“திமுக என்ன செய்தது?” - ஆணவக்கொலை குறித்த கேள்விக்கு அமைச்சர் வன்னி அரசு சர்ச்சை பதில்

"அவருக்கு துணைப் பொதுச் செயலாளர் பதவி வழங்கி, சட்டமன்ற உறுப்பினராக்கி அழகு பார்த்த கட்சி விசிக..."
வன்னி அரசு
Published on
Updated on
2 min read

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள கிடங்கல் ஏரியை தனியார் பங்களிப்புடன் தூர்வாரும் பணியை சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்து பேசினார்.

தமிழக வெற்றிக் கழக அரசு சட்டப்பேரவையை சர்க்கஸ் கூடாரமாக மாற்றிவிட்டதாக உதயநிதி ஸ்டாலின் விமர்சித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த வன்னி அரசு, “உதயநிதியும் சட்டப்பேரவையில்தான் இருக்கிறார். அவரையும் சேர்த்துதான் கூறுகிறாரா என்பது எனக்குத் தெரியவில்லை. ஆக்கப்பூர்வமான, வளர்ச்சிக்கான விமர்சனங்களை முன்வைப்பது நல்லது. ஜோசப் விஜய் தமிழ்நாட்டை வளப்படுத்த வேண்டும், வலிமைப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறார். எனவே நல்ல விமர்சனங்களை முன்னெடுக்க வேண்டும் என்பதே எங்களது பார்வை” என்றார்.

ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான தனிச் சட்டம் எப்போது கொண்டுவரப்படும் என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “இதுகுறித்து சட்டப்பேரவையிலேயே பதில் அளித்துள்ளேன். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணைந்து ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக தனிச் சட்டம் கொண்டுவர வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். அதன் அடிப்படையில்தான் கே.என். பாட்ஷா தலைமையில் குழு அமைக்கப்பட்டது. தற்போது அந்தக் குழுவுக்கு மேலும் 9 மாதங்கள் கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகளின் கருத்துகளைக் கேட்டறிந்த பிறகு சட்டம் கொண்டுவரப்படும். இதுகுறித்து முதலமைச்சர் அறிவிப்பார்” என்றார்.ஆளூர் ஷாநவாஸ் தவெக அரசை விமர்சித்து வருவது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த வன்னி அரசு, “இதுகுறித்து தலைவர் பதில் அளிப்பார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் அனைவரும் அவரை நேசிக்கிறார்கள். யார் மீதும் எங்களுக்கு வெறுப்பு இல்லை. அவர் மனிதநேய மக்கள் கட்சியில் இருந்து இங்கு வந்தவர். அவருக்கு துணைப் பொதுச் செயலாளர் பதவி வழங்கி, சட்டமன்ற உறுப்பினராக்கி அழகு பார்த்த கட்சி விசிக. எனவே அந்தக் கட்சிக்கு என்ன செய்ய வேண்டும் என்பது அவருக்குத் தெரியும்” என்றார்.

விசிக மற்றும் தவெக இணைந்து செயல்படுவதற்கான காரணம் குறித்து பேசிய அவர், “10 ஆண்டுகளாக திமுகவுடன் இணைந்து செயல்பட்டோம். இன்றைய சூழலில் தவெகவுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம். வரும் காலங்களிலும் இந்த இணைப்பு இருக்கும். விசிகவும் இடதுசாரிகளும் இருக்கும் அணிதான் உண்மையான இடதுசாரி அணி. விசிகவும் இடதுசாரிகளும் இல்லாத அணியை இடதுசாரிகள் அணி என்று கூற முடியாது. தவெக வளர்ச்சியை நோக்கியும், சமூக நீதியை நோக்கியும் முன்னெடுக்கும் ஒரு இடதுசாரி அணி என்பதால் இந்த அணியில் தொடர்கிறோம்” என்றார்.

“அதிகாரிகள் முக்கியமா? கம்யூனிஸ்டுகள் முக்கியமா?” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் விமர்சித்தது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, “அவர் சரியாகத்தான் கூறியுள்ளார். இதை தவறு என்று கூற முடியாது. இந்த நாட்டை ஆள்வதற்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மற்றும் முதலமைச்சர் உள்ளனர். அதிகாரிகள் நாட்டை வழிநடத்த முடியாது. இடதுசாரி அரசியலை முன்னெடுக்கும் இடத்தில் தவெக இருக்க வேண்டும் என்பது எங்களது நிலைப்பாடு” என்றார்.

தவெக அமைச்சரவையில் உள்ள தலித் அமைச்சர்கள் சாதி ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக குரல் கொடுப்பதில்லை என்ற விமர்சனம் குறித்த கேள்விக்கு பதிலளித்த வன்னி அரசு, “சாதி ஆணவப் படுகொலைகளைத் தடுப்பதற்கு திமுக என்ன செய்தது? திமுகவினர் கடந்த காலத்திலோ அல்லது இப்போதோ பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்கச் சென்றார்களா? எனக் கேள்வி கேட்பது எளிது. களத்திற்குச் சென்று அவர்களின் துயரத்தில் உடன் நிற்பதுதான் உண்மையானது. சாதி ஆணவப் படுகொலைக்கு தனிச் சட்டம் வேண்டும் என்று கடந்த ஆட்சியில் சட்டப்பேரவையில் நாங்கள் கோரிக்கை வைத்தபோது, அது குறித்து திமுக எந்தப் பதிலும் கூறவில்லை. கேள்வி கேட்பதைத் தாண்டி, இதனைச் செயல்பாட்டுக்குக் கொண்டு வர முயற்சி செய்து வருகிறோம்” எனத் தெரிவித்தார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com