புதிய டிஜிபியாக சங்கர் ஜிவால் பதவி ஏற்பு!

புதிய டிஜிபியாக சங்கர் ஜிவால் பதவி ஏற்பு!
Published on
Updated on
1 min read

டிஜிபி சைலேந்திர பாபு இன்றுடன் ஓய்வு பெறுவதையொட்டி, சென்னை மாநகர காவல் ஆணையராக பதவிவகித்த சங்கர் ஜிவால் தமிழகத்தின் புதிய டிஜிபியாக பதவியேற்றுக் கொண்டார்.

தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபுவின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து 32-வது டி.ஜி.பி.,யாக, சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த சங்கர் ஜிவாலை தமிழக அரசு நியமித்தது. அதன்படி, சென்னை மயிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய டிஜிபியாக சங்கர் ஜிவால் பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது, பணி ஓய்வுபெறும் சைலேந்திர பாபு, பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்ததுடன், தனது பொறுப்புகளை சங்கர் ஜிவாலிடம் ஒப்படைத்தார். பின்னர், சட்டம் - ஒழுங்கு தொடர்புடைய கோப்புகளில் கையெழுத்திட்டு தனது பணியினை அவர் தொடங்கினார்.

அப்போது பேசிய அவர்,  தமிழ்நாட்டில் சட்டம் - ஒழங்கு சீராக உள்ளதாக தெரிவித்தார். காவல் நிலையங்களுக்கு வருகைதரும் பொது மக்களை, காவலர்கள் நல்ல முறையில் அணுக வேண்டும் என்றார். தமிழகத்தில் கள்ளச் சாராயத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த அவர், காவலர்களின் நலனுக்காக நல்ல திட்டங்கள் கொண்டு வரப்படும் என்றார்.

இதேபோல், சென்னையின் 109-வது காவல் ஆணையராக சந்தீப் ரத்தோர் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். புதிய காவல் ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்ட சந்தீப் ரத்தோரிடம், தனது பொறுப்புகளை சங்கர் ஜிவால் ஒப்படைத்தார். 2021-ம் ஆண்டு மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் டிஜிபியாகவும், 2022-ம் ஆண்டு ஆவடி காவல் ஆணையராகவும் பணியாற்றிய சந்தீப் ராய் ரத்தோர் தற்போது சென்னை மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com