

சென்னையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம் ஒன்றில், முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான அணியினர், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவுடன் இணைவது குறித்த தங்கள் நிலைப்பாட்டை காரசாரமாக வெளிப்படுத்தியுள்ளனர். சென்னை வேப்பேரியில், ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான 'அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு'வின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். வரவிருக்கும் அரசியல் நகர்வுகள் மற்றும் கூட்டணிகள் குறித்து விவாதிப்பதே இந்தக் கூட்டத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது. கூட்டத்தில் பங்கேற்ற ஒவ்வொரு நிர்வாகியையும் தனித்தனியாக அழைத்து, யாருடன் கூட்டணி வைக்கலாம் என்பது குறித்து சுமார் இரண்டு மணி நேரம் விரிவாகக் கருத்துகள் கேட்கப்பட்டன.
நிர்வாகிகள் அனைவரும் ஒருமித்த குரலில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவுடன் இணைவதற்குத் தங்களின் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். எந்தச் சூழலிலும் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து செல்ல மாட்டோம் என்று திட்டவட்டமாகக் கூறிய நிர்வாகிகள், கூட்ட அரங்கில் அவருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இது அங்கிருந்தவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம், தற்போதைய அதிமுகவின் நிலையை மிகக் கடுமையாக விமர்சித்தார். "அதிமுக என்ற பூமாலை தற்போது குரங்கு கையில் சிக்கியுள்ளது" என்று சாடிய அவர், எடப்பாடி பழனிசாமி கட்சியில் இருக்கும் வரை நாங்கள் ஒருபோதும் இணைய மாட்டோம் என்று உறுதிபடத் தெரிவித்தார். மேலும், எடப்பாடி பழனிசாமிக்குக் கட்சியின் கொள்கையோ, கோட்பாடோ, வரலாறோ தெரியாது என்றும், அவரை வீழ்த்துவதே தங்களின் ஒரே குறிக்கோள் என்றும் ஆவேசமாகப் பேசினார். எடப்பாடி பழனிசாமி இல்லாத அதிமுக அமைந்தால் மட்டுமே இணைப்புச் சாத்தியம் என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.
இதனைத் தொடர்ந்து மேடையில் பேசிய ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியின் பெயரை உச்சரிக்கவே தமக்கு வெட்கமாக இருப்பதாகக் கூறித் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்ற பிறகு சந்தித்த பதினொரு தேர்தல்களிலும் அதிமுக படுதோல்வியைச் சந்தித்துள்ளதாகவும், அவர் கட்சியைக் அதலபாதாளத்தில் தள்ளிவிட்டதாகவும் ஓபிஎஸ் குற்றம் சாட்டினார். எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரால் வளர்க்கப்பட்ட மாபெரும் இயக்கத்தை, எடப்பாடி பழனிசாமி தனது தவறான நடவடிக்கைகளால் சிதைத்துவிட்டதாக அவர் வேதனை தெரிவித்தார். தற்போதைய சூழலில் அதிமுக தொண்டர்கள் அனைவரும் என்ன செய்வது என்று தெரியாமல் திக்குமுக்காடிப் போயிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வரவிருக்கும் காலங்களில் எடப்பாடி பழனிசாமிக்குச் சரியான பாடம் புகட்ட வேண்டும் என்பதே இன்றைய வரலாற்றின் தேவை என்று ஓ. பன்னீர்செல்வம் தனது உரையில் வலியுறுத்தினார். நிர்வாகிகளின் கருத்துகளைக் கேட்டறிந்த பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த ஓ. பன்னீர்செல்வம், அரசியல் கூட்டணி மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்துக் கேட்டபோது, "தை பிறந்தால் வழி பிறக்கும்" என்று ஒற்றை வரியில் சூட்சமமாகப் பதிலளித்துவிட்டுச் சென்றார். இந்தக் கூட்டம் மற்றும் அதில் எடுக்கப்பட்ட முடிவுகள், அதிமுக அரசியல் வட்டாரத்தில் மீண்டும் ஒரு பரபரப்பைப் பற்றவைத்துள்ளது. இணைப்புக்கான கதவுகள் முற்றிலுமாக அடைக்கப்பட்டுவிட்டனவா அல்லது எதிர்காலத்தில் மாற்றங்கள் நிகழுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்