“அதிகாரிகளுக்கு வேற வேலையில்லையா.. அவரை கவனிப்பதுதான் வேலையா?” - சேகர்பாபு விவகாரத்தில் அமைச்சர் ரமேஷ் காட்டம்!

நானே எந்த விஐபி கியூவிலும் செல்வதில்லை. மக்களோடு மக்களாகதான் தரிசனம் செய்கிறேன்.
அமைச்சர் ரமேஷ்
Published on
Updated on
1 min read

முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவுக்கு தரிசனம் செய்து வைக்கத்தான் அதிகாரிகள் உள்ளார்களா? மக்களுக்கு பணியாற்றத்தான் அதிகாரிகள் உள்ளார்கள். பொதுவழியில் மக்களோடு மக்களாக செல்வது அவமரியாதையா? இது என்ன புது கல்ச்சர்? என அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.

திருச்சி மலைக்கோட்டை கோவிலில் தரிசனம் செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்   ரமேஷ், முன்னாள் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திருவண்ணாமலை கோவிலில் தரிசனம் செய்தது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். திருவண்ணாமலை கோவிலில் முன்னாள் அமைச்சர் சேகர்பாபுக்கு VIP தரிசனம் மறுக்கப்பட்டு பொதுவழியில் அனுமதிக்கப்பட்டார். 

இதுகுறித்து கேள்விக்கு அமைச்சர் ரமேஷ், “இதில் என்ன அவமானம்? பொதுவழியில் மக்களோடு மக்களாகச் சென்று சாமி தரிசனம் செய்வது அவமானமா? இது என்ன தமிழ்நாட்டில் புது கல்ச்சராக உள்ளது? அதிகாரிகளுக்கு வேறு வேலையே இல்லையா? அவருக்கு தரிசனம் செய்து வைத்து பணியாற்ற அதிகாரிகள் இருக்கிறார்களா? மக்களுக்கு பணியாற்றுவதற்காகத்தான் அதிகாரிகள் உள்ளனர். நானே எந்த விஐபி கியூவிலும் செல்வதில்லை. மக்களோடு மக்களாகதான் தரிசனம் செய்கிறேன். பொதுமக்களோடு செல்வதை அவர் அவமரியாதையாக நினைக்கிறாரா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் “கடந்த ஆட்சியில் அவர் என்ன செய்தார் என்பது மக்களுக்குத் தெரியும். அவர் பொதுமக்களோடு மக்களாக இருந்தால்தான் மக்களுடைய கஷ்டங்கள் புரியும். பொதுமக்களோடு செல்வது அவமரியாதை என்று அவர் நினைத்தால் ஒன்றும் செய்ய முடியாது” என்றார். மேலும் இடைத்தேர்தல் குறித்து பேசிய அவர் “தமிழ்நாடு முதலமைச்சர் இருக்கும்போது நாங்கள் எதைப் பற்றியும் கவலைப்படப் போவதில்லை. தமிழ்நாட்டின் நிரந்தர முதலமைச்சர் அவர். நாங்கள் இடைத்தேர்தலில் கண்டிப்பாக வெற்றி பெறுவோம்” என்றும் தெரிவித்தார்.

கம்யூனிஸ்ட் கட்சிகள் தனியாகப் போட்டியிடுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், அதுகுறித்து கவலை இல்லை என்றும் இடைத்தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார். தமிழ்நாட்டில் மின்வெட்டு இல்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார். “போராட்டம் செய்வதற்கென்றே சிலர் இருக்கிறார்கள். அவர்கள் செய்து கொண்டே இருப்பார்கள். மின்தடை பிரச்சனையை மின்சாரத்துறை அமைச்சர் சரி செய்துவிட்டார். மின்சார விநியோகம் தடையின்றி வழங்கப்பட்டு வருகிறது. சரி செய்வதற்கு முன்னதாகவே சிலர் வேண்டுமென்றே போராட்டம் செய்கிறார்கள் என்றும் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அதனால்தான் வரவேற்பு கொடுக்கிறார்கள். மக்கள் தெளிவாக உள்ளார்கள்” என்றும் அமைச்சர் ரமேஷ் குறிப்பிட்டார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com