12 மணி நேரம் வேலை செய்வதற்கு, மனிதர்கள் ஒன்றும் இயந்திரம் இல்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
இயந்திரம் அல்ல:
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, சுவிட்ச் போட்டால் இயங்குவது போன்றது அல்ல மனித வாழ்க்கை என்றும், 12 மணி நேரம் வேலை செய்வதற்கு, மனிதர்கள் ஒன்றும் இயந்திரம் இல்லை எனவும் கூறியுள்ளார்.
சர்ச்சை ஆடியோ:
நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் டெல்லி செய்தியாளர்களிடம் பேசிய ஆடியோவில், தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற ஓராண்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன் ஆகியோர் இணைந்து 30 ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதித்துள்ளனர் என்று பேசியிருந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இதுதொடர்பாக பேசிய எடப்பாடி பழனிசாமி, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோ விவகாரம் குறித்து குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளதாக கூறினார்.
கர்நாடகா போட்டி:
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் மே 10-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருதரப்பும் போட்டியிடுகின்றன. ஆனால், இரட்டை இலை சின்னம் பெறுவதில் இரு தரப்புக்கும் போட்டி இருந்து வந்த நிலையில், தேர்தல் ஆணையம் இபிஎஸ் தரப்பை அங்கீகரித்துள்ளது. எனவே, தங்களுக்கு அளிக்கப்பட்ட அங்கீகாரத்தை ஓபிஎஸ் பயன்படுத்த நினைப்பதாகவும், அதனை கடுமையாக எதிர்ப்பதாகவும் பழனிசாமி தெரிவித்தார்.
விமர்சனம்:
மேலும், எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஒரு நிலைப்பாடு, ஆளுங்கட்சியாக இருக்கும் போது ஒரு நிலைப்பாடு என்பதே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பண்பாடு எனவும் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். அதனோடு 12 மணி நேரம் வேலை செய்வதற்கு, மனிதர்கள் ஒன்றும் இயந்திரம் இல்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.