
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தங்களின் வெற்றியை உறுதி செய்ய பம்பரமாக சுழன்று கொண்டு இருக்கின்றன. ஆளுங்கட்சியான திமுக ஆட்சிக் கட்டிலிருந்து இறங்கத் தயாராக இல்லை. அவர்களின் கூட்டணிக்குள் சலசலப்புகள் இருந்தாலும் அது இன்னும் பொதுவெளிக்கு வரவில்லை. ஆனால், பிரதான எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக -வின் சண்டை மூலைமுடுக்குகளில் எல்லாம் பேசுபொருளாகியுள்ளது.
கடந்த ஏப்ரல் 11 அதிமுக -வும் பாஜக -வும் தங்களின் கூட்டணியை உறுதி செய்தன. ஆனால் கூட்டணி வைத்த நாளிலிருந்தே அதிமுக -பாஜக கூட்டணி அடிமட்ட அளவில் ஒன்றிணையவில்லை என்ற கூற்று சொல்லப்பட்டு வந்தது. ஆனால் அதையெல்லாம் சரிசெய்து இப்போதுதான் இரு கட்சிகளும் தங்களின் ஒற்றுமையை உறுதி செய்து வருகின்றனர். ஆனால், சமீபத்தில், NDA கூட்டணியிலிருந்து ஒவ்வொருவராக கழன்றுகொண்டு வரும் போக்கும் நிகழ்கிறது.
முதலில் ‘சுயமரியாதை’ தான் முக்கியம் எனக்கூறி ஓபிஎஸ் வெளியேறினார். அவரைத்தொடர்ந்து ‘துரோகிகள் திருந்தமாட்டார்கள்’ எனக்கூறி டிடிவி தினகரனும் வெளியேறினார். கடைசிவரை கட்சிக்கு விசுவாசமாக இருந்த செங்கோட்டையனும் இபிஎஸ் கட்சியை ஒன்றிணைக்க வேண்டும் எனக்கூறி கெடு விதித்திருந்தார். இது போதாது என்று சசிகலா -வும் கட்சி ஒன்றிணைய வழி செய்யுங்கள் என இபிஎஸ் -க்கு அழைப்பு விடுத்தார். ஆனால் எடப்பாடி யாரையும் கண்டுகொள்வதாக இல்லை. அதிமுக என்றால் அது நான் மட்டும்தான் என்பதில் மிகத்தெளிவாக இருந்தார். பாஜக தலைமையும் அதையேத்தான் உறுதி செய்தது.
இத்தகு பரபரப்பான சூழலில்தான் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி அமித்ஷாவை சந்தித்தார். அவர் அமித்ஷாவை சந்தித்து வந்ததே பெரும் பேசுபொருளாக மாறிய நிலையில் அவர் அமித்ஷாவை சந்தித்து என்ன பேசினார்? என்பது குறித்து பல விவாதங்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
அமித்ஷா -இபிஎஸ் சந்திப்பு குறித்து தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த மூத்த பத்திரிகையாளர் பிரியன் பேசுகையில், “ எடப்பாடி பழனிச்சாமி திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளின் மீதான நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும் என ஏற்கனவே கோரிக்கை வைத்துவிட்டார், வேலுமணி, தங்கமணி மூலமாக தொடர்ச்சியாக வற்புறுத்திக் கொண்டுதான் இருக்கின்றனர். மேலும் அமலாக்கத்துறை நிதியமைச்சர் நிர்மலா சீத்தராமனுக்கு கீழ் இருந்தாலும், அது முழக்க முழக்க அமித்ஷா கட்டுப்பாட்டில் தான் இயங்குகிறது. மேலும் டாஸ்மாக் உள்ளிட்ட பல வழக்குகளில் அமலாக்க துறை, நீதிமன்றத்திடம் செமையாக வாங்கிக்கட்டிக்கொண்டது. அதுமட்டுமின்றி தொடர்ந்து பாஜக -வின் கைப்பாவையாக செயல்படுவதால் நீதிமன்றம் அமலாக்கத்துறைக்கு கெடுபிடிகளை விதித்து வருகிறது. அதனால் தான் அவர்களால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. ஆனால் இதில் வேடிக்கை என்னவென்றால் ‘சாத்தன் வேதம் ஓதுவது போல” எடப்பாடி ஊழல் தடுப்பு நடவடிக்கைகளை பற்றி பேசுகிறார். அதிமுக அமைச்சர்கள் மீதே ஏகப்பட்ட ஊழல் வழக்கு நிலுவையில் உள்ளது. ஆனால் இந்த திமுக அரசு அதிமுக அமைச்சர்கள் மீதான வழக்குகளை கண்டு கொள்வதே இல்லை. அதனால்தான் அதிமுக -வினர் தாங்கள் சுத்தமானவர்கள் என்பது போல காட்டிக்கொள்கின்றனர். கொடநாடு வழக்கு என்ன ஆனது என்றே தெரியவில்லை. இந்த மாதியான மெத்தனத்துக்கு என்ன காரணம் என்று புரியவில்லை.
மேலும் கடந்த நான்கரை ஆண்டுகாலமாக ஊழல் வழக்குகளில் சிக்கியிருக்கும் அதிமுக அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் திமுக -விற்கு என்ன பிரச்சனை?. ஒருவேளை திமுக முயற்சி செய்து ஆளுநர் ஒத்துழைப்பு தரவில்லை என்றால், அதையும் பொதுவெளியில் சொல்லலாமே, ஏன் தயக்கம்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.