“கரூரிலேயே விஜயை முடித்திருக்கலாம்” எனப் பேசியதாக கூறப்படும் திமுக கவுன்சிலர் டீட்டா சரவணனை விழுப்புரத்தில் போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ், கடந்த ஆட்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக செயல்பட்டார். அப்போது தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், தர உயர்வு, DTCP அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி 100 கோடி ரூபாய் வரை வசூலித்து மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் திமுக நிர்வாகி பிடி அரசகுமார் உள்ளிட்ட 3 பேர் கடந்த ஜூலை மாதம் கைது செய்யப்பட்டனர்.
அதன் அடிப்படையில் கடந்த திங்கட்கிழமை அன்பில் மகேஷ் சென்னை அமைந்தகரையில் கைது செய்யப்பட்டார். அவர் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்த திமுகவினர் கோஷங்கள் எழுப்பியதாகக் கூறப்படுகிறது. அப்போது, “கரூரிலேயே விஜயை முடித்திருந்தால் இந்த நிலை வந்திருக்குமா?” என ஒருவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வீடியோவில் பேசிய நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்ததாகத் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், அந்த நபர் வேலூர் மாநகராட்சியின் 12-வது வார்டு கவுன்சிலரான டீட்டா சரவணன் என்பது தெரியவந்தது. இதற்கிடையே, நண்பர்களுடன் பெங்களூரு செல்வது போல் காட்டிக்கொண்டு, விழுப்புரத்தில் பதுங்கியிருந்த டீட்டா சரவணனை போலீசார் கைது செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்