“திரிஷா போட்டோவை வையுங்க, அவங்க தான் அடுத்த முதல்வர்” - அடம்பிடித்த காரைக்குடி கவுன்சிலர்! மாமன்ற கூட்டத்தில் பரபரப்பு!

திரிஷாபடத்தையும் வையுங்க, திரிஷா என்ன மட்டமா? என்றும்
trisha
Published on
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சியில் நடைபெற்ற மாமன்றக் கூட்டம் இன்று அரசியல் கட்சிகளின் கவுன்சிலர்கள் இடையேயான வாக்குவாதம் மற்றும் எதிர்பாராத கோரிக்கைகளால் பரபரப்பாக மாறியது. மாநகராட்சி ஆணையாளர் பாலு தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டம், தொடங்கிய சில நிமிடங்களிலேயே சர்ச்சை மற்றும் சலசலப்புக்கு காரணமானது.

கூட்டம் பொறுப்பு மேயர் குணசேகரன் தலைமையில் தொடங்கியது. கூட்டம் ஆரம்பமான உடனேயே திமுக, காங்கிரஸ் மற்றும் அதிமுக கவுன்சிலர்கள் பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக, மாநகராட்சியில் ஒப்புதல் அளிக்கப்பட்ட பல பணிகள் இதுவரை நடைமுறைக்கு வரவில்லை என்றும், பொதுமக்கள் அளித்த மனுக்களுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டி அவர்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இதற்கிடையில், மாநகராட்சி மாமன்றக் கூட்ட அரங்கில் தற்போதைய முதலமைச்சர் விஜயின் படம் மட்டுமே வைக்கப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து அதிமுக கவுன்சிலர்கள் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமியின் படத்தையும் அரங்கில் வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அதே நேரத்தில், திமுக கவுன்சிலர்கள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் படமும் இடம்பெற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இரு தரப்பினரின் வலியுறுத்தலுக்குப் பிறகு, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமியின் படம் முதலில் வைக்கப்பட்டது. தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆகியோரின் படங்களும் கூட்ட அரங்கில் வைக்கப்பட்டன. இதனால் சில நேரம் நிலவிய பதற்றம் ஓரளவு தணிந்தது. ஆனால், கூட்டத்தின் போது மேலும் ஒரு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிமுகவைச் சேர்ந்த 27வது வார்டு உறுப்பினர் பிரகாஷ், பொதுமக்கள் அளித்த மனுக்களுக்கு தீர்வு காணப்படவில்லை என்று குற்றம்சாட்டி, பொறுப்பு மேயரின் இருக்கை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

அதனைத் தொடர்ந்து, சுயேச்சை மாமன்ற உறுப்பினர் ஒருவர் எதிர்பாராத விதமாக “திரிஷா போட்டோ வையுங்க, வருங்கால முதல்வர் திரிஷாவின் படத்தையும் கூட்ட அரங்கில் வைக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார். மேலும் “அந்த படத்தை வை இந்த படத்தை வை என்று, திரிஷாபடத்தையும் வையுங்க, திரிஷா என்ன மட்டமா? என்றும் "திரிஷா படத்தை வையுங்க, திரிஷா படத்தை வையுங்க, திரிஷா படத்தை வையுங்க" என்று மூன்று முறை கோரிக்கை விடுத்தார். இந்தக் கருத்து கூட்ட அரங்கில் இருந்தவர்களிடையே சிரிப்பையும், அதே நேரத்தில் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

பல கட்ட வாக்குவாதங்கள் மற்றும் கோஷங்களுக்கு மத்தியில் நடைபெற்ற காரைக்குடி மாநகராட்சி கூட்டம், அரசியல் விவாதங்களும், கோரிக்கைகளும் இணைந்து கலகலப்பான சூழலை உருவாக்கிய நிலையில் தொடர்ந்து நடைபெற்றது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com