தவெக ஆட்சியில் கடந்த 4 மாதங்களில் பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வு அதிகரித்துள்ளதாகவும் இதற்கு தவெக-வின் நிர்வாக திறந்தான் காரணம் என காட்டமாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது சமூகவலைதளபக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று கூட்டணி ஆட்சியில் தவெக தற்போது தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்றிருக்கிறது. அந்த வகையில் ஆட்சிக்கு வந்து 4 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் விலைவாசி, பணவீக்கம் போன்றவை தமிழகத்தில் அதிகரித்துள்ளதாக திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஏற்கனவே, சட்டஒழுங்கு பிரச்சனை, மின்வெட்டு பிரச்சனை உள்ளிட்டவற்றை குறித்து திமுக தொடர்ந்து விமர்சித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அவர் தனது அதிகாரப்பூர்வ சமூகவலைதளப்பக்கத்தில், "த.வெ.க. ஆட்சி அமைந்த நான்கே மாதங்களில் தமிழ்நாடு முதலிடம்! எதில் தெரியுமா? பணவீக்கத்திலும் விலைவாசி உயர்விலும்!
இவர்களுக்கு, அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுக்குள் வைக்கத் தெரியவில்லை என்றால் கூட பரவாயில்லை. விலைவாசி உயர்வே ஏற்படவில்லை என உணவுத்துறை அமைச்சர் சொல்லும் வடிகட்டிய பொய்யைக் கேட்டுத்தான் ஏழை மக்கள் இன்னும் எரிச்சலில் இருக்கிறார்கள்.
மின்வெட்டு குறித்தும் அனைத்து எதிர்க்கட்சிகளும் கடந்த பல மாதங்களாக எச்சரித்து வந்தோம். அப்போதே சுதாரித்து உரிய நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும்.
மின்துறை அமைச்சர் பஞ்சாபைக் காட்ட, முதலமைச்சரோ இலண்டன் பறந்துவிட்டார். இப்போது, கடைசி நிமிடத்தில் கதவைத் தட்டி, யூனிட்டுக்கு 35 ரூபாய் கொடுத்து வெளிச்சந்தையில் வாங்கப் போகிறார்களாம். கழக ஆட்சியில் குறைந்த விலைக்கு வாங்கிய ஒப்பந்தங்களை இரத்து செய்துவிட்டு, இந்தியாவிலேயே இதுவரை எந்த மாநிலமும் வாங்காத அதிக விலைக்கு வாங்குவதுதான் இவர்கள் கொண்டு வந்துள்ள மாற்றமா?.
இது யார் வீட்டுக் காசு சார்?, அ.தி.மு.க.வில் இருந்து மேலும் 15 பேரை purchase செய்யப் போகிறோம் என்று வேறு வெட்கமே இல்லாமல் ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறீர்களே? அதற்குப் பணம் போதாமல்தான் மின்சாரம் வாங்குவதில் ஊழல் நடக்கிறதா என மக்கள் மனதிலும் கேள்விகள் எழத் தொடங்கிவிட்டன.
குறுவை பொய்த்த நிலையில், டெல்டா விவசாயிகளின் பேச்சைக் கேட்காமல், ஜோசியரின் பேச்சைக் கேட்டு மேட்டூர் அணையையும் தவறான தேதியில் திறந்து வைத்தார்கள். 5 கோடி ரூபாய் செலவில் சாலையோரத் தடுப்புகள் அமைத்து CM ரீல்ஸ் எடுத்ததைத் தவிர அதனால் விளைந்த பயன் என்ன? இப்போது சம்பா சாகுபடியும் சாத்தியமாகுமா எனத் தெரியாமல் கடைமடை விவசாயிகள் நீரின்றிப் பரிதவிக்கிறார்கள்.
இப்படி, முன்யோசனையும் இல்லாத மூளையும் இல்லாத ஒரு மூடர் கூட்டத்திடம் சிக்கி, நம் கண்முன்னே தமிழ்நாடு சீரழிந்து கொண்டிருக்கிறது. வாலில் தீப்பற்றிய குரங்குக் கூட்டம் வனமெல்லாம் தாவி, கொளுத்தி விடுவதைப் போலத்தான் த.வெ.க. அரசின் அமைச்சரவை அமைந்திருக்கிறது.
இவர்களை வழிநடத்த வேண்டிய முதலமைச்சரோ, உடுப்பி, இலண்டன், விஜயவாடா என மாதம் ஒரு ஊருக்குச் சென்று விழாவைச் சிறப்பிப்பதிலேயே குறியாக இருக்கிறார்.
மொத்தத்தில், ஆட்சி நிர்வாகத்தின் அடிப்படை கூட அறியாத இந்த அறிவிலிகளின் அலட்சியத்தாலும் அழிச்சாட்டியத்தாலும் எதிர்வரும் மாதங்களைத் தமிழ்நாட்டு மக்கள் எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்ற அச்சம்தான் மேலோங்குகிறது" என்று காட்டமாக பதிவிட்டு, #Collectionகுமாரு என்று முடித்துள்ளார்.
ஏற்கனவே, மின்சார கொள்முதல் விலை யூனிட்டிற்கு ரூ. 35-க்கு வாங்கியுள்ள நிலையில் அதுவே பெரும் பேசுபொருளானது. கடந்த ஆட்சி காலங்களில் குறைந்து விலைக்கு வாங்கியதை தவெக அரசு அதிக விலை கொடுத்து வங்கியுள்ளதாகவும், மக்களின் பணத்தை வீணடிப்பதாகவும் அரசியல் வட்டாரங்களில் விமர்சனங்கள் எழுந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.