
கடந்த சில நாட்களாகவே பாமகவிற்கு நேரம் சரியில்லை என்றுதான் சொல்ல வேண்டும். சமீபத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை கூட்டி, அன்புமணியை எம்.பி ஆக்கி பெரும் தவறிழைத்து விட்டேன். அவர் முகுந்தன் நியமன விவகாரத்தில் தன் தாயையே பாட்டிலை தூக்கி அடிக்க சென்றவர். கட்சி இன்று இந்த நிலைமைக்கு இருப்பதற்கு காரணம் அவரிடம் தலைமைப்பண்பு இல்லாததுதான் என்ற பரபரப்பு குற்றச்சாட்டை சொல்லியிருந்தார்.
இது பாமக -வில் பெரும் பதட்டத்தையும், கட்சியின் எதிர்காலம் குறித்த அச்சத்தையும் ஏற்படுத்தி இருந்தது.
ஆனால் இவர்களுக்கு இடையேயான இந்த மோதல் போக்கு நிச்சயம் கட்சியை சீர்குலைக்கும் என்று தெரிந்த நலம் விரும்பிகள் பலர் தைலாபுரத்துக்கும், பனையூருக்கும் இடையே எத்தனையோ கட்ட சமரச செயலில் ஈடுபட்டனர். ஆனால் எதுவும் எடுபடவில்லை.
கடந்த 2024 -ஆம் ஆண்டு ராமதாஸின் மகள் வயிற்று பேரன் முகுந்தனுக்கு இளைஞர் அணி தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து மேடையிலேயே அன்புமணி காட்டமாக பேசியிருந்தார். இதுதான் கட்சியின் பிரச்சனைக்கு துவக்கப்புள்ளி. அப்போது தொடங்கிய தந்தை - மகன் பூசல் இதுநாள் வரை நீடிக்கிறது. மேலும் ராமதாஸ் கட்சியிலிருந்து விலக்கும் நிர்வாகிகளை எல்லாம் அன்புமணி மறு நியமனம் செய்து வருகிறார். இதனால் தொண்டர்களும் நிர்வாகிகளும் குழப்பத்தில் இருந்து வந்தனர்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு திண்டிவனம் ஓமந்தூரார் திருமண மண்டபத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த செயற்குழுவில் அன்புமணிக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் அன்புமணிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ராமதாசுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. நிறுவன தலைவருக்கு கட்டுப்படாமல் அன்புமணி செயல்படுவது கண்டிக்கத்தக்கது என பாமக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில்தான் தற்போது அன்புமணிக்கு எதிராக பாமக நிறுவனர் ராமதாஸ் டிஜிபி அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். தமிழகத்தில் ஸ்டாலின் ஆட்சியை அகற்ற வேண்டும், இந்தியா அரசியலமைப்பு சட்டத்தால் குடி மக்களுக்கு வழங்கப்பட்ட 10 வகையான உரிமைகளை மீட்பதற்காக தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் மேற்கொள்ளப்படுவதாகவும் அறிவித்திருந்தார்...
இந்த பயணம் பாமக நிறுவனர் ராமதாஸின் பிறந்த நாளான ஜூலை 25-ஆம் நாள் மாலை சென்னையை அடுத்த திருப்போரூரில் தொடங்கவுள்ள அன்புமணியின் இந்தப் பயணம் தமிழகத்தின் முக்கியத் தொகுதிகள் வழியாக பயணித்து, நவம்பர் 1ஆம் தேதி தருமபுரியில் நிறைவடையவுள்ளது.
நாளை முதல் தமிழக முழுவதும் உரிமை மீட்பு பயணம் என்ற பெயரில் அன்புமணி ராமதாஸ் கட்சித் தொண்டர்களை சந்திக்க இருந்தார். இந்த உரிமை மீட்பு நடை பயணத்திற்காக அன்புமணி தரப்பிலான பாமகவினர் தீவிரமாக வேலைபார்த்து வரும் நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணிக்கு எதிராக டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
அதில், அன்புமணி நாளை தொடங்க இருக்கும் ‘உரிமை மீட்பு’பயணத்தில் பாமக பெயர், கட்சிக் கொடியை பயன்படுத்த அன்புமணிக்கு தடை விதிக்கக்கோரி அவர் டிஜிபியிடம் மனு அளித்துள்ளார். இந்த நடை பயணத்தின் போது கட்சி பெயர் மற்றும் கொடியை அவர் பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் என்று ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஒருவேளை அன்புமணி கட்சி கொடி மற்றும் சின்னதாய் பயன்படுத்துவதை தடுக்கப்பட்டால், அது அவருக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என்கின்றனர் சிலர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.