

தமிழக வெற்றி கழகத்தின் ஆதரவுக் கட்சிகளுடனான முக்கிய ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், தவெக அமைச்சர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தைத் தொடர்ந்து, தவெக தலைமையிலான இந்த புதிய கூட்டணிக்கு “மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி” என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தக் கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விசிக மற்றும் ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும் சில காட்சிகளை சேர்க்கவும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளது.
கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர், “மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் செயல்படும். கூட்டணியின் தலைவராக தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் இருப்பார் என்றும் மேலும் புதிய கட்சிகளை கூட்டணியில் சேர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்தார்.
மேலும், “மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி என்பது இந்தியா கூட்டணியின் ஒரு பகுதி” என்றும் மாணிக்கம் தாகூர் கூறினார். 2029 மக்களவைத் தேர்தலில் இந்தக் கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என நம்பிக்கை தெரிவித்த அவர், 2029 மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளரை முதலமைச்சர் விஜய் ஆதரிப்பார் என்றும் தெரிவித்தார்.
இதுகுறித்து பேசிய அவர், “இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் என யாரையும் இதுவரை முன்னிறுத்தியது கிடையாது. கடந்த தேர்தலிலும் அப்படி யாரையும் அறிவிக்கவில்லை. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யார் பிரதமர் வேட்பாளர் என்பதை இந்தியா கூட்டணி முடிவு செய்யும்” என்று கூறினார். இதனிடையே, மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி சார்பில் இடைத்தேர்தல் வேட்பாளர்கள் நாளை அறிவிக்கப்படுவார்கள் என்றும், அவர்களின் வெற்றிக்காக கூட்டணி கட்சிகள் இணைந்து பாடுபடும் என்றும் தெரிவித்தார். “முதல் முறையாக ஒரு நேர்மையான ஆட்சி அமைந்துள்ளது” என்று குறிப்பிட்டார் மாணிக்கம் தாகூர்.
அவரை தொடர்ந்து பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “இந்த கூட்டணி.. தேர்தலுக்கான கூட்டணி அல்ல, இது அரசமைப்பு கோட்பாடுகளை பாதுகாக்கும் வகையில் அமைந்த கூட்டணி” என்றும் “வரும் தேர்தல்களை மதச்சார்பற்ற முற்போக்கு சமூகநீதி கூட்டணி தலைமையில் சந்திப்போம்” என்றும் தெரிவித்தார். ஆதரவு கட்சிகளாக இருந்தவை தற்போது கூட்டணி கட்சிகளாக மாறியுள்ளதாகவும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் முதல்முறையாக கூட்டணி அமைச்சரவை என்ற புதிய வரலாறு பிறந்துள்ளது என்று ஐயுஎம்எல் தலைவர் காதர் மொய்தீன் குறிபிட்டுள்ளார். மேலும் தேர்தல்களில் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி வெற்றி மேல் வெற்றி பெறும் என்றும் 2028சட்டமன்ற தேர்தலாக இருந்தாலும் நாடாளுமன்ற தேர்தலாக இருந்தாலும் ஒன்றாக பயணிப்போம் தெரிவித்தார்.
அவரை தொடந்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா "இந்த தேர்தலுக்காக மட்டும் கூட்டணி உருவாகவில்லை; மக்களுக்கான தேர்தலுக்கு அப்பாற்பட்டு கொள்கை கூட்டணி உருவாகி உள்ளது. “மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி இருக்கும் இடத்தில் வெற்றி இருக்கும்” அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசி இருந்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்