
கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு தார்மீக பொறுப்பேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி உள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்து எக்கியார் குப்பம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தியதில், வாந்தி மயக்கம் ஏற்பட்டு 15-க்கும் மேற்பட்டோர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மற்றும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 7 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் 3 பேர் கவலைக் கிடமான நிலையில் உள்ளனர். மேலும் செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் அடுத்த பெருங்கரணையில் கலப்பட மது அருந்திய 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இதனை கண்டித்து இன்று திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி, விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கள்ளச்சாராய உயிரிழப்புகள் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் கலப்பட மதுவால் பலர் உயிரிழந்ததும், மிகுந்த வேதனையும், அதிர்ச்சியும் அளிப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால், தமிழ்நாட்டில் திறமையற்ற பொம்மை முதலமைச்சர் ஆட்சி செய்வதால் இதனை தடுக்க முடியவில்லை என அவர் சாடியுள்ளார்.
மேலும், கள்ளச்சாராய விற்பனை அதிகரித்து வருவதாக பத்திரிகைகளில் தகவல் வெளியானபோதே, அரசு விழித்துக் கொண்டிருந்தால் உயிர் பலிகளை தடுத்திருக்கலாம் என்று குற்றம் சாட்டியுள்ள அவர் இந்த உயிரிழப்புகளுக்கு தார்மீக பொறுப்பேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி உள்ளார்.
இதேபோல், தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை மற்றும் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளதாக சாடி உள்ள அவர், கஞ்சா விற்பனையை தடுக்க திமுக அரசு தவறிவிட்டதாகவும் கூறினார். மேலும், வருமானத்தை மட்டுமே பார்க்கும் தமிழ்நாடு அரசு, மக்கள் நலனில் சிறிதும் அக்கறை இல்லாமல் இருப்பதால், 24 மணிநேரமும் டாஸ்மாக் பார்கள் திறந்து இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
மேலும், தானியங்கி எந்திரங்கள் மூலம் மதுபானங்கள் விற்பனை செய்யப்படும் என்று அறிவித்ததும், திருமண மண்டபங்களில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படும் என அறிவித்ததும் திமுக அரசுதான் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், கள்ளச்சாராய உயிரிழப்பு ஏற்பட்டுள்ள மரக்காணத்திற்கு நாளை சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூற உள்ளதாக அவர் கூறிய அவர் கள்ளச் சாராய உயிரிழப்புக்கு பொறுப்பேற்று, மதுவிலக்குத்துறை அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜி தனது பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிக்க:தமிழ்நாடு அமைச்சரவையும் சிறுபான்மையினரும்!