

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே தம்மத்துக்கோணம் பகுதியில் உள்ள விஐபி கார்டனில் வசித்து வருகின்றனர் வினோத்குமார் - மதுமிதா தம்பதி.
இந்த விஐபி கார்டனில் பல்வேறு தரப்பினரும் புதுமனை வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் தனியார் காவலர்கள் கண்காணித்து வருகின்றனர்.
கடந்த 25-ஆம் தேதி, பிரபல யூடியூப் கிரியேட்டர்களான இந்தத் தம்பதியின் வீட்டில் 118 சவரன் தங்க நகைகள் மற்றும் ரொக்கப் பணத்தை மர்மக் கும்பல் கொள்ளையடித்துச் சென்றது. இதுகுறித்து ராஜாக்கமங்கலம் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.
தற்போது கொள்ளையடிக்கப்பட்ட ரூ.1 கோடி மதிப்புள்ள தங்க நகைகள், வைர நகைகள் மற்றும் பணம் மீட்கப்பட்டுள்ளது.
இந்தக் கொள்ளையை நிகழ்த்திய தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த இசக்கி பாண்டி (30) மற்றும் அவருக்கு உடந்தையாகச் செயல்பட்ட அவரது நண்பர்களான முருகன், முருகேசன் ஆகிய மூன்று பேரையும் தனிப்படை காவலர்கள் கைது செய்துள்ளனர்.
மூன்று பேரையும் ராஜாக்கமங்கலம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது. முதல்கட்ட விசாரணையில், மதுமிதாவின் இன்ஸ்டாகிராம் வீடியோவைப் பார்த்துத்தான் கொள்ளையடிக்க வந்ததாக இசக்கி பாண்டி வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்த வழக்கில் கொள்ளையர்களைக் கண்டுபிடிக்க காவல்துறையினர் 600-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கொள்ளைக்கு மதுமிதாவின் யூடியூப் நடவடிக்கைகள் முக்கிய காரணமாகக் கூறப்படுகின்றன. இந்த யூடியூப் தம்பதியினர் தங்களது யூடியூப் பக்கத்தில் அதிக அளவிலான நகைகள் மற்றும் கட்டுக்கட்டாகப் பணத்துடன் இருக்கும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நகைக்கடைக்குச் செல்வது, நகை வாங்குவது போன்றவற்றை விலாக் (Vlog) செய்து பதிவிட்டு வந்தனர். அதில் எங்கு செல்கிறார்கள், எவ்வளவு நகை வாங்குகிறார்கள், காரின் மதிப்பு என்ன, வங்கிக் கணக்கில் உள்ள பணத்தின் மதிப்பு உள்ளிட்ட விவரங்கள் குறித்தெல்லாம் பேசுவதை மதுமிதா வழக்கமாகக் கொண்டிருந்தார்.
பலரும் எச்சரித்தும் இந்தப் பழக்கத்தை மாற்றிக்கொள்ளாத நிலையில், கொள்ளைச் சம்பவம் நடைபெற்றுள்ளது. அதிர்ஷ்டவசமாக, கொள்ளையர்களை காவல்துறையினர் பிடித்துள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்