
வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் துரைமுருகனுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடி வராண்டை வரும் செப்டம்பர் 15 ம் தேதி அமல்படுத்த சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2006-11 ம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில் பொதுப்பணித்துறை அமைச்சராக பதவி வகித்த அமைச்சர் துரைமுருகன், 2007-2009 ஆம் ஆண்டு கால கட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய் சொத்துக்கள் சேர்த்ததாக 2011 ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது.
அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மனைவி சாந்தகுமாரி, எதிராக பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கிலிருந்து இருவரையும் விடுவித்து வேலூர் சிறப்பு நீதிமன்றம் 2017 ம் ஆண்டு ஜனவரி மாதம் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மனைவியை விடுவித்த வேலூர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தது.
பின்னர் இந்த வழக்கை விசாரித்த சென்னை சிறப்பு நீதிமன்றம், அமைச்சர் துரைமுருகன், அவரின் மனைவி ஆகியோரை நேரில் ஆஜர்படுத்த பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்ற நீதிபதி பக்தவச்சலு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர் துரைமுருகன் நேரில் ஆஜராகவில்லை, அவரின் மனைவி சாந்தகுமாரி நேரில் ஆஜராகி, தனக்கெதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்டை திரும்ப பெற கோரி மனுத்தாக்கல் செய்தார்.
அதை ஏற்றுக் கொண்டு சாந்தகுமாரிக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடி வாரண்டை திரும்ப பெற்று உத்தரவிட்டார்.
பின்னர்,வழக்கின் விசாரணையை செப்டம்பர் 15 ம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதி, அமைச்சர் துரைமுருகன் எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடி வாரண்டை அமல்படுத்த காவல்துறைக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை அன்றைய தினத்திற்கு தள்ளி வைத்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.