

“நாமும் எம்.ஜி.ஆர்., விஜயகாந்த் செய்தது போல மக்களுக்கு நன்மைகள் செய்ய வேண்டும்”
நடிகர் சிவகார்த்திகேயன் பிரம்மாண்டமாக தனது ரசிகர் மன்ற நிர்வாகிகள் சந்திப்பை நடத்தியிருக்கிறார். அங்கே பேசிய வசனம்தான் இது.
இந்த இரண்டு ஆளுமைகளைத் தங்கள் முன்னோடிகளாக அறிவிப்பவர்கள், அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்... அரசியல் தானே?
விஜய்யின் அரசியல் வெற்றிக்குப் பிறகு, இந்த பேட்ச் நடிகர்கள் தங்கள் ரசிகர் அமைப்புகளைக் கட்டிக்காப்பாற்றுவதில் அதிக கவனம் செலுத்துவதைப் பார்க்க முடிகிறது. தனுஷ், சூர்யா உள்ளிட்ட நடிகர்கள் சமீபத்தில்தான் தங்கள் ரசிகர்களுடன் சந்திப்பை நடத்தினர்.
விஜய் சேதுபதி தனது ரசிகர் மன்றங்களுக்கு நிர்வாகிகளை அமைத்து, அடித்தளத்தை வலுப்படுத்தத் தொடங்கிவிட்டார். ஜெயம் ரவி ரசிகர்கள் சந்திப்பை நடத்தினார். நடிகர் சூரியும் கூட அவ்வப்போது ரசிகர் மன்ற நிர்வாகிகளைச் சந்தித்து வருகிறார். அந்த வகையில், சி.கா.வின் ரசிகர் மன்ற நிர்வாகிகள் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று.
அரசியல் மேடையைப் போலவே பெரிய பேனர்களால் திடலை அமைத்து, நிர்வாகிகள் அனைவரையும் வெள்ளைச் சட்டை சீருடையில் வர வைத்து, விருந்தளித்து சிறப்பித்துள்ளார் சி.கா.
எம்.ஜி.ஆர்., விஜயகாந்த் இருவரையும் குறிப்பிட்ட சிவகார்த்திகேயன், கவனமாக சில பெயர்களைக் குறிப்பிடாமல் தவிர்த்துள்ளார். ஒன்று ரஜினிகாந்த், மற்றொன்று விஜய்.
இந்த இரு உச்ச நட்சத்திரங்களின் ரசிகராகவே தன்னை நெடுநாள் காட்டிக்கொண்டவர் SK. ‘கோட்’ படத்தில் சிவகார்த்திகேயனுக்குத் துப்பாக்கி கொடுத்து, கிட்டத்தட்ட தனது சினிமா வழித்தோன்றலாக அங்கீகரித்தார் விஜய். ஆனால், அடுத்த சில மாதங்களில் விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்துடன் தனது ‘பராசக்தி’ படத்தை வெளியிடத் தயாரானார் சி.கா.
விஜய் முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு அவரைச் சந்தித்த சிவகார்த்திகேயன், அவருடனான சகோதரப் பிணைப்பு தொடரும் என ட்வீட் செய்தார். ஆனால், அவரது பிறந்தநாளன்று வாழ்த்து தெரிவிக்காதது பேசுபொருளானது. இப்போது தனது ரசிகர் மன்றத்துக்கு முன்னோடியாக எம்.ஜி.ஆர்., விஜயகாந்தைக் குறிப்பிட்டவர், விஜய்யைத் தவிர்த்திருக்கிறார்.
ஒருவேளை விஜய் பெயரைக் குறிப்பிடுவது அரசியல் ரீதியாக ஆதரவு அளிப்பதாக எடுத்துக்கொள்ளப்படலாம் என இந்த முடிவை எடுத்திருக்கலாம்.
ஆனால், ரஜினிகாந்த் பெயரையும் கூட சொல்லாதது சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. திரைப்பயணத்தின் தொடக்கத்தில் தன்னை சூப்பர் ஸ்டார் ரசிகராகப் பல இடங்களில் முன்னிறுத்தியிருந்தார் SK.
ரஜினிகாந்த் அரசியலில் இருந்து விலகியிருக்கிறார். ஆனால், அவர் அரசியலில் ஈடுபட்டிருந்தால் நிலைமை வேறு மாதிரி இருந்திருக்கும் என ஆதங்கப்படுகின்றனர் ரஜினி ரசிகர்கள்.
விஜய் அரசியல் வெற்றிக்குப் பிறகு பத்திரிகையாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், 2001-ல் அரசியலுக்கு வந்திருந்தால் நிச்சயம் வெற்றி பெற்றிருப்பேன் என்றார். ஆனால், 2019-ல் வந்திருந்தால் கூட வெற்றி பெற்றிருக்கலாம் என்பதே ரசிகர்களின் மனக்குரலாக இருக்கிறது.
விஜய்யின் வெற்றி ரஜினி முகாமைச் சிந்திக்க வைத்தது. இப்போது சிவகார்த்திகேயன் மற்றும் தனுஷ் கூட அடுத்தடுத்து அரசியலில் களமிறங்கத் திட்டமிட்டுள்ளதால், ரஜினி தரப்பு யாருக்காவது ஆதரவு அளிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு, முதல்வர் விஜய்யை அவரது இல்லத்திலும், தலைமைச் செயலகத்திலும் கமல்ஹாசன், சிவகார்த்திகேயன், சிலம்பரசன் உள்ளிட்ட பல்வேறு சினிமா பிரபலங்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். ஆனால், இதுவரை ரஜினி, தனுஷ் ஆகியோர் விஜய்யைச் சந்திக்கவில்லை.
தனுஷ் தொடங்கப்போகும் கட்சி குறித்து ஏற்கெனவே அரசல் புரசலாகப் பேச்சுகள் எழுந்துள்ளன. அதற்குப் பக்கபலமாக ரஜினியின் ஆதரவு கிடைக்குமா அல்லது சிவகார்த்திகேயன் களமிறங்கும்போது ரஜினியின் ஆசீர்வாதம் கிடைக்குமா என ரஜினி ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
தனுஷ் ரஜினிகாந்த்தின் முன்னாள் மருமகன். இந்த உறவு விரிசல் ஒருவேளை அரசியல் இணக்கத்துக்கு தடையாக இருக்கலாம். SK விஜய்க்கு எதிராக களமிறங்கினால் அவருக்கு ரஜினி மற்றும் அவரது ரசிகர்களின் ஆதரவுக்காரம் நீளலாம். ஆனால் அரசியல் பிரவேசத்தில் தனுஷ் சிவகார்த்திகேயனை முந்திக்கொள்வார் என்றே இதுவரை பேசப்படும் செய்திகள் உரைக்கின்றன.
இது எல்லாவற்றுக்கும் நடுவே அடுத்த 20 வருஷத்துக்கு ஆட்சியில் நாங்க தான் என காலரை தூக்குகின்றனர் தவெகவினர். இந்த ரசிகர் மன்றங்கள் எல்லாம் விஜய் கட்டிக்கொண்டிருக்கும் கோட்டை எதிர்க்க முடியுமா என்பதே அரசியலில் இறங்கும் முன்னர் அனைவரும் சிந்தித்துக்கொள்ள வேண்டிய கேள்வி!
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்