"அது அவர்கள் உரிமை" - கம்யூனிஸ்டுகள் தனித்துப் போட்டி... முதன்முதலாக பேசிய திருமாவளவன்!

"மக்களுடைய இசைவு இல்லாமல், கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்கான முயற்சியை மேற்கொள்ளக்கூடாது. இதை முதலமைச்சரைச் சந்தித்து வலியுறுத்த இருக்கிறோம்." - திருமாவளவன்
"அது அவர்கள் உரிமை" - தனித்து களமிறங்கும் கம்யூனிஸ்டுகள்... முதன்முதலாக பேசிய திருமாவளவன்!
"அது அவர்கள் உரிமை" - தனித்து களமிறங்கும் கம்யூனிஸ்டுகள்... முதன்முதலாக பேசிய திருமாவளவன்!மாலைமுரசு
Published on
Updated on
2 min read

விசிக தலைவர் திருமாவளவன் நேற்று தென் மாவட்டங்களில் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டார். அந்த வகையில், சிவகாசியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

தவெக கூட்டணியில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட இடதுசாரிக் கட்சிகள் தனித்துக் களமிறங்குவதாக அறிவித்துள்ளன. இதுகுறித்து, முதன்முறையாக மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக தலைவர் திருமாவளவன் கருத்துத் தெரிவித்துள்ளார்.

அதிர்ச்சியளித்த ஆ.ராசா பேச்சு!

அப்போது, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் சட்டமன்ற உரைக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தில் திமுகவினர் ஆபாசமான மொழியில் பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

"திமுக தலைவர் ஸ்டாலின் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில், எங்கே யார் பேசினாலும் மனித மாண்புகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றே தனது கட்சியினருக்கு வழிகாட்டுவதாகப் பேசியிருந்தார்.

ஆனால், நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா உள்ளிட்ட அந்தக் கட்சியின் முக்கியத் தலைவர்கள் அந்த மாண்புகளைக் கடைப்பிடித்ததாகத் தெரியவில்லை. அது தவெகவுக்கு மட்டுமல்ல, திமுகவுக்கும் எதிரான கருத்தாகத்தான் இருக்கிறது.

அவர்கள் அரசியல் நாகரிகத்துக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். ஆனால், ஆ. ராசாவின் பேச்சும் மற்ற முன்னணி தலைவர்களின் பேச்சும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது" என்றார்.

தனித்து களமிறங்கும் கம்யூனிஸ்டுகள்... தவெக கூட்டணிக்கு பின்னடைவா?

இடைத்தேர்தலில் இடதுசாரிக் கட்சிகள் தனித்துப் போட்டியிடுவது குறித்த கேள்விக்கு, "கம்யூனிஸ்ட் கட்சிகள் தொடக்கத்தில் இருந்தே, ஆட்சிக்கு மட்டும்தான் ஆதரவு என்று கூறி வருகின்றனர். இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணைந்தே நாங்கள் தனித்து இயங்குவோம் என்று கூறியுள்ளனர்.

இப்போது இடைத்தேர்தலில் கம்யூனிஸ்டுகள் தனித்துப் போட்டியிடுவது, தவெகவுக்கு எதிரான நிலைப்பாடு என்றோ, திமுகவுக்கு ஆதரவான நிலைப்பாடு என்றோ கருதத் தேவையில்லை என்றே கூறியிருக்கின்றனர். இடைத்தேர்தல் முடிவுகள் ஆட்சியைத் தீர்மானிக்கப் போவதில்லை என்பதால் தனித்துப் போட்டியிடுவதாகத் தெரிவித்துள்ளனர்.

அது அவர்கள் உரிமை. அது மதச்சார்பற்ற சமூகநீதிக் கூட்டணிக்கு பின்னடைவாக இருக்காது" எனப் பதிலளித்தார்.

உப்பள தொழிலாளர் போராட்டம்... முதலமைச்சரை சந்தித்து தீர்வு?

தொடர்ந்து, நேற்றிரவு தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், "தூத்துக்குடி முள்ளக்காடு பகுதியில் 3,000 ஏக்கர் பரப்பளவில் உப்பு தொழில் செய்யும் நிலங்களைக் கையகப்படுத்தி, கப்பல் கட்டும் தளத்தை உருவாக்க ஹூண்டாய் தென்கொரிய நிறுவனம் மற்றும் தமிழ்நாடு அரசு இடையே ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது.

கடந்த ஆட்சியின்போது போடப்பட்ட இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து, உப்பளத் தொழிலாளர்கள் ஏறத்தாழ 50 ஆயிரம் பேர், இந்தத் தொழிலை நெடுங்காலமாக, காலங்காலமாக, தலைமுறை தலைமுறையாகச் செய்து வருபவர்கள், இந்தத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்தக் கோரிக்கையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆதரிக்கிறது. தமிழ்நாடு அரசு இதனைப் பரிசீலிக்க வேண்டும். மக்களுடைய ஒப்புதல் இல்லாமல், இசைவு இல்லாமல், கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்கான முயற்சியை மேற்கொள்ளக்கூடாது. இதை முதலமைச்சரைச் சந்தித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வலியுறுத்த இருக்கிறோம்.

மக்களின் போராட்டம் தொடர்கிறது. இந்தப் போராட்டத்தை மதித்து, மக்களின் உணர்வுகளை மதித்து, தமிழ்நாடு அரசு உப்பளத் தொழிலைப் பாதுகாக்க வேண்டும்; தொழிலாளர்களையும் பாதுகாக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" எனப் பேசினார்.

"அது அவர்கள் உரிமை" - தனித்து களமிறங்கும் கம்யூனிஸ்டுகள்... முதன்முதலாக பேசிய திருமாவளவன்!
"உன் பிறப்பை சந்தேகிக்கிறேன்.." - நிர்மல் குமார் குறித்து ஆ.ராசா ஆவேசப் பேச்சு!

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com