இனி "காளியாட்டம்" ஆடுவாரா காளியம்மாள்? "ஹேப்பி அண்ணாச்சி" மோடில் அதிமுக!

இனி "காளியாட்டம்" ஆடுவாரா காளியம்மாள்? "ஹேப்பி அண்ணாச்சி" மோடில் அதிமுக!
Published on
Updated on
2 min read

நாம் தமிழர் கட்சியின் மகளிர் அணி மாநில ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள், கட்சியில் சீமானுக்கு அடுத்தபடியாக நான்கு அறியப்பட்ட பேச்சாளர் என்றால் அது இவர்தான். மேலும் இவர் 2025, பிப்ரவரி 24ம் தேதி நாதகவில் இருந்து விலகினார். காளியம்மாள் கண்டிப்பாக தவெகவில் இணைவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது அவர் அதிமுகவில் இணைந்துள்ளார். யார் இந்த காளியம்மாள்?சீமானுக்கு அடுத்து பிரபல முகமாக மாறியது எப்படி?

ஆரம்பகால வாழ்க்கை: காளியம்மாளின் சொந்த ஊர் நாகப்பட்டினம். இவர் ஒரு மீனவக் குடும்பத்தைச் சேர்ந்த பெண். பி.காம் பட்டதாரியான காளியம்மாள், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக் கொண்டிருந்தபோது நாம் தமிழர் கட்சியின் அறிமுகம் கிடைத்தது. பின் அக்கட்சி கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, நாம் தமிழர் கட்சியில் சேர்ந்தார். அதன் பின்பு நாம் தமிழர் கட்சியின் மிகச்சிறந்த பேச்சாளராக திகழ்ந்து வந்தார். இவர் 2019 லோக்சபா, 2021 சட்டமன்றம், 2024 லோக்சபா தேர்தல்களில் போட்டியிட்டு, என்டிகே மகளிர் அணி மாநில ஒருங்கிணைப்பாளரானார். நாம் தமிழர் கட்சியின் முக்கிய பெண் முகமாகக் கருதப்படும் காளியம்மாள், 2024 பொதுத் தேர்தலில் மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதியில் நாதக கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்திப் போட்டியிட்டு 1.2 லட்சம் வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்தார்.

கட்சியுடன் மோதல்: காளியம்மாளுக்கும் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் இடையே தொலைபேசி வாயிலாக நடந்த உரையாடலின் ஆடியோ கிளிப் கசிந்தது. இதனால் அவர்கள் இருவரும் நல்லுறவில் இல்லை என்று வெளிப்படையாகவே தெரிந்தன. இந்நிலையில் 2025, பிப்ரவரி 24ம் தேதி நாம் தமிழர் கட்சியில் இருந்து காளியம்மாள் ராஜினாமா செய்தார். மேலும் இவர் சமூக ஊடகங்களில் ஒரு பதிவில், 'சூழ்நிலைகள்தான் நாதக உடனான தொடர்பை முடிவுக்குக் கொண்டுவரும் முடிவை எடுக்க வைத்தது' என்று காளியம்மாள் குறிப்பிட்டிருந்தார். கடந்த ஆறு ஆண்டுகளில் சமூக மாற்றத்திற்கான தனது போராட்டம், தனது சக்திக்கு அப்பாற்பட்டது என்று கூறிய காளியம்மாள், கட்சியில் பணியாற்றிய ஆண்களும் பெண்களும் தன் மீது வைத்திருந்த நம்பிக்கையின் காரணமாக பல சவால்களைத் தாங்கியதாகக் கூறினார்.

"இதுவரை, உங்கள் அன்பு மற்றும் பாசத்தின் காரணமாக நான் நெருக்கடியின் போதும் பொறுமையாக இருந்தேன். ஆனால் முடிவு செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை உங்களுக்குத் தெரிவிக்க வருந்துகிறேன். அவதூறுகளைப் பரப்பும் இந்த நிலையில், உண்மையிலேயே தங்கள் ஆழ்ந்த பாசத்தைக் காட்டியவர்களுக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். இந்த முடிவு பலரை, என்னைக் கூட ஏமாற்றியிருக்கலாம்," என்று காளியம்மாள் நாதக தொண்டர்கள் மற்றும் உலகத் தமிழர்களுக்கு உரையாற்றிய அறிக்கையில் கூறினார். மேலும் தமிழ் தேசியத்தை வளர்ப்பதற்கான தனது பயணம் தொடரும் என்றும் அவர் கூறியிருந்தார். இருப்பினும், ராஜினாமா அறிக்கையில் நாதக தலைவர் சீமான் பற்றி ஒரு வார்த்தை கூட காளியம்மாள் குறிப்பிடப்படவில்லை.

தவெகவிற்கு ஏமாற்றம்.. நாதகவில் இருந்து வெளியேறிய காளியம்மாள் விஜயின் தவெக கட்சியில் விரைவில் இணைவார் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. அதுமட்டுமின்றி, காளியம்மாள் ராஜீவ்காந்தி மூலமாக அமைச்சர் அன்பில் மகேஷ் முன்னிலையில் திமுகவில் இணைய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், எம்பி சீட் கேட்பதாகவும் கிசுகிசுக்கப்பட்டு வந்தது. மேலும் ஆதவ் அர்ஜுனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய இருக்கிறார் என்ற தகவலும் அச்சமயத்தில் உலாவந்தது.

இந்நிலையில், காளியம்மாள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய போவது தனக்கு ஏற்கனவே தெரியும் எனக் கூறியிருந்தார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான். சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் தமிழக வெற்றிக் கழகத்தில் காளியம்மாள் இணையப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர் "அது எனக்கு முன்னாடியே தெரியும். நான் தங்கச்சியை வாழ்த்தி விட்டேன். அவர் எங்கிருந்தாலும் நன்றாக இருப்பார்" கூறி சென்றார். இதன் மூலம் காளியம்மாள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவது உறுதி என்று பலராலும் கூறப்பட்டது.

கொண்டாட்டத்தில் அதிமுக: தற்போது, காளியம்மாள் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுகவில் (பாஜகவுடன் கூட்டணி) மார்ச், 13ம் தேதி இணைந்துள்ளார். அதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்த காளியம்மாள் இதுகுறித்து பேசினார். "ஒரு தமிழனின் தலைமையில் இயங்கவே அதிமுகவில் இணைந்திருக்கிறேன். சாதாரண குடும்பத்தில் இருந்த வந்த எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்று அதிமுகவில் இணைக்கிறேன். அதிமுகவில் இணைந்தது ஒருங்கிணைந்து எடுத்த முடிவு" என்று அவர் செய்தியாளர்கள் முன்னிலையில் பேசியிருந்தார். மேலும், காளியம்மாளுக்கு அதிமுகவில் கொள்கை பரப்பு இணைச் செயலாளர் பொறுப்பு கொடுக்கப்படவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஏற்கெனவே, தம்பிதுரை கொள்கை பரப்புச் செயலாளராக இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதுமட்டுமின்றி, 2026 சட்டமன்றத் தேர்தலில், மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடுவதற்கான பேச்சுவார்த்தையும் நடந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. கூட்டணியில் பாமகவுக்கு அந்தத் தொகுதி செல்லாத பட்சத்தில், காளியம்மாளுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இவர் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன் தொகுதி வேட்பாளர் தேர்வில் முக்கியத்துவம் பெறவும் வாய்ப்புள்ளது. மேலும், காளியம்மாள் கடலோர மக்களின் முன்னேற்றத்தில் முனைப்புடன் பங்காற்றி வருவதாலும், பெண்களின் முன்னேற்றத்திலும் அவரது பங்களிப்பு அளப்பரியது என்பதாலும் அதிமுகவினர் பெண்களின்பால் ஈர்க்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், அதிமுகவுடன் தன்னுடைய தமிழ் தேசியக்கனவை சேர்த்து காளியம்மாள் பயணிப்பாரா? அவரின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் என்னவாக இருக்கும்? இது 2026 தேர்தல் பாதையை மாற்றுமா? என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com