``சமூக நல்லிணக்கத்தை காத்த முதல்வர்.." விஜய்க்கு குவியும் பாராட்டுக்கள்.. ஆதரவு கட்சிகள் கொண்டாட்டம்!

திருப்பரங்குன்றத்தில் பாஜக மற்றும் இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட முனைந்தனர். மேலும் வருகின்ற நாட்களில் நீதிமன்ற அவமதிப்புக்கும் பதில் சொல்ல வேண்டும் அரசு.
"CM Who Protected Social Harmony" — Praise Pours in for Vijay; Allied Parties Celebrate!
``சமூக நல்லிணக்கத்தை காத்த முதல்வர்.." விஜய்க்கு குவியும் பாராட்டுக்கள்.. ஆதரவு கட்சிகள் கொண்டாட்டம்!
Published on: 
Updated on: 
2 min read

உச்ச நீதிமன்றம் இடைக்காலமாக ஒருமுறை மட்டும் மலை உச்சியில் உள்ள கல்லில் தீபம் ஏற்ற உத்தரவிட்டாலும், உச்சியில் இருப்பது சர்வே கல் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது தமிழக அரசு. அதனால் பாரம்பரிய முறைப்படி உச்சிப்பிள்ளையார் கோவிலில் உள்ள தீபத்தூணிலேயே தீபம் ஏற்றப்பட்டுள்ளது.

இதற்காக எத்தனையோ விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது தமிழக வெற்றிக் கழகம் அரசு. குறிப்பாக திருப்பரங்குன்றத்தில் பாஜக மற்றும் இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட முனைந்தனர். மேலும் வருகின்ற நாட்களில் நீதிமன்ற அவமதிப்புக்கும் பதில் சொல்ல வேண்டும் அரசு.

எனினும் தமிழக வெற்றிக் கழக அரசின் இந்த செயல்பாட்டுக்கு பல தரப்பினரும் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

ஆதரவு கட்சியான சி.பி.ஐ (எம்) வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருப்பரங்குன்றத்தில் காலம் காலமாக ஏற்றப்பட்டு வந்த உச்சிப்பிள்ளையார் கோவில் அருகில் உள்ள கல்தூண் மண்டபத்தில் திருக்கார்த்திகை தீபம் இந்த ஆண்டும் வழமைபோல் ஏற்றப்பட்டதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது. உண்மையான பக்தர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலும், மரபுகளையும், பாரம்பரியத்தையும் பின்பற்றும் வகையிலும், பல்வேறு முனைகளிலிருந்து கொடுக்கப்பட்ட கடும் அழுத்தங்களுக்கும் நிர்ப்பந்தங்களுக்கும் அடிபணியாமல் மதநல்லிணக்கம், மக்கள் ஒற்றுமையை பாதுகாக்கும் வகையில் த.வெ.க அரசு எடுத்த உறுதியான நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டுகிறது.

சங்பரிவாரத்தின் ஆத்திரமூட்டலுக்கும் திசைதிருப்பல்களுக்கும் இரையாகாமல் வழக்கம்போல் மக்கள் திருக்கார்த்திகை விழாவை கொண்டாடியுள்ளனர். கடந்த ஆண்டு திருக்கார்த்திகை விழாவின் போது தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்திய உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் இந்த ஆண்டும் அதேபாணியில் தேவையில்லாமல் இப்பிரச்சனையில் தலையிட்டது எந்த வகையிலும் ஏற்கத்தக்கதல்ல என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது. இது வரம்புமீறி உள்நோக்கத்துடன் செயல்படும் அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகமாகும்.

மதவெறி சக்திகளின் சதி செயல்களுக்கு தமிழ்நாட்டில் இடமில்லை என்பது மீண்டும் ஒருமுறை அழுத்தமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது." எனக் கூறியுள்ளனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், "சங்பரிவார்களின் சதிமுயற்சியை முறியடித்து தமிழ்நாட்டில் சமூகநல்லிணக்கத்தைப் பாதுகாத்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு எமது நெஞ்சார்ந்த பாராட்டுகள்.

எத்தனை நெருக்கடிகளைத் தாண்டி இதனை சாதித்திருக்கமுடியும் என்பதை சங்பரிவார்களின் 'வலைபின்னல் அரசியல்' வலிமையை அறிந்தவர்களால் உணரமுடியும்.

ஆட்சிக்கு எத்தகைய நெருக்கடி வந்தாலும், தமிழர் மரபையும் சமூகநல்லிணக்கத்தையும் பாதுகாப்பதில் உறுதியோடு செயலாற்றியுள்ள தவெக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உளமார்ந்த பாராட்டுகள்." எனக் கூறியுள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர், "வகுப்புவாத சக்திகளின் சதிகளை முறியடித்து, எவ்வித சட்டம்-ஒழுங்கு பிரச்சினையுமின்றி அமைதியையும் மதநல்லிணக்கத்தையும் பாதுகாத்த தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழக அரசிற்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மனதார வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது!

உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவைக் காரணம் காட்டி, பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளின் பின்புலத்தோடு இவ்விவகாரத்தில் தேவையற்ற பதற்றத்தை உருவாக்க பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இத்தகைய கடுமையான சூழலும் அழுத்தமும் வேறு எந்த மாநிலத்தில் ஏற்பட்டிருந்தாலும், அதனைத் தாக்குப்பிடிப்பது என்பது இயலாத காரியமாக இருந்திருக்கும். ஆனால், மதச்சார்பின்மை என்ற கொள்கையில் தமிழ்நாட்டு மக்கள் துளியும் பின்வாங்காமல் உறுதியாக நின்றார்கள்..

அதேபோல், எவ்வித அழுத்தங்களுக்கும், தூண்டுதல்களுக்கும் அடிபணியாமல், எவ்வித சட்டம்-ஒழுங்கு பிரச்சினைக்கும் இடமளிக்காமல், முழுமையான அமைதியை நிலைநாட்டி, மக்களின் ஒற்றுமையையும் மதநல்லிணக்கத்தையும் பாதுகாத்த முதலமைச்சர் விஜய் அவர்கள் தலைமையிலான மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி அரசின் உறுதியான நடவடிக்கைகளைத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மனதார வரவேற்கிறது..

சமூகநீதியையும் மதச்சார்பின்மையையும் காக்க தமிழக அரசு எடுத்து வரும் அனைத்து ஆக்கப்பூர்வமான முயற்சிகளுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி என்றும் துணை நிற்கும்." என எழுதியிருக்கிறார்.

சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, "திருப்பரங்குன்றத்தை முன்வைத்து பதற்றத்தையும் வன்முறையையும் கட்டவிழ்த்து விட முயன்ற சங் பரிவாரக்கும்பலை கடந்த ஆண்டை விட கடந்த அரசை விட மிக சிறப்பாக கையாண்டுள்ளது #தவெக அரசு. மதச்சார்பின்மையை- இந்துக்களின் உணர்வை நிலை நிறுத்தியுள்ளது. முதல்வர் விஜய் அவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும். உறுதுணையாக இருந்து நீதியை நிலைநாட்டிய மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் அவர்களுக்கும் பாராட்டுகள்." எனக் கூறியுள்ளார்.

"CM Who Protected Social Harmony" — Praise Pours in for Vijay; Allied Parties Celebrate!
``அப்படி எந்த செயலும் நடக்கவில்லை" - MLA அருள் விக்னேஷை காப்பாற்றினார்களா அமைச்சர்கள்? - இதுவரை பேசியது என்ன?

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்