“அதிமுகவில் இருந்து 15 பேர் வெளியேறுவார்களா?” - அமைச்சர் செங்கோட்டையன் சொன்ன தகவல்.. எடப்பாடிக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!

தேர்தல் முடிந்து நான்கு முதல் ஐந்து மாதங்கள் ஆகியுள்ள நிலையில், பலரால் தேர்தல் களத்தில் கூட நிற்க முடியாத சூழல்..
sengottaiyan
sengottaiyan
Published on: 
Updated on: 
2 min read

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தன்னைக் கட்சியில் இருந்து நீக்கியதால் தான் இன்று மக்கள் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளதாகத் தெரிவித்தார். மேலும், அதிமுகவில் இருந்து விரைவில் 15 பேர் வெளியேற உள்ளதாக அவர் கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த செம்மாண்டம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வந்த பகுதி நேர நியாய விலைக் கடையை முழுநேரக் கடையாக மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் ரிப்பன் வெட்டி கடையைத் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து பொதுமக்களிடையே பேசிய அமைச்சர் செங்கோட்டையன், தமிழக அரசின் நிதி நிலைமை குறித்துப் பேசினார். அரசுக்குக் கடன் சுமை அதிகமாக இருந்தாலும், பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். பெண்களுக்கான கட்டணமில்லாப் பேருந்துப் பயணம், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்குத் தங்க மோதிரம் வழங்கும் திட்டம் மற்றும் குழந்தை நலப் பெட்டகம் உள்ளிட்ட திட்டங்களை அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், பெண்களின் திருமணத்திற்காக ஒரு சவரன் தங்கம் மற்றும் பட்டுப்புடவை வழங்கும் திட்டத்தைத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கொண்டுவர உள்ளதாகவும் செங்கோட்டையன் தெரிவித்தார். தொடர்ந்து அரசியல் நிலவரம் குறித்துப் பேசிய அவர், தேர்தல் முடிந்து நான்கு முதல் ஐந்து மாதங்கள் ஆகியுள்ள நிலையில், பலரால் தேர்தல் களத்தில் கூட நிற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகக் கூறினார். தாராபுரம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட போது, அவர் வந்து சென்றாலே வெற்றி உறுதி எனத் தான் கூறியதாகவும் தெரிவித்தார். மக்கள் தூய்மையான, நேர்மையான ஆட்சியை விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பொதுமக்களின் கோரிக்கைகள் குறித்துப் பேசிய செங்கோட்டையன், தங்களுக்குச் சேர வேண்டிய உரிமைகள் கிடைக்க மக்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்றார். விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் பதில் கிடைக்காவிட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்படும் என்றும், கோரிக்கை நிறைவேற்ற முடியாத நிலை இருந்தாலும் அதற்கான காரணத்தை எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும் என்றும் கூறினார். தீர்க்கப்படாத கோரிக்கைகளைத் தனது கவனத்திற்குக் கொண்டு வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் வெள்ளப் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்ற எச்சரிக்கைகள் குறித்தும் அவர் பேசினார். நிதி நெருக்கடி இருந்தாலும், இத்தகைய சவால்களை எதிர்கொண்டு மக்களைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை எனத் தெரிவித்தார். தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அனைவரிடமும் சகோதரத்துவத்துடன் பழகுபவர் என்றும், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவுக்குப் பிறகு அத்தகைய பண்புகளைக் கொண்ட தலைவராக அவரைக் காண்பதாகவும் செங்கோட்டையன் கூறினார். தனது அரசியல் பயணம் குறித்துப் பேசிய செங்கோட்டையன், “நல்லவேளை, எடப்பாடி பழனிசாமி என்னை அதிமுகவில் இருந்து நீக்கினார். அங்கிருந்து வந்ததால்தான் இன்று மக்கள் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இல்லையென்றால் நானும் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்” என்று தெரிவித்தார். அதிமுகவின் தற்போதைய நிலை குறித்துப் பேசிய அவர், அக்கட்சி “யானை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக” மாறிவிட்டதாக விமர்சித்தார். மேலும், “மிக விரைவில் அதிமுகவில் இருந்து 15 பேர் வெளியே வர இருக்கிறார்கள். நேற்று கூட அவர்கள் கூட்டம் போட்டுப் பேசிக் கொண்டிருந்தனர்” என்று கூறினார். எனினும், அந்த 15 பேர் யார் என்பது குறித்து அவர் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. இறுதியாக, ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்துவிடக் கோரி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆந்திர முதல்வரை நேரில் சந்திக்க உள்ளதாகவும், இந்த விவகாரத்தில் நல்ல முடிவு கிடைக்கும் என நம்புவதாகவும் செங்கோட்டையன் தெரிவித்தார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com