
பாட்டாளி மக்கள் கட்சியின் பெயர் மற்றும் சின்னம் தொடர்பாக வழக்குகள் தாக்கல் செய்தால் தங்கள் தரப்பு வாதங்களை கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது என, கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உரிமையியல் நீதிமன்றங்களில் கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
பா.ம.க. நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையில் மோதல் நிலவி வருகிறது. கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து அன்புமணியை நீக்கிய ராமதாஸ், தானே அப்பொறுப்பை கவனிப்பதாக அறிவித்திருந்தார்.
இதை ஏற்காத அன்புமணி, கட்சியின் பொதுக்குழு கூட்டத்தையும் நடத்தியிருந்தார். அன்புமணியின் ஆதரவாளர்களை கட்சியின் பொறுப்புகளில் நீக்கிய ராமதாஸ், புதிய நிர்வாகிகளை நியமித்து வந்தார்.
இந்த நிலையில், தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ள அன்புமணி தரப்பில், பாட்டாளி மக்கள் கட்சிக்கு உரிமை கோரியோ, சின்னத்துக்கு உரிமை கோரியோ வழக்குகள் தாக்கல் செய்தால், தங்கள் தரப்பு வாதங்களை கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது எனக் கோரி, ராமதாசால் நியமிக்கப்பட்டுள்ள பொதுச் செயலாளர் முரளி சங்கர் சார்பில், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உரிமையியல் நீதிமன்றங்களில் கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
ஏற்கனவே அன்புமணி மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளை அடுக்கி மகனின் இமேஜை காலி செய்துள்ளார் நிறுவனர். தேர்தல் நெருங்க நெருங்க கட்சி யார் கையில் உள்ளது என்ற கேள்வி வலுத்துள்ளது. இந்த சூழலில் இப்படி ஒரு மனு நீதிமன்றத்தில் தாக்கல் செய்வது அன்புமணியை நகரவிடாமல் செய்துவிடும். அது அன்புமணிக்கு பெரும் பின்னடைவாகும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.