

தமிழக வெற்றி கழகக் கட்சியின் ஆதரவுக் கட்சிகளுடனான முக்கிய ஆலோசனை கூட்டம் இன்று சென்னை பனையூரில் உள்ள த.வெ.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், தவெக அமைச்சர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்று முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்தத் தோழமைக் கட்சிகளின் முதற்கட்ட ஆலோசனைக் கூட்டம் கடந்த ஜூலை 1-ஆம் தேதி ECR-ல் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் நடைபெற்றது. அந்த ஆலோசனைக் கூட்டத்தில் தவெக தலைமையில் உருவாகியுள்ள இந்தக் கூட்டணிக்கு விரைவில் “நல்ல பெயர் வைக்கப்படும்” என்று அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்திருந்தார்.
இன்று 4 மணிக்கு தொடங்கிய ஆலோசனை கூட்டம், முதல்வர் விஜய் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றுள்ளது. கூட்டணிக்கு பெயர், குறைந்தபட்ச செயல்திட்டம் மற்றும் இடைத்தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடந்துள்ளதாக சொல்லப்படுகிறது. முக்கிய முடிவாக தவெக கூட்டணிக்கு ‘மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக்கூட்டணி’ என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வருகின்ற இடைத்தேர்தலை இந்த கூட்டணி முதல்முறையாக சந்திக்க உள்ள நிலையில் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வேட்பாளர்கள் மற்றும் தேர்தல் பணி தொடர்பாகவும் ஆலோசனை நடைபெற்றுதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
முதல் ஆலோசனைக் கூட்டத்தில் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைக்க ஆதரவு அளித்த காங்கிரஸ், விசிக, மதிமுக மற்றும் ஐயுஎம்எல் ஆகிய கட்சிகள் பங்கேற்றன. இடதுசாரி கட்சிகளான CPM மற்றும் CPI பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 2-ஆம் கட்ட ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்குமாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் தவெக அமைச்சர்கள் நேரில் சென்று அழைப்பு விடுத்தனர். ஆனாலும், இரு கட்சிகளும் “நாங்கள் இந்தக் கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை” என்று நேற்றே அறிவித்திருந்தன.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்