
அதிமுக எப்போது எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டுக்குள் சென்றதோ அப்போதிலிருந்து ஓபிஎஸ் தனது மவுசை இழந்துவிட்டார் என்றே சொல்ல வேண்டும். கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் தனது ஆதரவாளர்களை திரட்டி "அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு" என்ற பெயரில் தனிக்குழு அமைத்து செயல்பட்டு வருகிறார் ஓபிஎஸ்.
அதிமுகவில் இருந்தாலும் கடந்த பல ஆண்டுகளாக பாஜகவுடன் ஓ.பன்னீர்செல்வம் மிகவும் நெருக்கம் காட்டி வந்தார். தனது அரசியல் பிதாமகராகவே பிரதமர் மோடியை நினைத்துக்கொண்டார். அதாவது பிரதமர் கூறியதால்தான் துணை முதல்வர் பொறுப்பை ஏற்றேன் என்று சொல்லும் அளவுக்கு மோடிக்கும் அவருக்கும் நெருக்கம் இருந்தது. இதனிடையே எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச் செயலாளராக பொறுப்பு வகிக்க எதிர்ப்பு தெரிவித்ததால் 2022ஆம் ஆண்டு கட்சியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் அதிரடியாக நீக்கப்பட்டார். இதற்கு எதிராகவும், அதிமுக உள்விவகாரங்கள் குறித்தும் ஓபிஎஸ் தொடர்ந்த வழக்குகள் இன்னும் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில்தான் இருக்கிறது. அரசியல் ரீதியான பிரச்சனையை அரசியல் ரீதியாக தீர்க்காமல் சட்ட போராட்டத்தில் ஈடுபட்டது பன்னீர் செல்வத்துக்கு பொருளாதார ரீதியான நஷ்டத்தை ஏற்படுத்தியது நாடறிந்த உண்மை.
இதனையடுத்து பாஜக மீதான தனது அதிருப்திகளை ஓபிஎஸ் அவ்வப்போது வெளிப்படுத்தி வந்தார். குறிப்பாக அமித்ஷா சென்னை வந்தபோது தன்னை சந்திக்காதது வருத்தம் அளிப்பதாக வெளிப்படையாகவே பேசியிருந்தார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் இதுவரை நீடிக்கிறோம் என்றெல்லாம் சொன்னார். ஆனாலும், ஓபிஎஸ்ஸை கூட்டணியில் ஏற்க எடப்பாடி பழனிசாமி பிடிவாதமாய் மறுத்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில்தான் சமீபத்தில் பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்துவதற்கு பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்தார். அப்போது பிரதமர் மோடியை சந்திக்க விருப்பம் தெரிவித்து ஓபிஎஸ் வெளிப்படையாகவே கடிதம் அனுப்பினார். ஆனால் அவரை சந்திக்க பிரதமர் அலுவலகம் அனுமதி அளிக்கவில்லை. தர்மயுத்த காலகட்டத்தில் ஓபிஎஸ் - ஐ எப்போது வேண்டுமானாலும் பார்க்க தயாராக இருந்த பிரதமர், விமான நிலையத்தில் கூட அவரை பார்க்க விருப்பம் காட்டவில்லை. இதனால் ஓபிஎஸ் தரப்பு கடும் அதிருப்திக்கு உள்ளானது.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு பன்னீர் செல்வத்தின் முக்கிய ஆதரவாளர்களின் ஒருவரான பண்ருட்டி ராமச்சந்திரன் “பாஜக ஒரு மதவாதக் கட்சி, தமிழகத்தில் பாஜக உடன் கூட்டணி வைக்கும் எந்த கட்சியும் சீரழிந்துதான் போகும். வருகிற 2026 தேர்தல் திமுக -தவெக -வுக்கான போட்டியாக அமையப்போகிறது.. விஜய் ஓபிஎஸ் உடன் கரம் கோர்த்தால் தமிழகத்தின் மிகப்பெரும் மாற்றம் நடக்கும் என்றெல்லாம் பேசியிருந்தார். பாஜக -வை தீவிரமாக ஆதரித்து வந்த ஓபிஎஸ் தரப்பு திடீரென பாஜக எதிர்ப்பை நிலைநாட்டியதன் காரணம், NDA கூட்டணியில் இருந்து அவர் விலக்கப்பட்டதால் தான் என பேசப்பட்டது. அதனை உறுதி செய்யும் விதமாக, தற்போது, பாஜக கூட்டணியிலிருந்து ஓபிஎஸ் தலைமையிலான அணி விலகுவதாக முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் 2 நாட்களுக்கு முன்பு தெரிவித்துள்ளார்.
கூட்டணியில் விலகிய அன்றே முதல்வர் ஸ்டாலினை அடையாற்றில் உள்ள முதல்வர் இல்லத்திலேயே சென்று சந்தித்தார். 30 நிமிடங்கள் நீடித்த அந்த சந்திப்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும், ஓபிஎஸ் -ன் மகன் ரவீந்திரனும் உடன் இருந்தனர், சந்திப்பு முடித்து வெளியே வந்த ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது,
“அரசியலில் நிரந்தர எதிரிகள் கிடையாது. அதற்க்கு வரலாறே சான்று, தேர்தல் நெருங்கும் நேரத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம், கூட்டணியில் இருந்து விலகியத்திலிருந்து தற்போது வரை பாஜக -விடமிருந்து எனக்கு எந்த அழைப்பும் வரவில்லை. எனக்கு சுயமரியாதை உண்டு. நான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நேரடி பார்வையில் 25 ஆண்டுகாலம் பணியாற்றியிருக்கிறேன். மும்மொழி கொள்கையை ஏற்காததால் கல்வி நிதியை நிறுத்தி வைப்பதாக ஒன்றிய அரசு கூறியிருப்பது ஏற்புடையது அல்ல" என பேசியுள்ளார். ஓபிஎஸ் -ன் இந்த அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து பெரும் கேள்விகள் எழுந்துள்ளன. இந்நிலையில் ஓபிஎஸ் இந்த திடீர் பாஜக எதிர்ப்பு குறித்தும் அவரின் எதிர்கால நகர்வுகள் குறித்தும் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் பேட்டி அளித்திருந்தார், “அவர் பேசுகையில் “ஓபிஎஸ் எடுத்த முடிவு எல்லா மனிதரும் தனக்கு நெருக்கடி ஏற்படும்போது செய்யக்கூடிய செயல்தான், சட்டி சுட்டதடா.. கைவிட்டதடா என்ற நிலைதான் ஓபிஎஸ் க்கும் ஏற்பட்டுள்ளது. அதனால் அவர் சென்றுவிட்டார்” தொடர்ந்து திமுக -ஓபிஎஸ் -ஐ வரவேற்குமா? என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது. “ஓபிஎஸ் திமுக -உடன் இணைந்தால் அது திமுக -விற்கு லாபம்தான். ஏனெனில் முக்குலத்தோரின் வாக்கு அதிமுக -விற்கு உண்டு. ஓபிஎஸ் கணிசமான தேவர் சமூக மக்களின் வாக்குகளை பெறக்கூடியவர். எனவே திமுக ஓபிஎஸ் -ஐ ஒரு துருப்பு சீட்டாக பயன்படுத்தலாம். கட்சியில் சேர்ப்பார்களா என்பது தெரியவில்லை. ஆதரவு தாருங்கள் என்று சொல்ல வாய்ப்புண்டு. பலர் நினைத்துக்கொள்கிறார்கள் அன்வர் ராஜாவை போல ஓபிஎஸ் கரை வேட்டியை மாற்றிக் கட்டிக்கொண்டு திமுக -விற்கு சென்றுவிடுவார் என்று.. ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லை. ஓபிஎஸ் ஆதரவு நிலைப்பாட்டை திமுக -வுக்கு தருவார். ஆனால் இபிஎஸ் ஒருவேளை இந்த தேர்தலில் தோற்றுவிட்டால் அவருக்கு இதுதான் கடைசி தேர்தல். ஏனெனில் அதிமுக -விற்கு இதுதான் வாழ்வா சாவா என்ற தேர்தல், ஆனால் அவர்கள் ஜெயிப்பதர்கான சாத்திய கூறுகள் குறைவு. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என பேசியுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.