
டாஸ்மாக் கடைக்கு எதிரான போராட்டத்தை குற்றச்செயலாக கருத முடியாது என தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம் ,
மக்கள் அதிகாரம் அமைப்பினர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
கடலுர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி கடந்த 2016 ம் ஆண்டு மே மாதம் மக்கள் அதிகாரம் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போரட்டம் உரிய அனுமதியின்றி நடத்தப்பட்டதாவும் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்ததாகவும் கூறி மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த முருகானந்தம்,மணிமாறன் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து சிதம்பரம் முதலாவது நடுவர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முருகானந்தம் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கின் விசாரணை நீதிபதி பி.வேல்முருகன் முன்பு நடைபெற்றது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் ஏ.சுரேஷ் சக்திமுருகன் ஆஜராகி, உள்ளுர் பகுதி மக்களின் நலன் கருதியே போராட்டம் அமைதியான முறையில் நடந்ததாகவும்,மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளதாகவும் போரட்டத்தில் எந்த அசம்பாவிதமும் நடைபெறாத நிலையில், யாரும் புகார் கொடுக்காத நிலையில் போலீசாரே தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளதாக வாதிட்டார்.
காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.வினோத்குமார், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் வகையில் எந்த அனுமதியும் பெறப்படாமல் போரட்டம் நடைபெற்றதாகவும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவே வழக்கு பதிவு செய்யப்பட்டதாக வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, குடியிருப்பு பகுதிகளில் இயங்கும் மதுபானக்கடைகள் ஏற்படுத்தும் சமூக பிரச்சனை குறித்து பொதுமக்கள் குறிப்பாக அப்பகுதி பெண்கள் நியாயமான கவலைகளை எழுப்பும் இதுபோன்ற சந்தர்பங்களில் அமைதியான போரட்டங்களை குற்றச்செயலாக கருத முடியாது, ஆட்சியில் உள்ள அரசியல்கட்சிகள்
தேர்தல் பிரச்சாரங்களின் போது டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை குறைப்பாதாக வாக்குறுதிகளை அளித்தாலும் உண்மையில் இந்த கடைகளை மூடப்படுவதற்கு பதிலாக வேறு இடத்திற்கு மாற்றப்படுதால் முக்கிய பிரசச்னை தீர்க்கப்படாமல் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற அமைதியான போராட்டங்களில் பங்கேற்கும் ஒவ்வொரு தனிநபருக்கும் எதிராக காவல்துறை குற்றவியல் வழக்குகளைப் பதிவு செய்தால், அது ஜனநாயக உரிமைக்கு எதிரானதாகும், இதுபோன்ற நடவடிக்கைகள், தொடர்ந்தால்,
மாநிலம் முழுவதும் இதேபோன்ற ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்ற நூற்றுக்கணக்கான பெண்கள் மீதும் வழக்குத் தொடர வேண்டிய நிலை ஏற்படும்.
அமைதியான போராட்டம், குறிப்பாக பொது சுகாதாரம் மற்றும் சமூக நலனைப் பாதிக்கும் விஷயங்களில், அரசியலமைப்பு ரீதியாக பாதுகாக்கப்பட்ட ஒன்றாகும் என தெரிவித்துள்ள நீதிபதி,
போராட்டங்கள் அமைதியாகவும் வன்முறையற்றதாகவும் தொடர்ந்தால், பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தவும் அரசிடமிருந்து உரிமைகளை கேட்கவும் முடியும் என தெரிவித்து,
சிதம்பரம் நடுவர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.