

கடந்த திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம், தேர்ந்தெடுக்கப்பட்ட 1 கோடியே 75 ஆயிரத்து 492 பேருக்கு மாதந்தோறும், 15ம் தேதியன்று ரூபாய் 1,000 அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. சட்டசபை தேர்தல் நெருக்கத்தில், விடுபட்ட பெண்களை சேர்க்க, 2025ம் ஆண்டின் இறுதியில் தமிழக அரசு சார்பில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு, விடுபட்டவர்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன. அதில் 28 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில், 16.94 லட்சம் பேர் தேர்வு செய்யப்பட்டு, 2025 டிசம்பர் முதல் 1.31 கோடி பயனாளிகளின் வங்கி கணக்கில் மாதந்தோறும், 1.000 ரூபாய் செலுத்தப்பட்டு வந்தது.
இந்த மாதம் சிலருக்கு மகளிர் உரிமைத் திட்டம் இன்னும் வரவில்லை என சொல்லப்படுகிறது. இதற்கு காரணம் இரண்டாம் கட்டத்தில் சேர்க்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர், அரசு நிபந்தனைக்கு உட்படவில்லை என்ற காரணம் சொல்லப்படுகிறது.
இதுகுறித்து பாஜக மாநில தலைவர், நயினார் நாகேந்திரன் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். “மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 தருவோம் என ஆசை காட்டி, ஏற்கெனவே வந்த ரூ.1,000-ஐயும் பறிப்பதா?” என்றும் வாக்குறுதி மீறலைத் தொடருக்கிறது தவெக அரசு என்றும் கட்டமான கேள்வி எழுப்பியுள்ளார்.
“சிறப்பு முகாம் மூலம் இரண்டாம் கட்டமாக சேர்க்கப்பட்ட 16.94 லட்சம் பயனாளிகளில், 50 சதவீதத்திற்கும் அதிகமானோருக்குக் கடந்த மூன்று மாதங்களாக உதவித் தொகை நிறுத்தப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள புகார்கள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. 1.31 கோடி பெண்கள் மாதந்தோறும் பயனடைந்து வந்த இத்திட்டத்தில், தற்போது லட்சக்கணக்கான ஏழைப் பெண்களின் வங்கிக் கணக்குகளுக்குப் பணம் வராமல் முடக்கப்பட்டிருப்பது தவெக அரசின் ஏழைப் பெண்கள் மீதான அலட்சியப் போக்கை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
2026 சட்டமன்றத் தேர்தலில், “மகளிர் உரிமைத் தொகையை மாதம் ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்குவோம்” எனக் கவர்ச்சிகரமான வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய், கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாதது மட்டுமின்றி, ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்த ரூ.1,000 தொகையையும் நிறுத்தித் தமிழகப் பெண்களுக்குப் பச்சைத் துரோகம் இழைத்துள்ளார். இப்படித் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றுவது தொடர்கதையாகிவிட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, தேர்தல் வாக்குறுதியை மீறி மகளிரை வஞ்சிக்கும் திரு. ஜோசப் விஜய் அரசின் இந்த மக்கள் விரோதப் போக்கை தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். உடனடியாகப் பாதிக்கப்பட்ட அனைத்துப் பயனாளிகளுக்கும் நிறுத்தப்பட்ட கடந்த மூன்று மாதங்களுக்கான ரூ.1,000 நிலுவைத் தொகையை எவ்விதச் சாக்குப்போக்கும் இன்றி வங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டும்.
மேலும் முன்னாள் திமுக அமைச்சர் கீதா ஜீவன், மகளிர் உரிமை தொகை நிறுத்தி வைக்கப்பட்டதற்கு தனது எக்ஸ் தளத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில் கடந்த அக்டோபர் 24-ஆம் தேதி விருதுநகரில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் விரைவில் மாதம் ரூ.2,500 வழங்கப்படும் என்று அறிவித்தார். அறிவிப்புக்கு முற்றிலும் மாறாக வழங்கப்பட்டு வந்த ரூ.1,000 உரிமைத்தொகையைத் தொடர்ந்து வழங்காமல் நிறுத்த முனைவது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
எதிர்க்கட்சிகளும் பொதுமக்களும் முன்வைக்கும் கேள்விகளுக்கு எந்தவித பதிலும் சொல்லாமல் மெளனமாக இருக்கும் முதல்வர் இதற்காவது உரிய விளக்கத்தை அளிப்பாரா? தி.மு.க ஆட்சியில் உருவாக்கப்பட்ட மக்கள் நலத்திட்டங்களை முடக்குவது நல்லாட்சிக்கான அடையாளமல்ல; மக்களின் நம்பிக்கைக்கு செய்யும் துரோகம். எனவே உடனடியாக அனைத்து பயனாளிகளுக்கு மகளிர் உரிமைத் தொகையை விடுவிக்க வேண்டும் என முதலமைச்சரை வலியுறுத்துவதாக தெரிவித்தார்.
இந்நிலையில் மகளிர் உரிமைத் தொகை தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. எந்தவொரு சிறப்பு நீக்க நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அதுதொடர்பான தகவல் முற்றிலும் தவறானது என்றும் அரசு விளக்கம் கொடுத்துள்ளது. பயனாளிகளில் யாரேனும் இறந்திருந்தால், அந்த விவரங்களின் அடிப்படையில் பயனாளிகள் பட்டியல் ஒவ்வொரு மாதமும் புதுப்பிக்கப்படும். மேலும் தாங்களாகவே திட்டத்திலிருந்து விலக விருப்பம் தெரிவித்தால், அதை ஏற்று அவர்கள் மட்டும் நீக்கப்பட்டு பட்டியல் உருவாகும். 2ஆம் கட்டத்தில் புதிதாக சேர்க்கப்பட்ட 17 லட்சம் பயனாளிகளில் 50% பேர் திட்டத்திலிருந்து நீக்கம் என்று பரவும் செய்தி முற்றிலும் தவறானது என்றும் தமிழக அரசு சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்