

சாதி மதமற்றவர் என்பதை நாம் தான் பின்பற்ற வேண்டுமே தவிர, அதற்கு சான்றிதழ் அவசியம் இல்லை என, நடிகர் பார்த்திபன் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. சாதி, மதமற்றவர் என சான்று வழங்கக் கோரி நடிகர் பார்த்திபன் அளித்த விண்ணப்பத்தை பரிசீலித்து சான்று வழங்க சோழிங்கநல்லூர் தாசில்தாரருக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், சாதி, மதம், மொழி அடிப்படையிலான பிளவுகள், தேச ஒற்றுமைக்கு பாதிப்பானது என்பதால், மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ, சாதி - மதமற்றவர் என சான்று கோரி விண்ணப்பித்ததாகக் குறிப்பிட்டிருந்தார். அதையடுத்து இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.தண்டபாணி, ஒரு வாரத்தில் நடிகர் பார்த்திபனுக்கு “சாதி மதம் அற்றவர்” என்ற சான்றிதழ் வழங்குமாறு சோழிங்கநல்லூர் தாசில்தாருக்கு கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவின் அடிப்படையில், ஏப்ரல் 27 ம் தேதி நடிகர் பார்த்திபனுக்கு, சாதி, மதம் சாராதவர் என சோழிங்கநல்லூர் தாசில்தார் வழங்கினார்.
பார்த்திபன் தாக்கல் செய்த இந்த வழக்கு, நீதிபதி தண்டபாணி முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நேரில் ஆஜராகி இருந்த நடிகர் பார்த்திபன், “அர்த்தமுள்ள ஒரு சமுதாயம் உருவாக வழி செய்துள்ளதற்கு நன்றி” என, சான்றிதழ் வழங்குவதற்கு உத்தரவிட்ட நீதிபதிக்கு நன்றி தெரிவித்தார். அதற்கு பதில் அளித்த நீதிபதி, “சாதி- மதம் அற்றவர் என்பதை தெரிவிக்க சான்று பெறவேண்டிய அவசியம் இல்லை; இதுபோன்ற சான்று வழங்க தாசில்தாருக்கு அதிகாரம் இல்லை; ஏற்கனவே இரு நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையிலேயே உங்களுக்கு இந்த சான்று வழங்கும் படி உத்தரவிட்டதாக” குறிப்பிட்டார்.
மேலும், “இந்த சான்று விளம்பரத்துக்கு வேண்டுமானால் பயன்படும்; உண்மையில் சாதி மதம் அற்றவர் என்பதை நாம் தான் பின்பற்ற வேண்டும்; அதற்கு சான்றிதழ் அவசியம் இல்லை; சாதி மத மற்றவர் என சுய பிரகடனம் செய்து கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை; நம் நடத்தை மூலம் தான் அதை காட்ட வேண்டும் என நீதிபதி தெரிவித்தார். அதையடுத்து, நடிகர் பார்த்திபனுக்கு சாதி மத அற்றவர் என சான்றிதழ் வழங்கப்பட்டதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, அவரது வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார். அதற்கு நடிகர் பார்த்திபன், “நல்லவர் என்று கூறுவதற்கு கூட சான்றிதழ் தேவைப்படுகிறது" என்று தெரிவித்தார். "சாதி மதம் அற்றவர் என சான்று கேட்க, பெரிய லிஸ்ட் தயாராகி வருகிறது” என்றும் நடிகர் பார்த்திபன் தெரிவித்தார்.
உயர்நீதிமன்ற உத்தரவின்படி, சாதி, மதமற்றவர் என சான்று பெற்ற பார்த்திபன், சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வெளியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “எல்லோரும் என்னை மனநிலை பாதிக்கபட்டவர் என கூறுகிறார்கள்” என்றும் “சாதி- மதம் இல்லாத சமூகத்தை உருவாக்க வேண்டும் என பல தலைவர்கள் கூறியுள்ளார்கள். அப்படி பட்ட ஒரு முயற்சியில் நான் செயல்படுத்த முன்னெடுக்கும் போது ஏன் இவ்வளவு பிரச்சனை செய்கிறார்கள்” எனக் கேள்வி எழுப்பினார். “சாதி, மத சான்றிதழ் தேவை என்று சொல்பவர்களை தவறாக சொல்லவில்லை. இது ஒரு புதிய விழிப்புணர்வு முயற்சி, திரைத்துறையில் முதலில் சாதி, மதமற்றவர் என சான்று வாங்கியுள்ளேன்” என்றும் குறிப்பிட்டார். மேலும் “இயக்குனர் விக்ரமன் கூட கால் பண்ணி உங்க லிஸ்டில் என்னை சேர்த்து கொள்ளுங்கள் என்று கூறினார், ஒரு பெரிய லிஸ்ட் ரெடி ஆகிட்டு இருக்கு” என்றும் தெரிவித்தார். மேலும் “முதலில் இதுபோன்ற சான்றிதழ் வாங்க முடியுமா என்பது தெரியாது. அதை வாங்க ரொம்ப கஷ்டமா இருந்துச்சு” என்றும் குறிப்பிட்டார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.