“எம்.பி.க்கள் கூட்டத்திற்கு டிமிக்கி.. திமுகவின் புதிய நண்பர்கள் யார்?” – மாணிக்கம் தாகூர் சரமாரி கேள்வி

"ஊர் அறியாத எட்டப்பர்கள் இருக்கிறார்கள். அவர்களை விரைவில் காட்டுகிறோம்” என விமர்சித்தார்
Manickam Tagore
Published on
Updated on
2 min read

நேற்று தமிழக காங்கிரஸ் சார்பில் மக்களவைத் தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு எதிராக விழிப்புணர்வு பேரணியை சென்னை மேடவாக்கத்தில் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “தொகுதி மறுவரையறை பற்றி தெரியாதவர்கள் எம்பிக்கள் கூட்டம் நடத்துவதா என்று அகங்காரத்திலும் ஆணவத்திலும் சிலர் பேசியுள்ளனர். கடந்த ஏப்ரல் 17 இல் தோற்கடிக்கப்பட்ட தொகுதி மறுவரையறை சட்ட மசோதாவை மத்திய அரசு திரும்பக் கொண்டு வந்துள்ளது” என்று தெரிவித்தார்.

தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தியது வரவேற்கத்தக்கது என காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “நான் இதுவரை தமிழகத்தில் 5 முதலமைச்சர்களை பார்த்துள்ளேன். தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சி எம்.பி.க்களையும் எந்த ஒரு முதலமைச்சரும் அழைத்து பேசியது இல்லை. ஆனால், முதல் முறையாக தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் முதலமைச்சருமான விஜய் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சி எம்.பி.க்களை அழைத்து கூட்டம் நடத்தியுள்ளார்” என்றார்.

மேலும், “முதலமைச்சர் அழைத்த எம்.பி.க்கள் கூட்டத்திற்கு வராமல் டிமிக்கி கொடுத்துவிட்டு, அதனை கொச்சைப்படுத்திப் பேசும் இத்தகைய போக்குதான் தமிழகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். தமிழகத்திற்கு தேவையான நியாயமான விஷயத்திற்கு அனைவரும் சேர்ந்து பணியாற்ற வேண்டும். இதில் அரசியல் செய்யக்கூடாது” என்றும் தெரிவித்தார். தொகுதி மறுவரையறை விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு மாறவில்லை என்றும் மாணிக்கம் தாகூர் தெரிவித்தார். “தற்போதுள்ள 543 எம்.பி.க்கள் என்ற எண்ணிக்கை போதுமானது. இதில் ஒரு எம்.பி. எண்ணிக்கையைக் கூட கூட்டத் தேவையில்லை. தமிழகத்தில் 39 நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை உள்ளது. இதில் ஒரு எம்.பி. எண்ணிக்கையை கூட கூட்டவும் தேவையில்லை, குறைக்கவும் தேவையில்லை.

இதிலேயே பெண்களுக்கான இடஒதுக்கீட்டை கொண்டு வரலாம். அதனை நாங்கள் ஆதரிக்கிறோம். உதாரணத்திற்கு என்னுடைய தொகுதியான விருதுநகரை கூட பெண்களுக்காக இடஒதுக்கீடு செய்தால் நான் வரவேற்கிறேன். தற்போது உள்ள நாடாளுமன்ற எம்.பி.க்களின் எண்ணிக்கையை 50 சதவீதமாக உயர்த்துவது என்பது ஏமாற்று வேலை” எனக் கூறினார். மேலும், “இதுவரை தமிழ்நாட்டிற்கு மோடி fair-ஆக எதுவும் செய்ததில்லை; unfair-ஆகத்தான் செயல்பட்டு வருகிறார். தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி எங்களுடைய நிலைப்பாட்டில் இருந்து எந்த மாற்றமும் செய்யவில்லை. முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்டோம். அப்போது கர்நாடகா, கேரளா, தெலுங்கானா மாநில முதலமைச்சர்களும் கலந்து கொண்டார்கள். அப்போது எடுத்த அதே நிலைப்பாட்டில்தான் தற்போது இருக்கிறோம்” என்றார்.

தொகுதி மறுவரையறை கூடாது என்பதில் காங்கிரஸ் கட்சி உறுதியாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். “தற்போது யார் பேச்சை மாற்றிப் பேசுகிறார்கள் என்பதுதான் இங்கு பார்க்க வேண்டும்” என்றும் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் மத்திய அரசு சட்டங்களை கடைசி நேரத்தில் கொண்டு வருவதாக குற்றம்சாட்டிய மாணிக்கம் தாகூர், “கடைசி மூன்று நாட்களில் நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதா கொண்டு வரவும் என்று மத்திய அமைச்சர் ராகுல் காந்தியிடம் கூறியுள்ளார். எனவே, அதனைத் தோற்கடிக்க வேண்டும் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு” என்றார்.

தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிப்பவர்களை கடுமையாக விமர்சித்த அவர், “தமிழகத்திற்கு கிடைக்கக்கூடிய நியாயமான உரிமை, அதிகாரம் பறிபோய்விடும் என்பது தெரிந்தும் தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிப்பதால் அவர்கள் எட்டப்பர்கள்” எனக் கூறினார். மேலும், “மோடி என்ன சொல்கிறாரோ அதனை அப்படியே கேட்பதாக அதிமுகவும் பாமகவும் அறிவித்துவிட்டார்கள். எனவே, அவர்கள் நவீன எட்டப்பர்கள். ஊர் அறிந்த எட்டப்பர்கள், ஊர் அறியாத எட்டப்பர்கள் இருக்கிறார்கள். அவர்களை விரைவில் காட்டுகிறோம்” என விமர்சித்தார்.

தமிழக முதலமைச்சர் விஜய், காங்கிரஸ் கட்சியின் அழுத்தத்தின் காரணமாக எம்.பி.க்கள் கூட்டத்தை கூட்டியதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியிருப்பது குறித்தும் மாணிக்கம் தாகூர் பதிலளித்தார். “காங்கிரஸ் கட்சி அழுத்தம் கொடுத்ததால் முதலமைச்சர் விஜய் எம்.பி.க்கள் கூட்டத்தை கூட்டுவதாக அன்புமணி பேசியுள்ளார். நாங்கள் அழுத்தம் கொடுக்கவில்லை. மோடி, அமித்ஷா கொடுத்த அழுத்தத்தின் காரணமாக அன்புமணி பேசி வருகிறார். தமிழக முதலமைச்சர் விஜய் யாருடைய அழுத்தத்திற்கும் தலைகுனிபவர் அல்ல. அவரை என்னென்னவெல்லாம் செய்து பார்த்தார்கள். தனி ஆளாக நின்று எதிர்த்து வந்துள்ளார். எனவே, அழுத்தம் கொடுப்பதெல்லாம் அன்புமணிக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும்தான் பொருந்தும்” என மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.

திமுக முன்னாள் எம்.பி. கனிமொழி சோமு, “அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை” என்று கூறியிருப்பது குறித்தும் மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பினார். “அவர்கள் யாருடன் நட்பு வைக்கப் போகிறார்கள்? திமுகவின் புதிய நண்பர்கள் யார் என்பதனை தெரியப்படுத்த வேண்டும்” என்றார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com