

நடிகர் ரஜினிகாந்த், தமிழகத்தின் அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிடும் ஒரு கட்சியைத் தொடங்குவதாகவும், 'ஆன்மீக அரசியலை' முன்னெடுக்கப்போவதாகவும் உறுதியளித்து, 2017 டிசம்பர் 31 அன்று தனது அரசியல் பிரவேசத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். மேலும், 2021 ஜனவரி மாதம் கட்சியை தொடங்கவுள்ளதாக அறிவித்திருந்தார். ஆனால், கடந்த 2020 டிசம்பர் மாதம் 29ம் தேதி, உடல் நல குறைவு காரணமாக கட்சி தொடங்குதல் மற்றும் அரசியலில் இருந்து விலகினார் நடிகர் ரஜினிகாந்த். மேலும், 'அரசியலுக்கு வராமல் மக்களுக்கு சேவை செய்வேன்' என்று கூறினார். இது போன்ற காரணங்களால் அரசியலில் இருந்து விலகியே இருந்தார். வெளிப்படையாக மட்டுமின்றி எந்த கட்சியையும் ஆதரிக்காமலும் இருந்து வந்தார். ஆனால், தற்போது ஆதவ் அர்ஜுனா மூலம் மீண்டும் அரசியல் பிரவேசத்திற்கு வருகிறாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ரஜினியின் அரசியல் களம்:
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், 1996-ல் முதன்முறையாக அரசியல் களத்தில் இறங்கியதிலிருந்து, தனது அரசியல் பிரவேசம் குறித்து கூறிவந்து கொண்டிருந்தார். ரசிகர்களும் அவருடைய அரசியல் வருகைக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தனர். அப்போதிருந்து 2017 வரை, அவரது அரசியல் பிரவேசம் குறித்த யூகங்கள் ஓயாமல் வந்த வண்ணம் இருந்தன. இருப்பினும், 2017-ஆம் ஆண்டின் கடைசி நாளில், "நான் அரசியலுக்கு வருவது நிச்சயம்" என்று கூறி அந்த யூகங்களுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்தார். அதன் பின்பு, நடிகர் ரஜினிகாந்த், தற்போது உடல்நலக் கவலைகளைக் காரணம் காட்டி, அரசியலில் இருந்து விலகினார். "மிகுந்த வருத்தத்துடன் நான் அரசியலில் நுழைய முடியாது என்று கூறுகிறேன். இந்த முடிவை அறிவிக்கும்போது நான் பட்ட வேதனையை நான் மட்டுமே அறிவேன்," என்று அவர் அறிக்கை வழியாக கூறினார்.
தனக்கென்று ஒரு கட்சி இல்லையென்றாலும், அரசியலில் ரஜினிகாந்தின் பங்கு அன்றிலிருந்து இன்று வரை இருந்துகொண்டேதான் இருக்கிறது.
அரசியல் களம்:
1996ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால், கடவுளால்கூட தமிழ்நாட்டைக் காப்பாற்ற முடியாது என்று ரஜினிகாந்த் வெளிப்படையாகக் கூறினார். அப்போது அவர் திமுக-தமாகா கூட்டணியை ஆதரித்தார், அச்சமயத்தில் அக்கூட்டணி தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றது. அதன் பின்பு, 1999 முதல் 2003ம் ஆண்டு வரை ரஜினிகாந்த் எந்த அரசியல் கட்சிக்கும் அல்லது கூட்டணிக்கும் ஆதரவு அளிக்காமலேயே இருந்தார். அதன்பின்பு, டிசம்பர் 31, 2017ம் ஆண்டு ரஜினிகாந்த் அரசியலில் பிரவேசிப்பதாக அறிவித்தார். சமீபத்தில், தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா, ரஜினிகாந்த அரசியலுக்கு வரக்கூடாது என்று திமுக அரசு மிரட்டியதாக கூறியிருந்தார். தவெக கட்சியின் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா , மார்ச் 12 அன்று மாநில அரசுக்கு எதிரான போராட்டத்தில் கட்சி உறுப்பினர்களிடையே உரையாற்றியபோது இந்தக் கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். அவரது கருத்துக்கள் அரசியல் தலைவர்கள் மற்றும் ரஜினிகாந்தின் ஆதரவாளர்களிடமிருந்து உடனடியாகக் கண்டனத்தைப் பெற்றன. இந்த சர்ச்சையை குறித்து ரஜினிகாந்த், ஆதவ் அர்ஜுனா கருத்திற்கு எதிராக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், தவெக கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் திரு.ஆதவ் அர்ஜுனா அவர்கள் சமீபத்தில் "என்னைப் பற்றி உண்மைக்கு மாறான ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார். அவருடைய அவதூறுக் கருத்தைக் கண்டித்து, எனக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் மதிப்பிற்குரிய எடப்பாடி திரு.பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் திரு.நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் திரு.எல்.முருகன், தமிழக அமைச்சர் திரு.ரகுபதி, திரு.தொல்.திருமாவளவன், திரு.எஸ்.பி.வேலுமணி, நண்பர் திரு.அண்ணாமலை, திரு.அர்ஜுனமூர்த்தி, திரு.அன்புமணி ராமதாஸ், திரு.ஜி.கே. வாசன், திரு.ஜான் பாண்டியன், திரு.புகழேந்தி மற்றும் பல கட்சி அரசியல் தலைவர்கள், திரு.அமீர், திரு.ஜி.தனஞ்சயன் மற்றும் திரையுலக நண்பர்கள், மற்றும் திரு.நக்கீரன் கோபால், சாணக்கியா திரு.ரங்கராஜ் பாண்டே மற்றும் ஊடகத்துறையினர், என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்". "காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்".வாழ்க தமிழ்நாடு! வளர்க தமிழக மக்கள்!! ஜெய்ஹிந்த்!!! அன்புடன் ரஜினிகாந்த் என்று அந்த அறிக்கையை முடித்திருந்தார்.
தலைவர்களின் தாமதக் கண்டனம்:
எடப்பாடி திரு.பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் திரு.நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் திரு.எல்.முருகன் மற்றும் அண்ணாமலை போன்றோரின் கண்டனங்கள் ஆதவ் அர்ஜுனாவின் பேச்சுக்கு உடனடியான எதிர்ப்பாக இல்லாமல், தாமதமாகவே வந்து சேர்ந்தது. இதற்கு காரணமாக கூறப்படுவது, தவெக, NDA கூட்டணியுடன் இணைய பேச்சுவார்த்தை நடப்பதாக வந்த செய்திகளே ஆகும். கடந்த சில நாட்களாக தவெகவை NDA கூட்டணியுடன் சேர்க்க பலகட்டங்களாக பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி உடன்படாத நிலையிலேயே இருந்துவந்தது. அதன்பின்பு, முழுமையாக தவெக தரப்பில் இருந்து கூட்டணியில் இருந்து விலகி தேர்தலை சந்திக்கபோவதாக தகவல்கள் வந்த பின்பே அதிமுக மற்றும் பிஜேபி தலைவர்கள் ஆதவ் அர்ஜுனாவின் பேச்சுக்கு கண்டனங்களை தெரிவித்தனர். இந்த தாமதத்திற்கு கூட்டணி பேச்சுவார்த்தையும் ஒரு காரணம் என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றனர்.
ரஜினியின் பதிலடி:
நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட கண்டன அறிக்கையில் தலைவர்களுக்கு நன்றி செலுத்திவிட்டு, ஆதவ் அர்ஜுனா கூறியதற்கு மறுப்புத் தெரிவித்த நிலையில், அறிக்கையின் இறுதியில், ஒரு 'மாஸான பஞ்ச்' வைத்து முடித்திருந்தார். அந்த பஞ்ச்'க்கு பின்னால் என்ன இருக்கிறது?. காலம் பேசாது, ஆனால் காத்திருந்து பதில் சொல்லும் என்று அவர் குறிப்பிட்டிருந்தது, தேர்தலைதான் என்றும், தன்னைப்பற்றி தேவையற்ற உண்மைக்கு புறம்பான அவதூறுகளை பரப்பியதற்கு காலம் (தேர்தல்) பதில் சொல்லும் என்று கூறியிருப்பது, விஜயின் வாக்கு வங்கிகளை வெகுவாக பாதிக்க வாய்ப்பிருக்கிறது. 1996 அன்று நடிகர் ரஜினிகாந்த் கூறிய அந்த ஒற்றை வார்த்தை அன்றைய தேர்தல் சூழலையே தலைகீழாக புரட்டிப்போட்டது. அதே நிலை மீண்டும் இன்று விஜய்க்கு நடக்க வாய்ப்பிருக்கிறது. ரஜினி ரசிகர்கள் மத்தியில் ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு மிகப்பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட அறிக்கையில் மறைந்துள்ள மறைமுக 'பஞ்ச்' ரசிகர்களிடம் வேலைசெய்ய துவங்கிய உள்ளது. நெடுங்காலமாக அரசியலில் இருந்து ஒதுங்கியே இருந்த நடிகர் ரஜினிகாந்தை மீண்டும் அரசியலுக்கு அழைத்து வந்துவிட்டார் ஆதவ் அர்ஜுனா. மேலும், ரஜினியின் அறிக்கைகையின் வெளிப்பாட்டை வரவிருக்கும் 2026 தேர்தலில் கண்டிப்பாக பார்க்கமுடியும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.