குறித்துப் பார்த்தால், கடந்த 2016-ஆம் ஆண்டு சதன் திருமலைக்குமார் தனது தொழில் முன்னேற்றத்திற்காகச் சென்னை ராயப்பேட்டையில் உள்ள 'நியூலிங்க் ஓவர்சீஸ்' (Newlink Overseas) என்ற நிதி நிறுவனத்திடம் இருந்து ஒரு கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளார். இதற்காக தலா 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான இரண்டு காசோலைகளை (Cheques) அந்த நிறுவனத்திடம் அவர் வழங்கியுள்ளார். ஆனால், அந்த நிறுவனத்தினர் அந்தக் காசோலைகளை வங்கியில் செலுத்தியபோது, அவரது கணக்கில் போதிய பணம் இல்லாததால் அவை திரும்பி வந்துள்ளன.
இதனைத் தொடர்ந்து, 2019-ஆம் ஆண்டு அந்த நிதி நிறுவனத்தின் சார்பில் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்குத் தொடரப்பட்டது. அவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காரணத்தால், இந்த வழக்கு எம்பி மற்றும் எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. பின்னர், சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவின்படி சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்திற்கு இந்த வழக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தரபாண்டியன், சதன் திருமலைக்குமாருக்கு எதிரான காசோலை மோசடி குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். எனவே, அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பதாகத் தீர்ப்பளித்தார். அதோடு மட்டுமல்லாமல், ஒரு கோடி ரூபாய் பணத்தை இரண்டு மாதங்களுக்குள் அவர் திருப்பி அளிக்க வேண்டும் என்றும், அவ்வாறு அளிக்கத் தவறினால் மேலும் மூன்று மாதங்கள் சிறை தண்டனையை அனுபவிக்க நேரிடும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.