"சாகும் வரை சிறை தண்டனை"...கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிரடி தீர்ப்பு

129 நாட்களில் விசாரித்து தீர்ப்பு வழங்கியுள்ளது நீதிமன்றம்...
"சாகும் வரை சிறை தண்டனை"...கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிரடி தீர்ப்பு
Published on
Updated on
1 min read

கடந்த வருடம் நவம்பர் மாதம் 2-ம் தேதி இரவு, கோவை விமான நிலையம் அருகே கோவையைச் சேர்ந்த கல்லூரி மாணவி, தன் ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த 3 நபர்கள், ஆண் நண்பரை தாக்கிவிட்டு, கல்லூரி மாணவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பெண் பாதுகாப்பு சார்ந்த கேள்விகளையும் எழுப்பியது. அதன் பின், போலீசார் தீவிர விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்தனர். கடந்த மூன்று மாதங்கள் நடந்த விசாரணையில் மூன்று பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதையடுத்து இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு  இருந்த சதீஷ், கார்த்திக் மற்றும் தவசி ஆகியோருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது 

இந்த வழக்கு நீதிபதி சுந்தர்ராஜன்  முன்னிலையில் விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் அவரின் ஆண் நண்பரிடம் நடத்திய விசாரணையில் 112 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளது. 72 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்துள்ளனர். 129 நாட்களில் விசாரித்து தீர்ப்பு வழங்கியுள்ளது நீதிமன்றம். தீர்ப்பின் படி குற்றவாளியான சதீஷ், கார்த்திக் மற்றும் தவசி ஆகியோருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்துள்ளது கோவை மகளிர் நீதிமன்றம்.

தீர்ப்புக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த வழக்கறிஞர் பி.ஜிஷா குற்றம் நடந்த அன்று அந்த மாணவி இயற்கை உபாதையை கழிக்கவே அந்த இடத்திற்கு சென்றுள்ளார் என்றும் அவரின் ஆண் நண்பர் அவருக்கு பாதுகாப்பிற்கு உதவியதாக சென்றதாகவும் தெரிவித்தார். மேலும் அவரின் ஆண் நண்பரை தாக்கிவிட்டு மாணவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக குறிப்பிட்டர். அதனை தொடர்ந்து இந்த தீர்ப்பு கிடைப்பதற்கு காரணமாக இருந்த சாட்சியங்களுக்கும்  பொது மக்களுக்கும் நன்றி தெரிவித்தார். அதனை தொடர்ந்து இதுபோல் பாலியல் குற்றங்களில் பாதிக்கபடும் பெண்களை குற்றவாளிகளாக சித்தரிக்காதீர்கள் என்றும், அவர்களை நோக்கி கடுமையான சொற்களை வீசாதீர்கள் என்றும் கேட்டு கொண்டார்.

தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கோவை விமான நிலைய பாலியல் வன்கொடுமை வழக்கு விரைவாக தீர்ப்பு அளிக்க பட்ட ஒரு வழக்காகும். அதே போல் தமிழகத்தில் நடந்த பாலியல் குற்றங்களை விசாரித்து விரைவில் தீர்ப்பு வழங்க வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com