“எடப்பாடியில் நடந்தது குதிரை பேரம் இல்லையா?” - செங்கோட்டையன் சரமாரி கேள்வி.. கொந்தளித்த இபிஎஸ்.. சட்டசபையில் நேரடி மோதல்!

பேச அனுமதிக்கவில்லை என்றால் நின்றுதான் பேச வேண்டியிருக்கும் என ஆவேசமாக பதிலளித்தார்...
eps vs sengottaiyan
eps vs sengottaiyan
Published on
Updated on
2 min read

தமிழக சட்டப்பேரவையில் இன்று இயற்கை வளங்கள், தொழில்துறை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது 6 சட்டமன்ற தொகுதிகளில் எம்.எல்.ஏ.க்கள் இல்லாதது தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. ஆஸ்டின் எழுப்பிய கேள்வியால், அவையில் சலசலப்பு ஏற்பட்டது. திமுக எம்.எல்.ஏ. ஆஸ்டின் பேசுகையில், 6 தொகுதிகளில் எம்.எல்.ஏ.க்கள் இல்லாத நிலையில், அந்த தொகுதிகளைச் சேர்ந்த மக்கள் தங்களது பிரச்னைகளை யாரிடம் தெரிவிப்பார்கள் என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துள்ள 6 தொகுதிகளிலும் பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த தொகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அப்போது முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறுக்கிட்டு, பொறுப்பு அமைச்சர்களால் ஒரு தொகுதியின் அனைத்து பிரச்னைகளையும் முழுமையாக அறிந்துகொள்ள முடியாது என்றும், அதற்காகத்தான் சட்டமன்ற உறுப்பினர்கள் தேவைப்படுகிறார்கள் என்றும் தெரிவித்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் விரைவாக தேர்தல் நடத்த வேண்டும் என்பதுதான் அரசின் விருப்பம் என்றும், தேர்தல் நடைபெற்றால் அந்த 6 தொகுதிகளிலும் தாங்கள்தான் வெற்றி பெறுவோம் என்பதிலும் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை என்றும் தெரிவித்தார். அமைச்சரின் இந்த பேச்சுக்கு எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் தவெக வேட்பாளர் வாபஸ் பெற்ற விவகாரம் குதிரை பேரம் இல்லையா என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, சம்பந்தப்பட்ட வேட்பாளரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதாகவும், அவர் தேர்தலில் இருந்து வாபஸ் பெறவில்லை என்றும் விளக்கம் அளித்தார். மேலும், ஒரு கட்சியில் வெற்றி பெற்ற ஒருவர் ராஜினாமா செய்துவிட்டு பின்னர் வேறு கட்சியில் சேர வேண்டிய அவசியம் என்ன என்றும் கேள்வி எழுப்பினார். இதையடுத்து குறுக்கிட்ட சபாநாயகர், அவையில் கூறப்பட்ட கருத்துகள் அவைக்குறிப்பில் இடம்பெறும் என்றும், தேவையற்ற கருத்துகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து, குதிரை பேரம் தொடர்பான கருத்துகளை அமைச்சர் செங்கோட்டையன் தவிர்த்திருக்க வேண்டும் என சபாநாயகர் அறிவுறுத்தினார்.

இதற்கிடையே எடப்பாடி பழனிசாமி சத்தமாக பேசியதால் அவையில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சபாநாயகர் எழுந்து நின்று, “இது என்ன பொதுக்கூட்டமா? இங்கு பொதுக்கூட்டம் நடத்துகிறோமா?” என ஆவேசமாக கேள்வி எழுப்பினார். அதற்கு எடப்பாடி பழனிசாமி, பேச அனுமதிக்கவில்லை என்றால் நின்றுதான் பேச வேண்டியிருக்கும் என ஆவேசமாக பதிலளித்தார். அப்போது சபாநாயகர், எடப்பாடி பழனிசாமி உணர்ச்சிவசப்படாமல் பேச வேண்டும் என்றும், உடல்நிலையை வருத்திக்கொள்ளக் கூடாது என்றும் அறிவுறுத்தினார். இதனால் 6 சட்டமன்ற தொகுதிகளில் எம்.எல்.ஏ.க்கள் இல்லாத விவகாரம் தொடங்கி, குதிரை பேரம் குறித்த குற்றச்சாட்டு வரை தமிழக சட்டப்பேரவையில் ஆளும் தரப்புக்கும் அதிமுகவுக்கும் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com