ராஜினாமா செய்த அதே வேட்பாளர்கள்.. அதிருப்தி ஓட்டுகளை அள்ளுவாரா சீமான்?

இந்த மோதலில் வெற்றி வாய்ப்பு நாம் தமிழர் கட்சிக்கு கிடைக்குமா? என்ற கண்ணோட்டமும் எழுந்துள்ளது
ராஜினாமா செய்த அதே வேட்பாளர்கள்.. அதிருப்தி ஓட்டுகளை அள்ளுவாரா சீமான்?
Published on
Updated on
2 min read

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் மற்றும் சத்யபாமா ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்தனர். அதனால், அந்தத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தனித் தொகுதிகளான இந்த இரண்டு தொகுதிகளிலும் அக்டோபர் 6-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. மேலும், அக்டோபர் 9-ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், மீண்டும் தமிழகம் தேர்தல் களத்துக்குள் வந்துள்ளது. குறிப்பாக, ராஜினாமா செய்த இருவரும் தற்போது விஜய் தலைமையிலான தவெகவில் இணைந்துள்ளனர். மேலும், இருவரையும் அவர்கள் ராஜினாமா செய்த அதே தொகுதிகளில் வேட்பாளர்களாக தமிழக வெற்றி கழகம் அறிவித்துள்ளது. அனைத்து கட்சிகளும் இந்த இடைத்தேர்தலை நோக்கி நகர்ந்துள்ளன. வேட்பாளர் அறிவிப்பு, கூட்டணி என அடுத்தடுத்த பணிகளை தொடங்கியுள்ளனர். மேலும், இந்தத் தேர்தலையும் முன்பை விட வேகம் கூடியதாகவே தெரிகிறது. தவெக தலைமையில் புதிய கூட்டணி, அதிமுக மற்றும் திமுகவின் வியூகம் என முற்றிலும் மாறுபட்ட பல்வேறு சூழல்களை இந்தத் தேர்தல் கொண்டுள்ளது.

இந்நிலையில், கடந்த சட்டமன்றத் தேர்தலை தனித்து எதிர்கொண்ட நாம் தமிழர் கட்சி, 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை களமிறக்கியது. 50 சதவீதம் ஆண் வேட்பாளர்கள், 50 சதவீதம் பெண் வேட்பாளர்கள் என்ற நிலைப்பாட்டுடன் தேர்தலை சந்தித்தது. இந்த அரசியல் நிலைப்பாடு வரவேற்கத்தக்கது என்று அரசியல் வட்டாரத்தில் பேச்சுக்கள் இருந்தாலும், ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. இந்நிலையில், இந்த இடைத்தேர்தலில் போட்டியிடலாமா? என்ற எண்ணம் இரண்டாம் கட்ட உறுப்பினர்களுக்கு ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனாலும், போட்டியிடலாம் என்ற நிலைப்பாட்டை நாதக தொண்டர்கள் வலியுறுத்துவதாகவும் கூறப்படுகிறது. அப்படி போட்டியிட முடிவு செய்தால், இன்று அல்லது நாளைக்குள் வேட்பாளர்களை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் நாதக சார்பில் போட்டியிட்ட ஜி. ஜானகிராமன் 4,950 வாக்குகள் பெற்று 4-ம் இடத்தை பிடித்திருந்தார். வெறும் 2.51% வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வியை சந்தித்திருந்தார். தாராபுரம் தொகுதியில் நாதக சார்பில் போட்டியிட்ட திவ்யா 6,026 வாக்குகள் மட்டுமே பெற்று 4-ம் இடத்தையே தக்க வைத்தார். இது வெற்றி வாய்ப்பை எட்டவே முடியாத சதவீதம்தான். ஒருபுறம், தவெக ராஜினாமா செய்த அதே வேட்பாளர்களை நிறுத்துவதால் மக்களிடையே அதிருப்தி ஏற்பட வாய்ப்புள்ளது என்றும், தற்போது வரை அந்தத் தொகுதிகள் அதிமுகவின் வசம் உள்ளது என்றும் சொல்லப்படுகிறது. இந்த மோதலில் வெற்றி வாய்ப்பு நாம் தமிழர் கட்சிக்கு கிடைக்குமா? என்ற கண்ணோட்டமும் எழுந்துள்ளது. கடந்த தேர்தலில் விஜய் பெரும்பான்மை பெற முக்கிய காரணமாக ஜென் Z வாக்குகள் இருந்தன. அந்தக் கோணத்தில் பார்த்தால், தவெக வேட்பாளர்கள் மீதான அதிருப்தி ஜென் Z அலை சீமானுக்கு கைகொடுக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுமே தனித் தொகுதிகள் என்பதால், வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதில் சரியான வியூகத்தை கையாண்டால் கணிசமான வாக்கு சதவீதத்தையாவது பெறலாம். குறிப்பாக, பிரசார ஸ்டைலை மாற்றி ஜென் Z-ஐ கவர முற்படுவதே இப்போதைக்கு தேவை என்பதை ஏற்றுக்கொண்டு களமிறங்கினால், வெற்றி வாய்ப்பை எதிர்பார்க்கலாம்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com