

முன்னாள் சபாநாயகரும் திமுகவின் மூத்த தலைவருமான அப்பாவு, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன் ஆந்திர முதல்வர் மற்றும் தமிழக நடிகை உட்பட சிலரை துபாயில் சந்தித்து பின்னே திமுகவிற்கு எதிராக ஒரு கட்சி ஆரம்பித்ததாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதில் தமிழ் நடிகை என்று குறிப்பிட்டுள்ளது யாரை குறிப்பிடுகிறார் என்பது கவனம் பெற்று வருகிறது.
இதுகுறித்த அவரது பதிவில், "தவெக தொடங்குவதற்கு 3 மாதங்களுக்கு முன் நடிகர் விஜய், ஒன்றிய பெண் அமைச்சர் ஒருவர், ஆந்திர முதல்வர், தமிழக நடிகை உட்பட பல பேர் துபாயில் ஒன்று கூடி திமுகழகத்திற்கு எதிராக தமிழ்நாட்டில் புதிய கட்சி ஆரம்பிப்பதற்கு பாஜகவிடம் பல ஆயிரம் கோடி ரூபாயை விஜய் துபாயில் வாங்கிக் கொண்டு தான் தவெக கட்சி ஆரம்பித்ததாக துபாய் வாழ் தமிழர்கள் சொல்வதை புறந்தள்ள முடியுமா CM sir ?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில் விசாரணை நடக்காமல் இருக்க இதுவே காரணம் என்றும் அவர் கூறியுள்ளார். "நடிகர் விஜயால் கரூரில் 41 பேர் பலியான அடுத்த நாளே பாஜக MP ஹேமா மாலினி தலைமையில் அவசரமாக வந்திறங்கிய பாஜக எம்பி குழு விஜய்க்கு ஆதரவாக கருத்து கூறியதையும் அந்த வழக்கு உடனடியாக சிபிஐக்கு மாற்றப்பட்டதையும் தற்போது விசாரணை எதுவும் இன்றி முடக்கப்பட்டு இருப்பதுமே துபாய் சம்பவத்திற்கு சாட்சி என்பதை மறுக்க முடியுமா CM sir" என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதில் அவர் குறிப்பிடும் தமிழ் நடிகை யார் என்பதை நெட்டிசன்கள் கணித்து கமெண்ட் செய்து வருகின்றனர். முன்னாள் சபாநாயகர் அப்பாவு குறிப்பிடுவது, கட்சி தொடங்குவதற்கு 3 மாதங்களுக்கு முன்பு என்பதால், தோராயமாக, அது 2023 இறுதி காலாண்டு என தெரிகிறது. தமிழக வெற்றி கழகம் 2024 பிப்ரவரி 2ம் தேதி தொடங்கப்பட்டது. அப்படி பார்த்தால் அவர் குறிப்பிடுவது 2023 அக்டோபர் காலகட்டம் என தெரிகிறது. அப்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் லியோ படத்தின் படப்பிடிப்பு, இசை வெளியீட்டு விழா மற்றும் ப்ரமோஷன் போன்ற நிகழ்வுகளில் பிஸியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் விஜய்க்கு ஜோடியாக நடிகை திரிஷா மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் அர்ஜுன், மடோனா செபாஸ்டின் ஆகியோர் நடித்திருந்தனர். அப்போது அவர் அரசியலில் விஜய்க்கு எந்த தலையீடும் இல்லாமல் இருந்த காலகட்டம். மேலும் அந்த காலாண்டில் விஜய் துபாய் சென்று வந்ததற்கான எந்த செய்தியும் இல்லை.
அதையடுத்து அப்பாவு தனது பதிவில், முதல்வர் விஜய் இன்று ஆந்திரா செல்வத்தையும் அங்கு வர ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்களை சந்திப்பது குறித்து, “ஆந்திர நிறுவனத்தில் இருந்து மின்சாரம் வாங்க 'ரெட்டி கேங்' இப்போது முதலமைச்சரை அந்த மாநிலத்துக்கு அழைத்து சென்றுள்ளதாக” குறிப்பிட்டுள்ளார். "தமிழக மின் உற்பத்தியை பாதியாக குறைத்து செயற்கை மின் தட்டுப்பாட்டை உருவாக்கி 5 ரூபாய்க்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை யூனிட் 1க்கு 35 ரூபாய் வீதம் ஆந்திர நிறுவனத்திடம் 4500 MW மின்சாரத்தை மக்கள் வரிப்பணத்தில் கொள்முதல் செய்ததற்காக, பல ஆயிரம் கோடி ரூபாய் கமிஷன் வாங்குவதற்கு "ஆந்திரரெட்டிகேங் " உங்களை ஆந்திரா அழைத்துச் செல்கிறதா CM sir ?" எனக் கேட்டுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்