

நேற்றைய தினம் இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) வெளியிட்டுள்ள வானிலை முன்னெச்சரிக்கையின்படி, இன்று (நவ.25) கேரளா, மாஹே, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஆங்காங்கே கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது .
பல தென்னிந்திய மாநிலங்கள் மற்றும் லட்சத்தீவு முழுவதும் இடியுடன் கூடிய மின்னல் மற்றும் பலத்த காற்று வீச அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மின்னல் மற்றும் மணிக்கு 40-50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீச அதிக வாய்ப்புள்ளது.
குமரிக்கடலில் இருந்து உள் தமிழகத்தின் வழியாக ராயலசீமா வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதுதவிர, தெற்கு கேரளம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது என ஏற்கெனவே கூறப்பட்டிருந்தது.
சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பதன்படி இன்று (நவ.25), நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் காரைக்கால் பகுதியிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்