

சென்னையில் இன்று, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கம்யூனிஸ்டுகள் போராட்டம் நடத்தினர். இதில், தவெக அரசைக் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார் பெ. சண்முகம்.
இடதுசாரி மாணவர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பல்கலைக்கழகங்களில் போராட்டங்களில் ஈடுபடக் கூடாது என அறிவுறுத்தும் வகையில், ஒரு அரசு அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வெளியானது.
இதற்கு இடதுசாரிக் கட்சிகள் மற்றும் பொதுவெளியில் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டது.
இதனை உயர்கல்வித் துறைச் செயலர் அனுப்பியதாக அரசு தெரிவித்தது. அவர் மீது முறையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஆனாலும், இப்படியான அறிவிப்பு வெளியானதைச் சாதாரணமாகக் கருத முடியாது எனக் கூறும் இடதுசாரிக் கட்சிகள், இதன் பின்னணியில் இருக்கும் தலைமைச் செயலர் சாய்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இத்துடன், திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையில், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியினரின் பெயர், முகவரி விவரங்களைச் சேகரிக்க கிராம உதவியாளருக்கு உத்தரவிட்ட வட்டாட்சியர் அய்யாசாமி மீது நடவடிக்கை எடுக்கவும் இந்தப் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இந்தப் போராட்டத்தில் பேசிய பெ. சண்முகம், "மாணவர் அமைப்பைச் சார்ந்தவர்களைப் பார்த்து, அவர்களுக்கு ஒழுக்கத்தைக் கற்றுத்தர வேண்டும். போராட்டத்தில் ஈடுபடுபவர்களைக் கண்காணிக்க வேண்டும் என்று சொல்லி, ஒரு தலைமைச் செயலாளர் தலைமையிலான குழு சுற்றறிக்கை அனுப்புகிறது என்று சொன்னால், இதை எப்படி சுலபமாகவும், தெரியாமல் நடந்துவிட்டது என்றும் நாங்கள் எடுத்துக்கொள்ள முடியும்?
அவ்வளவு விவரம் இல்லாதவரை எதற்காக தலைமைச் செயலராக வைத்திருக்கிறீர்கள்? நீக்குங்கள்!
தலைமைச் செயலராகப் பணியாற்ற தமிழ்நாட்டில் ஆள் இல்லையா? 10, 20 கூடுதல் தலைமைச் செயலர்கள் இருக்கின்றனர். அவர்கள் யாரும் லாயக்கில்லை என்றால், வெளியில் இருந்துகூட கொண்டு வாருங்கள்.
தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட இவருக்கு ஏன் பதவி நீட்டிப்பு?
கம்யூனிஸ்ட்டை தலைமைச் செயலராகப் போடுங்கள் எனக் கூறவில்லை. உங்களுக்கு வேண்டியவராக இருந்தாலும், நிரந்தரமான தலைமைச் செயலரைப் போடுங்கள். இடதுசாரியோ, முற்போக்கோ, பிற்போக்கோ, புறம்போக்கோ எதுவாக இருந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. ஆனால், இவர் நீடிக்கக் கூடாது.
இந்த மாதிரியான ஒரு தவறைச் செய்தவர் அந்தப் பொறுப்பில் நீடிக்கக் கூடாது. எடுத்தோம், கவிழ்த்தோம் என்று கூட நடவடிக்கை எடுக்க வேண்டாம். தொழிலாளர் மீது அப்படி நடவடிக்கை எடுப்பதை நாங்கள் ஒத்துக்கொள்ள மாட்டோம். முறைப்படி நோட்டீஸ் அனுப்பி, விசாரணை நடத்தி நடவடிக்கை எடுங்கள்.
என்னிடம் பேசக்கூடிய அமைச்சர்கள், 'எங்களுடைய கவனத்துக்கு வராமல் இது நடந்துவிட்டது' என்றுதான் சொல்லுகிறார்கள். அப்படியென்றால், அதிகாரிகள் தன்னிச்சையாகச் செயல்படுகிறார்களா? தமிழ்நாடு அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் அதிகாரிகள் இருக்கிறார்களா? அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் தமிழ்நாடு அரசாங்கம் இருக்கிறதா? சிம்பிள் கேள்வி. இதற்குப் பதில் சொல்ல வேண்டியவர் நம்முடைய முதலமைச்சர்.
'என்னுடைய கட்டுப்பாட்டில்தான் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் இருக்கிறார்கள். இது போன்ற தவறு நடந்துவிட்டது. இனிமேல் நடக்காமல் பார்த்துக்கொள்கிறோம்' என்று தன்னிலை விளக்கம் கொடுக்க வேண்டியவர் தமிழ்நாடு முதலமைச்சர்.
உங்களுடைய சுற்றறிக்கை, சட்டங்கள், விதிமுறைகளுக்கு நாங்கள் எங்களை உட்படுத்திக்கொள்வோம் என நீங்கள் நினைக்க முடியாது. எங்களுடைய பணி எப்படி இருக்க வேண்டும் என்பதை நாங்கள்தான், கம்யூனிஸ்டுகள்தான் தீர்மானிப்போம்.
தலைமைச் செயலரின் உத்தரவை ஏற்று, உயர்கல்வித் துறைச் செயலர் அளித்த சுற்றறிக்கைகள் இன்னும் திரும்பப் பெறப்படாமல் இருக்கின்றன. அவற்றையும் திரும்பப் பெற வேண்டும்.
இடதுசாரிகள் ஆதரவுடன் இந்த ஆட்சி நடக்கிறது என்பது தெரிந்தும், இப்படிப்பட்ட உள்நோக்கம் கொண்ட சுற்றறிக்கைகள் அனுப்பப்படுகின்றன. இடதுசாரிகளின் விவரங்களைச் சேகரிக்க ஒரு வட்டாட்சியர் உத்தரவிடுகிறார் என்றால், இவர்களை வைத்துக்கொண்டுதான் நீங்கள் ஆட்சியை நடத்தப்போகிறீர்களா? இடதுசாரிகளை வைத்துக்கொண்டு ஆட்சியைத் தொடரப் போகிறீர்களா?
இதுதான் அடிப்படையான கேள்வி. எங்களால் இதுபோன்ற நடவடிக்கைகளைச் சகித்துக்கொள்ள முடியாது. இந்தப் பிரச்சினை சுமுகமான முறையில் தீர்க்கப்பட வேண்டும். அது எங்கள் கையில் இல்லை; முதலமைச்சரின் கையில்தான் இருக்கிறது" என்றார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்