இறந்தும் தன்னை கல்விக்காக அர்ப்பணித்த தகைசால் தமிழர்… எளிமையின் சிகரம் தோழர் நல்லகண்ணு!

86வது வயதில் கூட தாமிரபரணி ஆற்றில் மணல் எடுப்பதை கண்டித்து நீண்ட காலமாக...
இறந்தும் தன்னை கல்விக்காக அர்ப்பணித்த தகைசால் தமிழர்… எளிமையின் சிகரம் தோழர் நல்லகண்ணு!
Published on
Updated on
1 min read

ஒரு மனிதர் பொது வாழ்க்கையில் இந்த அளவிற்கு நேர்மையாகவும் தியாகத்தோடும் இருக்க முடியும் என்பதற்கு மிக சிறந்த உதாரணமாக திகழ்ந்து வந்தவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு. தனது வாழ்நாள் முழுவதிலும் மக்களின் உரிமைகளுக்காகவும் விவசாயிகளுக்கவும் போராடியவர். அனைத்து அரசியல் கட்சியினராலும் அரசியல்வாதிகளாலும் போற்றப்படும் நிகரற்ற தலைவர் நல்லகண்ணு சிகிச்சை பலனின்றி வரத்து 101 வயதில் உயிரிழந்த சம்பவம் அனைத்து தரப்பு மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஶ்ரீவைகுண்டத்தில் 1924-ம் ஆண்டு பிறந்த இவர் 18 வயதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து தேச விடுதலைப் போராட்டங்களில் பங்கேற்றார். கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட காலத்தில் அவர் 7 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பதவியில் 13 ஆண்டுகள், விவசாயிகள் சங்கத்தில் 25 ஆண்டுகள் என இன்றளவும் மக்களுக்கான போராட்டங்களில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர் நல்லகண்ணு. இன்றைய இளம் தலைமுறைக்கு முன்னோடியாக திகழும் எளிமையான தலைவர் நல்லகண்ணு. அனைத்துக் கட்சித் தலைவர்கள், தொண்டர்களால் பெரிதும் போற்றப்படுகிற தலைவராக இருந்தவர்.

இவருக்கு தமிழக அரசு அம்பேத்கர் விருது வழங்கி கெளரவித்த போது உடன் ஒரு லட்சம் ரூபாயை வழங்கியது. அதில் பாதியைக் கட்சிக்கும் மீதியை விவசாயத் தொழிலாளர் சங்கத்துக்கும் கொடுத்து தனக்கென பணத்தை வைத்துக் கொள்ளாமல் பொதுவுடைமையுடன் செயல்பட்டவர். அவரது 86வது வயதில் கூட தாமிரபரணி ஆற்றில் மணல் எடுப்பதை கண்டித்து நீண்ட காலமாக போராடி வந்தார், அதற்கு எதிராக நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடியிருந்தார். இந்த சம்பவம் இப்போதும் அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கும் சம்பவமாக அமைத்துள்ளது. அந்த வழக்கில், ஒரு வழக்கறிஞராக வாதாடி வெற்றியும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2022ஆம் ஆண்டு தகைசால் தமிழர் விருது வழங்கப்பட்டது. அந்த விருதுடன் அவருக்கு 10 லட்ச ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது. அதே மேடையில் அந்த 10 லட்சம் பணத்தையும் தன்னுடைய சொந்த பணமான 5,000 ரூபாயையும் சேர்த்து முதலமைச்சரின் நிவாரண நிதிக்கே நல்லகண்ணு வழங்கினார். தனது வாழ்நாள் முழுவதும் எளிமையாகவும் நேர்மையாகவும் வாழ்ந்து வந்த இவர் இறந்து பிறகு தனது உடலை மருத்துவ மாணவர்களின் கல்விக்கு பயன்பட கொடுக்க வேண்டும் என தெரிவித்திருந்த நிலையில் இவரது உடல் சென்னை மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு தனமாக வழங்கப்படுகிறது. உயிருடன் இருந்த போதும் பலருக்கு முன்னுதாரணமாக எளிமையின் சிகரமாக இருந்த தலைவர் இறந்த பின்னரும் மாணவர்களின் கல்விக்காக தன்னை அர்பணித்த சம்பவம் பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com