

தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் அமைக்கப்பட்ட மதுபான கடையை அகற்றக்கோரி தவெக தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது, பாதுகாப்பு பணியிலிருந்த காவலரின் கையை தவெக தொண்டர் ஒருவர் வெறிகொண்டு கடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசியல் களத்தில் புதிய வரவு என்றால் அது விஜய் -தான். மேலும் தன்னெழுச்சியாக அவருக்கு இளைஞர் கூட்டம் கூடுகிறது என்பதும் மறுக்க முடியாத ஒன்றுதான். ஆனால் அவர் மீதும் அவரின் தொண்டர்கள் மீதும் தொடர்ச்சியாக வைக்கப்படுகிற விமர்சனம், அவர்கள் ரசிகர் மன நிலையிலேயே இருக்கின்றனர் அவர்கள் இன்னும் தொண்டர் மனநிலைக்கு வரவில்லை என்பதுதான். மேலும் ஒரு கருத்தியலோடு கூடிய அரசியல் கட்சியை பின்தொடரும் இளைஞர்கள் கூடுதல் பொறுப்புணர்வுடனும், முதிர்ச்சியுடனும் செயல்பட வேண்டும். ஆனால் தமிழக வெற்றி கழக தொண்டர்களிடம் அந்த மனநிலை கொஞ்சம்கூட இல்லை என்பதுதான் உண்மை. ஏற்கனவே மாநாடுகள் நடக்கும்போது கம்பியை தாண்டி எகிறி குதித்து ஓடுவது, மரத்தில் ஏறி நின்று விஜயை பார்க்க முயலுவது என, ‘impulsive’ -ஆன வேலைகளில் தான் அதிகம் ஈடுபட்டு வருகின்றனர். கரூர் துயரத்திற்கு பிறகு, இப்போதுதான் தவெக கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறது, அதற்குள் காவலரின் கையை தொண்டர் கடித்த விவகாரம் இணையத்தில் பேசு பொருளாகி உள்ளது.
தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் கடந்தவாரம் தனியார் மதுபானக்கடை திறக்கப்பட்டது. இந்த மதுபானக் கடைக்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், இந்த மதுபானக்கடை பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாகவும்,பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு தொந்தரவாக இருப்பதாகவும் கூறி தமிழக வெற்றி கழகத்தினர் ஞாயிற்று கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தை தவெக மாவட்ட செயலாளர் தாபா சிவா தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசிக்கொண்டிருக்கும் போதே, திடீரென தனியார் பாரை தவெகவினர் சுற்றி வளைக்க ஆரம்பித்து விட்டனர். போலீஸ் தடுப்பையும் மீறி தவெக தொண்டர்கள் தாக்குதல் நடத்த முயற்சி செய்தனர். இதில் போலீசாருக்கும் தவெகவினருக்கும் இடையே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு அதிகரித்தபோது தவெக -வின் ஜெமினி என்ற இளைஞர் திடீரென போலீஸ் ஒருவரின் கையைப் பிடித்து வெறி வந்தது போல கடித்தார். பாதுகாப்புக்கு நின்றிருந்த, தலைமை காவலரின் கையையே தவெக தொண்டர் கடித்து வைத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. இந்த வீடியோவும் வைரலாகி வருவதால், ‘ஐயோ பயமா இருக்கு கடிச்சிறதா..’ என மீம் போட்டு நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளி வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.