

முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நடிகை திரிஷா குறித்து பேசியதற்கு மதுரை மாவட்டத்தில் திரிஷா நற்பணி மன்றத்தினர் தங்களது கண்டனத்தை தெரிவித்து போஸ்டர் ஒன்றினை ஒட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் வெளிட்ட வீடியோ ஒன்றில் திரை துறையில் முதல்வர் விஜய்யின் திரைப்படங்களை தயாரித்தவர்கள், அதில் பணியாற்றியவர்களுக்கு அரசுப்பணி தருவது குறித்து பேசினார். மேலும், அதில் பல்வேறு கேள்விகளையும், விமர்சனங்களையும் முன்வைத்து அந்த வீடியோவில் பேசினார். குறிப்பாக அதில், முதல்வர் விஜய்யின் அன்புக்குரியவரான 'அண்ணி திரிஷா மேடம்' அவர்களை எப்போது தமிழ்நாட்டின் துணை முதல்வராக நியமனம் செய்து அறிவிப்பு வெளிவரும் என்று அதிர்ச்சியோடு ஆவலோடும் காத்திருக்கிறது தமிழகம் என்று நடிகை திரிஷா குறித்தும் அவர் தனது வீடியோவில் பேசியுள்ளார். இதனை எதிர்த்து, மதுரை முழுவதிலும் கண்டன போஸ்டர்கள் ஒட்டி எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர்.
அக்கா திரிஷா பற்றி யார் தவறாக பேசினாலும் ஏற்க முடியாது மாபெரும் ஆர்ப்பாட்டம் செய்வோம் என்று திரிஷா நற்பணி மன்றத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். திரிஷா நற்பணி மன்றத்தின் சார்பில் மதுரை முழுவதிலும் திரிஷா குறித்து பேசிய முன்னாள் அமைச்சர் R.B. உதயகுமார் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கும் வகையில் மதுரை மாவட்ட திரிஷா நற்பணி மன்றம் சார்பில் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
அதில், "இருவரின் நட்பை கொச்சை படுத்தும் நோக்கில் பேசியது கண்டனத்துக்குறியது. 'யாகாவா ராயினும் நாகாக்க வேண்டும்' என்ற குறளுக்கு ஏற்றவாறு பேசுவது தமிழ் மக்களின் மாண்பு! முன்னாள் அமைச்சரே!! மாண்பு தவற வேண்டாம்!. எங்கள் அன்பு அக்கா திரிஷா அவர்களைப் பற்றி யார் தவறாக பேசினாலும் எங்களால் ஏற்க முடியாது. மீறினால் மாபெரும் ஆர்ப்பாட்டம் செய்ய நேரிடும்" என போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
மேலும், "பெண்கள் நம் நாட்டின் கண்கள்" என்ற வாசகங்களோடு மதுரை மாவட்டம் திரிஷா நற்பணி மன்றத்தினர், மதுரை மாநகர் முழுவதிலும் சுவரொட்டிகளை ஒட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், திரிஷா நற்பணி மன்றம் தொடங்கியதில் இருந்து உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராகவும் தற்போது ஆர்.பி. உதயகுமாருக்கு எதிராகவும் தொடர்ந்து கண்டன போஸ்டர்களை ஒட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பு, "தமிழக வீரமங்கை வேலுநாச்சியார் வழியில், தமிழக சங்க வரலாற்றில் முதல் முறையாக எங்கள் அன்பு அக்கா திரிஷா-விற்கு தமிழக அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட முதல் சங்கம்" என்ற வாசகத்தோடும், "எந்த ஒரு அரசியல் கட்சியும் ஆரம்பிக்கும் முதல் மண் எங்கள் மதுரை" என்றும் "மதுரை மீனாட்சி தாய் ஆசிர்வாதத்தால்" என்ற வாசகங்களுடன் ரசிகர்கள் போஸ்டர்களை ஓட்டி நடிகை திரிஷாவை அரசியலுக்கு அழைப்பது போல் இந்த போஸ்டர்களை ஓட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்