“குற்றச்சாட்டு மட்டும் வைக்கிறீங்களே ஆதாரத்த காட்டுங்க பாப்போம்..” - ஆர்.எஸ் பாரதி ஆவேசம்!!

இந்தியா கூட்டணி வெற்றியை நோக்கிச் செல்வதைத் தாங்கிக்கொள்ள முடியாமல், அவர் தனது வழக்கமான ...
RS Bharathi
RS Bharathi
Published on
Updated on
2 min read

பீகார் தேர்தல் வருகிற நவம்பர் 6 -லிருந்து 11 வரை நடைபெற உள்ளது. சிறப்பு வாக்காளர் திருத்த விவகாரமே அங்கு பெரும் பேசுபொருளாகியுள்ள நிலையில், NDA கூட்டணியும், INDIA கூட்டணியும் தங்களின் தேர்தல் பிரச்சாரங்களை துவங்கியுள்ளது.  இந்நிலையில் பிகார் மாநிலம் முசாபர்பூரில்  நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் கலந்து கொண்ட பேசிய பிரதமர் மோடி, வடமாநிலங்களில் கொண்டாடப்படும் சாத் பண்டிகையை யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் சேர்க்க முயற்சி செய்து வருவதாகக் கூறினார். ஆனால், வாக்கு அரசியலுக்காக காங்கிரஸும், ராஷ்ட்ரிய ஜனதா தளமும் சாத் தேவியை அவமதித்து விட்டதாகவும், அவர்களை தண்டிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும் “தமிழ்நாட்டில் பீகார் தொழிலாளர்களை திமுகவினர் அவமதிப்பதாகவும், துன்புறுத்துவதாகவும் பரப்புரைக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியது பெரும் அதிரவலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர், 

பீகார் மாநில தேர்தல் பிரச்சாரத்தில், இந்தியக் கூட்டணியின் வெற்றியைத் தாங்கிக்கொள்ள முடியாமல், பிரதமர் நரேந்திர மோடி, தமிழர்களுக்கு எதிராகப் பொய்ப் பிரச்சாரம் செய்து, இரு மாநில மக்களிடையே விரோத மனப்பான்மையை ஏற்படுத்த முயற்சிப்பதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கடுமையாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

பீகார் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, அங்குள்ள மக்கள் மத்தியில் தமிழர்கள் மீது ஒருவித அவநம்பிக்கையையும், விரோத மனப்பான்மையையும் ஏற்படுத்தும் விதத்தில் பேசியிருக்கிறார். இந்தியா கூட்டணி வெற்றியை நோக்கிச் செல்வதைத் தாங்கிக்கொள்ள முடியாமல், அவர் தனது வழக்கமான பொய்ப் பிரச்சாரத்தை அரங்கேற்றியுள்ளார்.

தமிழ்நாடு ஒரு அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது. இங்கு உத்தரப் பிரதேசம், பீகார், ஒரிசா உள்ளிட்ட பல வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் நிம்மதியாகவும், பாதுகாப்பாகவும் வாழ்ந்து வருகின்றனர். கடந்த 2023-ஆம் ஆண்டு, தமிழ்நாட்டில் பீகார் மாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக ஒரு பொய்யான செய்தியைப் பரப்பினர். ஆனால், அந்த வதந்தியைப் பரப்பியது பீகாரைச் சேர்ந்த மனிஷ் காஷ்யப், ரூபேஷ் குமார் ஆகிய இருவர்தான் என்பது கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அப்போதைய பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், ஒரு சிறப்புக் குழுவை இங்கு அனுப்பி ஆய்வு செய்த பிறகே, இங்குள்ள பீகார் மக்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்ற உண்மையை அறிந்துகொண்டார்.

பிரதமரின் இந்தப் பேச்சு முதல் முறையல்ல. ஒரிசா சட்டமன்றத் தேர்தலின்போது, பூரி ஜெகந்நாதர் கோயில் சாவியைத் தமிழ்நாட்டுக்கு எடுத்துச் சென்றுவிட்டதாகப் பேசி, அங்குள்ள தமிழ் அதிகாரியான வி.கே. பாண்டியனுக்கு எதிராக மக்களைத் தூண்டினார். பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்புச் சம்பவத்தில், ஒரு பாஜக பெண் எம்.பி., குண்டு வைத்தது ஒரு தமிழராகத்தான் இருக்க வேண்டும் என்று பொறுப்பற்ற முறையில் பேசினார். தென்னிந்தியர்கள் அனைவரும் கறுப்பர்கள் என்று மற்றொரு பாஜக தலைவர் பேசினார். இப்படித் தொடர்ந்து பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாண்டு, வாக்குகளைப் பெற பாஜகவும், பிரதமரும் முயற்சி செய்கின்றனர். பிரிட்டிஷாரை விட மோசமான ஆட்சியை மோடி நடத்தி வருகிறார்.

தமிழ்நாட்டிலிருந்து ஒரு ரூபாய் வரி வசூலித்தால், வெறும் 29 பைசாவை மட்டுமே மத்திய அரசு திருப்பித் தருகிறது. ஆனால், பீகாருக்கு ஒரு ரூபாய்க்கு 7 ரூபாய் கொடுக்கிறார்கள். இவ்வளவு நிதி நெருக்கடியிலும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி, 11.19% பொருளாதார வளர்ச்சியை எட்டியுள்ளது. இங்குள்ள காலை உணவுத் திட்டம், மகளிருக்கான உரிமைத் தொகை போன்ற திட்டங்கள் இன்று இந்தியாவுக்கே வழிகாட்டியாகத் திகழ்கின்றன. இதைப் பார்த்து ஏற்பட்ட பொறாமை மற்றும் வயிற்றெரிச்சலின் காரணமாகவே, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீதும், திமுக மீதும் பிரதமர் திட்டமிட்டுப் பழி சுமத்துகிறார்.

தமிழ்நாட்டில் பீகார் மாநிலத்தவர் தாக்கப்பட்டதற்கு ஒரு ஆதாரம் இருந்தால் கூட பிரதமர் மோடி காட்டட்டும். நாங்கள் இந்தித் திணிப்பைத்தான் எதிர்க்கிறோமே தவிர, இந்திக்காரர்களை அல்ல. இது ஒட்டுமொத்த தமிழர்களின் பிரச்சினை. பிரதமரின் இந்தப் பேச்சுக்கு ஒவ்வொரு தமிழரும் தங்களது கண்டனக் குரலை எழுப்ப வேண்டும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com