தென்மேற்கு பருவ மழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது என நீலகிரி எம்.பி ஆ. ராசா தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் அதனை எதிர் கொள்வது குறித்த அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் உதகை பிங்கர் போஸ்ட் பகுதியில், கூடுதல் மாவட்ட ஆட்சியர் அரங்கில் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் தலைமையில், மாவட்ட ஆட்சியர் எஸ்.பி அம்ரித் முன்னிலையில் நடைப்பெற்றது.
இதனை தொடர்ந்து பேசிய நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர், நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையை எதிர்க்கொள்ள அனைத்து துறைகளுடன் மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளதாகவும், நீலகிரி மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகள் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டடு 80% முதல் 90% பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் மீதமுள்ள 10% பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டதாக கூறினார்.
மேலும் மழைக்காலங்களில் பொதுமக்கள் பேருந்துகளில் பயணிக்க முடியாமல் சிரமத்திற்கு ஆளாகி வருவதை தொடர்ந்து 14 புதிய பேருந்துகள் இயக்கவும், 50 பழைய பேருந்துகளில் மேற்கூரை சீரமைக்கும் பணிகள் நடைப்பெறவுள்ளதாகவும் கூறினார்.
மேலும் மத்திய அரசு பசுமை வீடுகள் கட்டும் பணிக்காக வழங்கப்படும் 2 லட்சத்து 10 ஆயிரம் நிதி வழங்கப்பட்டு வருவதாகவும், மற்ற மாவட்டங்களை காட்டிலும் மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்திற்கு கட்டுமான செலவுகள் அதிகம் என்பதால் நீலகிரி மாவட்டத்திற்கு 10% முதல் 20% வரை நிதியை உயர்த்தி தர வேண்டும் என தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.