

அதிமுகவின் முன்னாள் அமைச்சரான செங்கோட்டையன் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். எம்ஜிஆர் காலத்திலிருந்து அதிமுகவில் முக்கிய பங்கு வகித்து வந்தவர் செங்கோட்டையன், அம்மாவின் ஆட்சிக்காலத்தில் வனத்துறை, வேளாண்மை துறை, போக்குவரத்து துறை, தகவல் தொழில்நுட்ப துறை என முக்கிய அமைச்சர் பதவிகளில் பணியாற்றி வந்தார். பின்னர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுகவின் அமைப்பு செயலாளராக பணியாற்றி வந்த நிலையில் இவருக்கும் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு உட்கட்சி பூசல் வெடிக்க தொடங்கியது.
இதுகுறித்து சில மாதங்களுக்கு முன் செய்தியாளர்களை சந்தித்து பேசிய செங்கோட்டையன் “அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை ஒன்றிணைக்க வேண்டும் அப்போது தான் வெற்றிபெற முடியும்” என கூறி அனைவரையும் ஒன்றிணைக்கும் செயலை 10 நாட்களில் செய்ய வேண்டும் என எடப்பாடிக்கு கெடு விதிக்கும் வகையில் பேசியிருந்தார். இதனை தொடர்ந்து ஏற்கனவே கட்சியின் பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இதனால் வருத்தமடைந்த செங்கோட்டையன் அமைதி காத்து வந்த நிலையில் அவர் தவெக-வில் நாளை (நவ 27) தனது ஆதரவாளர்களுடன் இணையுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.
இந்த சூழ்நிலையில் இன்று காலை சென்னை தலைமை செயலகம் வந்த செங்கோட்டையன் தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் அப்பாவு இடம் கொடுத்து தான் வகித்து வந்த கோபிசெட்டிபாளையம் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். மேலும் இன்று காலை செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் “தவெகவுடன் இணையப் போகிறீர்களா?” என கேள்வி எழுப்பிய நிலையில் அதற்கு எந்தவித பதிலும் தெரிவிக்காமல் சென்றார். இதனை தொடர்ந்து நாளை தமிழக வெற்றி கழகத்தில் இணையவே செங்கோட்டையன் தனது எம்.எல்.ஏ பதவியை தற்போது ராஜினாமா செய்துள்ளார் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.