

பாமக செயல் தலைவர் ஜி.கே. மணியை துரோகி என்று அன்புமணி கூறியிருந்த நிலையில், அதற்கு ஜி.கே. மணி இன்று கடுமையான பதிலடி கொடுத்திருக்கிறார். இராமதாஸ் தனது குடும்பத்தில் இருப்பவர்கள் எவரும் அரசுப் பதவிக்கு வர மாட்டார்கள் என்று பொதுவெளியில் உறுதியாக அறிவித்திருந்த ஒரு காலகட்டத்தில், மகனை மத்திய அமைச்சராக்கச் சொல்லி இராமதாஸை வற்புறுத்தியவர் நான்தான் என்றும், ஆனால் இன்று அன்புமணி தன்னைத் 'துரோகி' என்று கூறுவது மிகுந்த வேதனையை அளிக்கிறது என்றும் ஜி.கே. மணி கூறியுள்ளார்.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தமது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பா.ம.க.வின் செயல் தலைவரான ஜி.கே. மணி, குடும்பப் பூசலின் பின்னணியை விளக்கிப் பேசினார். இராமதாஸ் அவர்கள், "எங்கள் குடும்பத்தினர் யாரும் ஆட்சி அதிகாரப் பதவிக்குப் போக மாட்டோம்" என்று உறுதியெடுத்திருந்த சமயத்தில், மத்திய அமைச்சராகும் வாய்ப்பு அன்புமணிக்கு வந்தது. அப்போது அன்புமணி என்னிடம் வந்து, இராமதாஸிடம் பேசி, தாம் மத்திய அமைச்சர் பதவிக்கு வருவதற்கான அனுமதியைப் பெற்றுத் தருமாறு கேட்டார். அதை ஏற்றுக்கொண்டு நான் இராமதாஸ் ஐயாவிடம் பேசியபோது, அவர் மிகவும் கோபமடைந்தார். தான் எடுத்த சத்தியத்தை மீறுவதா என்று கேட்டு, "கட்சியின் தலைவர் என்ற திமிரில் என்னுடன் பேசுகிறாயா?" என்று கடுமையாகச் சாடினார்.
அதன் பிறகு, கட்சியின் முக்கியத் தலைவராக இருந்த காடுவெட்டி குருவை அழைத்துச் சென்று, மீண்டும் இருவருமாகச் சேர்ந்து இராமதாஸ் ஐயாவிடம் பேசினோம். கட்சி நலன் கருதி, தங்கள் மகனையாவது அமைச்சராக்குங்கள் என்று வற்புறுத்திய பின்னரே, இராமதாஸ் ஐயா அதற்கு மனமின்றி ஒப்புக்கொண்டார். இப்படி, அன்புமணி மத்திய அமைச்சராவதற்கு அரும்பாடு பட்டு, இராமதாஸ் ஐயாவிடம் சண்டையிட்டு அனுமதி வாங்கிய என்னை, அன்புமணி இவ்வளவு நாட்களுக்குப் பிறகு 'துரோகி' என்று கூறுவது எந்த வகையிலும் நியாயம் இல்லை. மேலும், கட்சியுடன் கூட்டணி பேசுவது முதல் அனைத்துப் பேச்சுவார்த்தைகளையும் நான்தான் இராமதாஸ் ஐயா சார்பில் முன்னெடுத்து நடத்துகிறேன் என்றும் ஜி.கே. மணி கூறினார்.
மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு ஒருமுறை இராமதாஸ் ஐயா, நான் தான் செல்ல வேண்டும் என்று கூறினார். அப்போதும், அந்தப் பதவியை அன்புமணியே ஏற்க வேண்டும் என்று நான் பரிந்துரைத்தேன். அதன்படியே, அன்புமணி இராமதாஸ் மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்றார். இத்தனை உதவிகளையும் செய்த என்னை, "துரோகி, என் அப்பாவையும், என்னையும் பிரித்துவிட்டார்" என்று கூறுவது நகைப்புக்குரியது. ஓர் அப்பாவையும் மகனையும் யாராலும் பிரிக்க முடியுமா? இராமதாஸ் ஐயாவிடம், "அன்புமணியைச் சந்திக்காதீர்கள்" என்று சொன்னால் அவர் கேட்பாரா? அதேபோல, அன்புமணி இராமதாஸிடம், "உங்கள் அப்பாவைப் பார்க்காதீர்கள்" என்று சொன்னால் அவர் தான் கேட்பாரா? இது முற்றிலும் வேடிக்கையான குற்றச்சாட்டு என்று அவர் சிரித்துக் கொண்டே பதிலடி கொடுத்தார்.
மேலும், அன்புமணி கட்சி நிர்வாகிகளைச் சந்திப்பதில்லை என்று கட்சியினர் இராமதாஸ் ஐயாவிடம் வந்து குறை கூறுவதாகவும் அவர் குறிப்பிட்டார். பா.ம.க. தனித்துப் போட்டியிட்டபோது, அன்புமணி இராமதாஸைத்தான் முதலமைச்சர் வேட்பாளராக இராமதாஸ் ஐயா அறிவித்தார். இப்படி, அன்புமணியின் அரசியல் எதிர்காலத்திற்காக நான் எப்போதும் உழைத்திருக்கிறேன். அவருக்கு எந்தத் தீங்கும் இழைக்கவில்லை. இப்போது இராமதாஸ் ஐயாவுடன் நான் இருப்பதால் தான், அன்புமணி என்னை வசைபாடுகிறார் என்றும் அவர் குற்றம் சாட்டினார். இராமதாஸ் ஐயாவும், அன்புமணியும் உட்கார்ந்து பேசினால் தான் தற்போது கட்சிக்குள் நிலவும் இந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு கிடைக்கும். வீட்டுக்குள் பேசித் தீர்க்க வேண்டிய இந்தப் பிரச்சினையை, பொதுவெளியில் பேசியதால் தான் விவகாரம் பெரிதாகிவிட்டது என்றும் ஜி.கே. மணி தனது பேட்டியில் அழுத்தமாகக் குறிப்பிட்டார். பிளவுபட்டு இருக்கும்போது, வரவிருக்கும் தேர்தல்களை எப்படிச் சந்திக்க முடியும் என்ற கேள்வியையும் அவர் எழுப்பினார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.