

கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் அருகே 1144 ஹெக்டேர் நிலப்பரப்பில் அணுக்கனிமச் சுரங்கம் அமைக்க ஆதரவு அளிக்கும் வகையில், இத்திட்டத்திற்கான ஒதுக்கீட்டு ஆணையை தற்போதைய அறைக்கு மேலும் ஒரு ஆண்டிற்கு நீட்டித்து அரசாணை பிறப்பித்துள்ளது. 2015ம் ஆண்டு 1817 எக்டேர் பரப்பளவில் அணுக்கனிம சுரங்கம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது. இது தொடர்பான அணுசக்தித் துறையின் கோரிக்கையை ஆய்வு செய்த தமிழக அரசு 1144 எக்டேர் நிலத்தில் அணுக்கனிம சுரங்கம் அமைக்க 2020-ஆம் ஆண்டில் அப்போதைய அதிமுக ஆளும் அரசு ஒப்புதல் அளித்தது. அதைத் தொடர்ந்து அந்த நிலங்களை அணுக்கனிமச் சுரங்கம் அமைக்க ஒதுக்கீடு செய்து 11.06,2021-ஆம் நாள் மத்திய அரசு ஆணை பிறப்பித்தது.
ஆனால் கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்ட மக்கள் இந்தத் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதையடுத்து கருத்துக்கேட்புக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. ஆனாலும், அணுக்கனிம சுரங்கத்தை அமைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த மத்திய அரசு, டங்ஸ்டன், தாமிரம், நிக்கல், பிளாட்டினம் உள்ளிட்ட 24 வகையான முக்கியக் கனிமங்களையும், தோரியம், யுரேனியம், மோனசைட் உள்ளிட்ட 6 வகையான அணுக் கனிமங்களையும் தோண்டி எடுப்பதற்கான சுரங்கங்களை அமைப்பது குறித்து பொதுமக்களிடம் கருத்துக் கேட்கும் கூட்டங்களை நடத்த தேவையில்லை என்றும், இவற்றுக்கான சுற்றுச்சூழல் அனுமதியை இனி மத்திய அரசே வழங்கும் என்றும் 2025-ஆம் ஆண்டில் மத்திய அரசு ஆணை பிறப்பித்தது.
மத்திய அரசின் ஆணைக்கு பிறகும் மக்களின் எதிர்ப்பு காரணமாக அணுக்கனிம சுரங்கம் அமைக்கும் நடவடிக்கைகள் கிடப்பில் போடப்பட்டது. மத்திய அரசே சுரங்கம் அமைக்க 1144 எக்டேர் நிலங்களை ஒதுக்கி 11.06.2021 ஆம் நாள் மத்திய அரசு பிறப்பித்த ஆணை ஐந்தாண்டுகளுக்கு மட்டும் தான் என்பதால் தற்போது அதன் காலம் காலாவதி ஆகிவிட்ட்டது என மக்கள் நினைத்திருந்தனர்.
தற்போதைய தவெக அரசு நில ஒதுக்கீட்டை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து கடந்த 10.06.2026-ஆம் நாள், அரசாணை பிறப்பித்திருக்கிறது. அதிலும் நிலம் ஒதுக்கப்பட்ட ஆணை பிறப்பிக்கப்பட்டு 5 ஆண்டுகள் முடிவடையும் கடைசி நாளில் இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்திய அருமணல் ஆலை ஒரு சில அனுமதிகளை மட்டும் அணுக்கனிம சுரங்கத்தை அமைத்து விட முடியும். இதன் மூலம் கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்ட மக்களுக்கு சரி செய்ய முடியாத அளவுக்கு பாதிப்புகள் ஏற்படும் என அரசியல் தலைவர்கள் எச்சரிக்கின்றனர். அதை எதிர்த்து அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக MP கனிமொழி மற்றும் பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதிமுக பொது செயலாளர் ஈபிஎஸ், “கிள்ளியூர் அருகே 1144 ஹெக்டேர் நிலப்பரப்பில் அணுக்கனிமச் சுரங்கம் அமைக்க ஆதரவு அளிக்கும் வகையில், இத்திட்டத்திற்கான ஒதுக்கீட்டு ஆணையை ஓராண்டிற்கு நீட்டித்து தவெக பொய்க்கால் குதிரை அரசு அரசாணை வெளியிட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. இதே திட்டத்தை, கடந்த 03.11.2024 அன்று நடந்த அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. அந்த தீர்மானத்தில் இத்திட்டத்தை தென் தமிழகத்தை பாழ்படுத்தும் முயற்சி என்று குறிப்பிட்டுள்ள இன்றைய ஆளுங்கட்சி, இதனை அபாயம் விளைவிக்கும் நாசகார நச்சுத் திட்டம் என்று கூறி இதனை கைவிட வலியுறுத்தி உள்ளது. தற்போது அந்த நிலைப்பாட்டில் என்ன மாற்றம் வந்துவிட்டது? ஆட்சிக்கு வருவதற்கு முன் நாசகார நச்சுத் திட்டமாக இருந்தது, இப்போது நன்மை பயக்கும் நலத்திட்டம் ஆகிவிட்டதா? என்றும் எதற்கு இந்த இரட்டை வேடம்? என்றும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், தமிழக முதல்வருமான ஜோசேப் விஜக்கு கேள்விகள் எழுப்பியுள்ளார்.
மேலும் “அடுத்த கட்சி MLA-க்களை வலைவீசி, குதிரை பேரம் பேசி இழுப்பதற்கும், “கல்லாப்பெட்டி கூட்டணி” என்று தேர்தலுக்கு முன் சொன்ன கட்சிகளை எல்லாம், தங்கள் “Sofa கூட்டணி”க்குள் நுழைப்பதற்கும் இடையே இப்படி ஒரு அரசாணை வெளியிட்டால் அதனை கண்டுகொள்ள மாட்டார்கள் என்று நினைத்தீர்களா?” என்றும் “தற்போதைய தமிழக அரசியல் சூழல் குறித்தும் அதன் உள்நோக்கத்தை குறித்தும் விமர்சித்துள்ளார். மேலும் “நச்சுத் திட்டம் என்று இன்றைய ஆளுங்கட்சி சொன்ன திட்டத்தை உள்ளபடியே அது நச்சுத் திட்டம் தான் என்றால் இதனை தடுத்து நிறுத்த வேண்டும்” என்று தற்போதைய அரசை வலியுறுத்தியுள்ளார்.
மேலும் திமுக MP கனிமொழி “கன்னியாகுமரியில் அணுக்கனிம சுரங்கம் அமைப்பதற்கான நில ஒதுக்கீட்டு ஆணையை, அது காலாவதியாகும் கடைசி நாளன்று, ஓராண்டுக்கு நீட்டித்து தவெக அரசு அரசாணை வெளியிட்டிருப்பது ஏற்புடையதல்ல. அணுக்கனிமங்களை அகழ்ந்தெடுக்கும் சுரங்க திட்டத்தைக் கைவிட வேண்டும் என தங்கள் கட்சியின் செயற்குழுவில் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றிவிட்டு, இப்போது சுற்றுச்சூழலுக்கு மிகவும் ஆபத்தான ஒன்றிய அரசின் இத்திட்டத்திற்கு அனுமதி வழங்கும் வகையில் செயல்படும் இந்த தவெக அரசின் இரட்டை நிலைப்பாடு, தென்மாவட்ட மக்களுக்கு செய்யும் பெரும் துரோகமாகும்” என்று அணுக்கனிம சுரங்கம் அமைப்பதிற்கான கண்டனத்தை பதிவிட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தின் கிள்ளியூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அணுக்கனிம சுரங்கத் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என உள்ளூர் மக்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பல்வேறு சமூக செயல்பாட்டு அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஏற்கனவே மணவாளக்குறிச்சி பகுதியில் இயங்கும் இந்திய அருமணல் ஆலையால் கதிர்வீச்சு பாதிப்புகள் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், புதிய அணுக்கனிம சுரங்கம் அமைக்கப்பட்டால் புற்றுநோய் உள்ளிட்ட உடல் நலப் பாதிப்புகள் மேலும் அதிகரிக்கும் என்ற அச்சத்தை அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். இதனால், இத்திட்டத்தை மறுபரிசீலனை செய்து கைவிட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.