தவெக சார்பில் இன்று 23 அமைச்சர்கள் பதவியேற்றனர். இதில் காங்கிரஸ் கட்சிக்கு 2 இடங்கள் ஒதுக்கப்பட்டன. ஏற்கனவே 9 அமைச்சர்கள் பட்டியல் வெளியான நிலையில் தற்போது 23 அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர். மேலும், இந்த அமைச்சரவையில் 4 பெண்கள் மற்றும் 7 தலித்துகள் இடம்பெற்றுள்ளது வரவேற்பை பெற்றது. மேலும், தவெக 'ஐயூஎம்எல்' மற்றும் 'விசிக' கட்சியினர் அமைச்சரவையில் பங்கேற்க விரும்புவதாக நேற்று (மே 20) செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார். இதனையடுத்து பத்திரிகையாளர்களை சந்தித்த திருமாவளவன் 'ஆலோசித்து முடிவெடுப்பதாக' கூறினார். இந்நிலையில், விசிக சார்பில் இருந்து வன்னி அரசு அமைச்சரவையில் இடம்பிடிப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இன்று காலை தவெக அமைச்சர்கள் பதவி ஏற்ற நிலையில் 2 அமைச்சர் பதவி இடங்கள் காலியாக விடப்பட்டுள்ளது. இது விசிக மற்றும் ஐயூஎம்எல் கட்சிகளுக்கு உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஐயூஎம்எல் கட்சியினர் அமைச்சரவையில் இடம்பெறுவதாக கூறியுள்ளனர். மேலும் இவர்களை தொடர்ந்து விசிக தனது அறிவிப்பை தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தவெக-வின் அமைச்சரவையில் வெளிநாடுவாழ் தமிழர் நலன் என்ற அமைச்சரவை இடப்பெற்றுள்ளது. அரசு ஆணை எண்.1141, பொது (ம.வா-1) துறை, நாள் 13.12.2010, படி சென்னையில் உள்ள மறுவாழ்வுத் துறை ஆணையரகத்தில் வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன்காக்க தனியாக ஒரு பிரிவு ஏற்படுத்தப்பட்டு இந்த ஆணையரகத்தின் பெயர் "அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையரகம்" என பெயர் மாற்றம் செய்யப்பட்டு 18.12.2021 முதல் இயங்கி வருகிறது. தற்போது தென்னரசு, வெளிநாடுவாழ் தமிழர் நலன் என்ற துறைக்கு அமைச்சராக பதவியேற்றுள்ளார். ஸ்ரீபெரும்புதூர் தொகுதியின் தவெக சட்டமன்ற உறுப்பினரான கே. தென்னரசு, தமிழக அமைச்சரவையில் புதிய அமைச்சராக பதவியேற்றுள்ளார். இவர் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் கே. செல்வப்பெருந்தகையை வீழ்த்தி பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
புலம்பெயர்ந்த தமிழர்கள் நலனுக்காக தமிழக அரசின் சார்பில், மறுவாழ்வு மற்றும் தமிழகத்துக்கு வெளியில் வாழும் தமிழர் ஆணையரகம்’ என்ற இணையதளம் 2021ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த இணையதளத்தை முன்னாள் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தார். முன்னதாக தமிழக பால்வளத்துறை அமைச்சராக இருந்த சா. மு. நாசர் பின்னர், தமிழ்நாடு சிறுபான்மையினர் நலன் மற்றும் அயலகத் தமிழர் நலத்துறை அமைச்சராகப் பதவியேற்றுச் செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக அயலகத் தமிழர் நலன் துறை, வெளிநாடுகளிலும் இந்தியாவின் பிற மாநிலங்களிலும் வாழும் தமிழர்களின் நலனைப் பாதுகாக்கிறது. இதன் முக்கிய பணி, அவர்களுக்கு சட்ட உதவி, அடையாள பதிவு, நலத்திட்ட இணைப்பு, மற்றும் அவசர உதவி வழங்குவதாகும்.
மேலும், அயலகத் தமிழர் நல வாரியத்தில் பதிவு செய்தவர்களுக்கு நலத்திட்டங்கள், அடையாள அட்டை, மருத்துவ காப்பீடு, விபத்து/ஆயுள் காப்பீடு போன்ற வசதிகள் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெளிநாட்டில் சிக்கலில் உள்ள தமிழர்களுக்கு உதவி பெற 24x7 உதவி எண், இணையதளம், மின்னஞ்சல் ஆகியவை ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன. வெளிநாடுவாழ் தமிழர் நலன் என்பது, வெளிநாடுகளிலும் இந்தியாவின் பிற மாநிலங்களிலும் வாழும் தமிழர்களின் பாதுகாப்பு, நலன், உதவி, இணைப்பு ஆகியவற்றை கவனித்து அவர்களுக்கு உதவிகள் வழங்குவதே இதன் பிரதான நோக்கமாகும். தற்போது, வெளிநாடுவாழ் தமிழர் நலன் துறையின் அமைச்சராக உள்ள தென்னரசு இதை திறம்பட செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.