“நுனிக்கிளையில் அமர்ந்துகொண்டு அடிமரத்தை வெட்டுகிறார் இபிஎஸ்!!” - செங்கோட்டையன் நீக்கத்திற்கு சசிகலா கண்டனம்!!

இது ஒரு சிறுபிள்ளைத்தனமான செயலாகத்தான் பார்க்கமுடிகிறது. இன்றைக்கு யாராக இருந்தாலும் கட்சியை வளர்ப்பதை விட்டுவிட்டு...
aiadmk
aiadmk aiadmk
Published on
Updated on
2 min read

முத்துராமலிங்கதேவரின் 118வது குருபூஜை விழாவை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள பல முக்கிய தலைவர்கள் மதுரையில் கூடியிருந்தனர். இதில் தமிழிகக் முதல்வர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக தொடர்கள் உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், மற்றும் செங்கோட்டையன், பாஜக -வின் நயினார் நாகேந்திரன், துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் பசும்பொன்னில் கூடி அங்குள்ள தேவர் சிலைக்கு மரியாதையை தெரிவித்தனர். 

தலைவர்கள் பொது வெளியில் கூடும்போது, அவர்களின் செயல்பாடுகள் மிக முக்கியமானதாக கவனிக்கப்படுகின்றன. இன்றைய தினம் தமிழக அரசியலில் அடுத்தடுத்த பேசுபொருளுக்கான குறியீடுகளை தலைவர்கள் விட்டுச்சென்றனர்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தோடு இணைந்து ஒரே காரில் நேற்று  பயணம் செய்தார் செங்கோட்டையன். செங்கோட்டையனின் இந்த செயல் எடப்பாடியை கடுப்பேற்றியுள்ளதாக கூறப்படுகிறது.  மேலும் நேற்று காலை மதுரையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இருவரும் சந்தித்து பேசினர். பின்னர் ஒரே காரில் பசும்பொன் கிராமத்துக்கு வந்தனர். பசும்பொன்னில் டிடிவி தினகரனும் அவர்களுடன் இணைந்தார். மூவரும் இணைந்து முத்துராமலிங்க தேவருக்கு மரியாதை செலுத்தினர்.

செங்கோட்டையன் பதவி பறிப்பு!!

இந்நிலையில் கோபிச்செட்டிபாளையத்தின் எம்.எல்.ஏ -வான செங்கோட்டையனின் அடிப்படை உறுப்பினர் பதவி தற்போது நீக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்தான ஆலோசனை காலை சேலத்தில் நடத்தப்பட்டது, அதன் பிறகே இம்முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் அந்த அறிவிப்பில், “கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும்; கழகத்தில் இருப்பவர்கள், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்பது தெரிந்திருந்தும், அவர்களுடன் ஒன்றிணைந்து, கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகின்ற காரணத்தினாலும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த திரு. K.A.செங்கோட்டையன், M.L.A.இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன்” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இவரின் செயலுக்கு கலவையான விமர்சனங்கள் எழுந்தவண்னணம் உள்ளன, இந்நிலையில் எடபடியின் இந்த செயலுக்கு சசிகலா கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் டிவிட்டர் பக்கத்தில் “கழக மூத்த முன்னோடியும், கழக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான அன்பு சகோதரர் திரு.செங்கோட்டையன் அவர்களை கழகத்திலிருந்து நீக்கியிருப்பதாக வரும் செய்திகள் மிகவும் வேதனையளிக்கிறது. இது ஒரு சிறுபிள்ளைத்தனமான செயலாகத்தான் பார்க்கமுடிகிறது. இன்றைக்கு யாராக இருந்தாலும் கட்சியை வளர்ப்பதை விட்டுவிட்டு, அழிக்கின்ற செயல்களில் ஈடுபடுவது மன்னிக்கமுடியாத செயலாகும். இது மிகவும் கண்டனத்திற்குரியது. அன்பு சகோதரர் திரு.செங்கோட்டையன் போன்றோர் புரட்சித்தலைவர் காலத்திலிருந்து தொடர்ந்து இந்த கட்சியின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டவர். இது போன்ற கட்சிக்கு பாதகமான நடவடிக்கைகள் மூலம் திமுகவினரின் ஆசைதான்  நிறைவேறியிருப்பதாக தெரிகிறது. இதைத்தான் திமுகவினர் அனுதினமும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார்கள். கழகத்தை அழிக்க துடிக்கும் திமுகவினரின் எண்ணத்திற்கு வலு சேர்த்திடும் வகையில் நம் கழகத்தினரே செயல்படுவது மிகவும் வேதனையாக இருக்கிறது. இது போன்ற செயல்கள் “நுனிக்கிளையில் அமர்ந்துகொண்டு அடிமரத்தை வெட்டுவது” போன்றது. இது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற ஆலமரத்திற்கே கேடாக அமைந்து விடும். இது போன்ற மனப்பாங்கினை திருத்திக்கொள்ள வேண்டும், இல்லையென்றால் கழகத்தொண்டர்களால் திருத்தப்படுவது நிச்சயம் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகிய மாபெரும் தலைவர்களால் உருவாக்கப்பட்டு, வளர்த்தெடுக்கப்பட்ட ஒரு பேரியக்கம். கழகத்தொண்டர்கள் பலபேர் இரத்தம் சிந்தி தங்கள் இன்னுயிரை தியாகம் செய்து காப்பாற்றிய இந்த இயக்கத்தை, இன்றைக்கும் கோடானு கோடி கழகத் தொண்டர்கள்தான் தாங்கி பிடித்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த உண்மையை உணர்ந்து, கழகத்தொண்டர்களின் எண்ணத்தை ஈடேற்றிடும் வகையில் அனைத்து சக்திகளும் ஒன்றிணைவது காலத்தின் கட்டாயம். இன்றைக்கு இதுதான் தமிழ் மண்ணிற்கும், தமிழக மக்களுக்கும் நாம் செய்கின்ற பேருதவியாக அமையும்.

கழகம் ஒன்றிணையவேண்டும், மீண்டும் கழக ஆட்சி அமையவேண்டும் என்பதுதான் ஒவ்வொரு அடிமட்ட தொண்டர்களின் எண்ணமாக இருக்கிறது. தமிழக மக்களின் விருப்பமும் இதுதான். நானும் இதைத்தான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். ஆனால், கழகம் ஒன்றிணைவதற்கு யார் இடையூறாக இருந்தாலும் அவர்கள் திமுக என்ற தீயசக்திக்கு மறைமுகமாக உதவி செய்பவர்களாகத்தான் கருதமுடியும். எனவே, திமுகவின் கோரப்பிடியிலிருந்து தமிழகத்தை மீட்டெடுக்க ஒன்றுபட்ட வலிமைமிக்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமாக அனைவரும் ஓரணியில் திரள்வோம். திமுக தலைமையிலான மக்கள் விரோத ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப அனைவரும் ஒன்றுபடுவோம் வென்று காட்டுவோம் என்பதை இந்நேரத்தில் மீண்டும் வலியுறுத்துகிறேன்.” என பதிவிட்டுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com