ராஜீவ் vs செல்லூர் ராஜு: சோப்பு, ஷாம்புவால் ஆற்றில் நுரையா? “நோபல் பரிசு கொடுக்கலாம்!” – விமர்சனத்துக்கு உள்ளான தவெக அமைச்சரின் விளக்கம்?

"மக்கள் பயன்படுத்தும் சோப்பு, ஷாம்பு கலந்த தண்ணீர் ஆற்றில் கலக்கும்போதும் நுரை ஏற்படுவதாக..."
minister rajiv
Published on: 
Updated on: 
2 min read

நேற்று திருப்பூர் காசிபாளையம் பொது சுத்திகரிப்பு நிலையத்தில் சாயக் கழிவுநீர் சுத்திகரிப்பு கட்டமைப்புகளை தவெக அமைச்சர் வி.கே. இராஜிவ் ஆய்வு செய்தார்.

வடகிழக்கு பருவமழை காரணமாக திருப்பூர் மாவட்டம் நொய்யல் ஆற்றில் நுரைகளுடன் கூடிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தனியார் ஆலைகளின் ரசாயனக் கழிவு நேரடியாக ஆற்றில் கலக்கப்படுவதால் ஏற்படும் மாசு காரணமாகவே ஆற்றில் நுரை பொங்கி எழுவதாக அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் நடவடிக்கை எடுக்க அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறார்கள். 

இந்நிலையில் ஆய்வுக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் வி.கே. இராஜிவ் இது குறித்து விளக்கமளித்திருந்தார். “மழைக் காலங்களில் ஆற்றில் தண்ணீர் அதிகமாகச் செல்லும்போது அதிக அளவில் நுரை பொங்குவதாக” தெரிவித்தார். மக்கள் பயன்படுத்தும் சோப்பு, ஷாம்பு கலந்த தண்ணீர் ஆற்றில் கலக்கும்போதும் நுரை ஏற்படுவதாக சர்ச்சைக்குரிய காரணத்தை குறிப்பிட்டிருந்தார். அதேவேளையில், மழையைப் பயன்படுத்திக்கொண்டு சாயப்பட்டறைகள் மற்றும் ஜவுளித் தொழிற்சாலைகளில் இருந்து ரசாயனக் கழிவுகளைச் சுத்திகரிக்காமல் ஆற்றில் திறந்துவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

தவெக ஆட்சியில் அதிகாரிகள் இரவு, பகல் பாராமல் ஆய்வுகளை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பது, ஆலைகளை மூடுவது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றும் தெரிவித்தார்.

அமைச்சரின் இந்த விளக்கம் தற்போது விவாதப் பொருளாகியுள்ளது. ஆற்றில் ஏற்படும் நுரைக்கான காரணம் குறித்த அவரது கருத்துக்கு சமூக வலைதளங்களில் பலரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அந்த வகையில் ஆறுகளில் நுரை பொங்குவதற்கு சோப்பு, ஷாம்பு பயன்பாடுதான் காரணமா? யாருடைய குரலாக ஒலிக்கிறார் சுற்றுச்சூழல் அமைச்சர்? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

திருப்பூரில் ஓடும் நொய்யல் உள்ளிட்ட ஆறுகளில் நுரை பெருக்கெடுப்பதற்கு சோப்பு மற்றும் ஷாம்பு பயன்பாடுதான் காரணம் என்று சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டுத் துறை அமைச்சர் மருத்துவர் வி.கே. ராஜீவ் கூறியிருப்பது அதிர்ச்சியளிப்பதாகவும், இந்தக் கருத்தைத் தெரிவித்திருப்பவர் தமிழக சுற்றுச்சூழல் அமைச்சர் என்பது வருத்தமும் கவலையும் அளிப்பதாகவும் அன்புமணி தெரிவித்துள்ளார்.

இத்தகைய சூழலில், ஆறுகளில் நுரை பொங்குவதற்கு சோப்பு, ஷாம்பு பயன்பாடுதான் காரணம் என நகைச்சுவை செய்வதைத் தவிர்த்து, ஆறுகளைப் பாதுகாக்க சுற்றுச்சூழல் அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

அதையடுத்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, தவெக அமைச்சரின் இந்த விளக்கத்தை விமர்சித்துள்ளார். "ஷாம்பு, சோப்பால் ஆற்றில் நுரை வருதுன்னு சொன்ன அமைச்சருக்கு ‘நோபல் பரிசே’ கொடுக்கலாம்.. இது உலகமகா கண்டுப்பிடிப்பு. நான் எகிப்தை ஈஜிபுத்-னு சொன்னதுக்கு என்ன எப்படிலாம் ஓட்டுனீங்க? தெர்மாக்கோல்னுலாம் சொன்னீங்களே.. இதுக்குலாம் எதுவும் சொல்ல மாட்டீங்களாபா? அட என்னங்கப்பா போங்கப்பா.. அழுவ விடுறீங்கப்பா.." என்று நகைச்சுவையாக விமர்சித்திருந்தார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com