
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மகப்பேறு வார்டில் சிகிச்சைக்கு வந்த கோகிலா பிரியா என்ற கர்ப்பிணி பெண்ணிற்கு குழந்தை வயிற்றில் இருந்த குழந்தை இறந்த நிலையில் கடந்த 24 மணி நேரமாக இறந்த குழந்தையை அறுவை சிகிச்சை செய்து அகற்றாமல் மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் அலட்சியம் காரணமாக கர்ப்பிணி பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனை வளாகத்திலேயே காத்துக் கிடக்கும் அவலம்
சேலம் மாவட்டம் சங்ககிரி பகுதியைச் சேர்ந்தவர் ரகுபதி.இவர் அதே பகுதியை சேர்ந்த கோகுல பிரியா என்பவரை கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்த நிலையில் சேலத்திலிருந்து தூத்துக்குடிக்கு வந்து தனது மனைவியுடன் சிலுவைப்பட்டி பகுதியில் வீடு எடுத்து தனியாக குடும்பம் நடத்தி வருகிறார் .
இந்நிலையில் கோகுலப்பிரியா கர்ப்பமாகி உள்ளார். இதற்காக அருகே உள்ள மாப்பிள்ளையூரனி ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த சிகிச்சையில் குழந்தை மற்றும் தாய் ஆகியோர் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஸ்கேன் செய்த மருத்துவர்கள் குழந்தை எடை குறைவாக உள்ளது அரசு மருத்துவக் கல்லூரியின் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுங்கள் என்று கூறியுள்ளனர்.
இதைத்தொடர்ந்து ரகுபதி தனது மனைவி கோகுல பிரியாவை கடந்த இரண்டு வாரங்களாக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவர்களிடம் சிகிச்சைக்கு அழைத்து சென்றுள்ளார்.
இதைத்தொடர்ந்து செவ்வாய்க்கிழமை கோகுல பிரியாவிற்கு பிரசவத்திற்கான வலி வந்துள்ளது. உடனடியாக ரகுபதி மனைவி கோகுல பிரியாவை அருகே உள்ள மாப்பிள்ளையூரணி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தைக்கு இதயத்துடிப்பு குறைவாக உள்ளது. தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி உள்ளனர். இதை தொடர்ந்து ரகுபதி தனது மனைவி கோகுல பிரியாவை தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்துள்ளார்.
அங்கு மகப்பேறு பிரிவில் கோகுலப்பிரியாவை சோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை இறந்து விட்டதாக கூறியுள்ளனர். ஆனால் குழந்தை இறந்து விட்டதாக கூறிய மருத்துவர்கள் உடனடியாக மகப்பேறு மருத்துவப் பிரிவில் கோகுல பிரியாவை சிகிச்சைக்காக சேர்த்து உரிய சிகிச்சை அளிக்காமல் 24 மணி நேரமாக இறந்த குழந்தையை கோகுல பிரியாவின் வயிற்றிலிருந்து அகற்ற எந்தவித சிகிச்சையும் மேற்கொள்ளாமல் இருந்துள்ளனர். மேலும் மருத்துவமனை மகப்பேறு பிரிவில் அவரை அனுமதிக்காமல் மகப்பேறு பிரிவிற்கு வெளியே உள்ள பார்வையாளர்கள் பகுதியில் அமர வைத்துள்ளனர்
இதுகுறித்து ரகுபதி உள்ளிட்ட சிலர் மகப்பேறு பிரிவில் இருந்த மருத்துவர்களிடம் கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள் குழந்தை தானாக வெளியே வரும் என அலட்சியமாக பதில் கூறியுள்ளனர்.
இதைத்தொடர்ந்து இன்று இரவு மருத்துவரின் அலட்சியம் காரணமாக 24 மணி நேரமாக கர்ப்பிணி பெண்ணை இறந்த குழந்தையுடன் வைத்ததை தொடர்ந்து கர்ப்பிணி பெண்ணின் கணவர் ரகுபதி மற்றும் அவரது நண்பர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் கோகுலப்பிரியாவிற்கு மருத்துவ சிகிச்சை அளிக்காதது குறித்து மகப்பேறு மருத்துவரிடம் கேட்டுள்ளனர். அதற்கு உரிய பதிலும் மருத்துவர்கள் அளிக்காத சூழ்நிலை இருந்துள்ளது.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியின் மருத்துவமனையில் இறந்த குழந்தையுடன் உரிய சிகிச்சை அளிக்காமல் உயிருக்கு ஆபத்தான நிலையில் கர்ப்பிணி பெண்ணை அலைக்கழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பின்னர் காவல் துறையினர் மருத்துவ கல்லூரி மருத்துவரிடம் நெருக்கடி கொடுத்ததை தொடர்ந்து கோகுல பிரியாவை மகப்பேறு மருத்துவ பிரிவிற்கு உள்ளே அனுமதித்தனர்.
இது தொடர்பாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது இறந்த குழந்தையை உடனே வெளியே எடுக்க முடியாது அதற்காக மருந்துகள் வைக்கப்பட்டுள்ளது. அதற்குரிய வலி வந்த பின்பு தான் அந்த குழந்தையை எடுக்க முடியும் நாங்கள் உள்ளே கூப்பிட்டால் அவர்கள் உள்ளே வர மறுக்கிறார்கள் என தெரிவித்தனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்