

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராணா சோனியா காந்தியின் சுயசரிதை நூல் வெளியீட்டு விழா நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் விஜய் உள்ளிட்ட 7 மாநிலங்களின் முதல்வர்கள், காங்கிரஸ் முக்கியத் தலைவர்கள் மற்றும் இந்தியா கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பலரும் பங்கேற்றனர்.
சோனியா காந்தி எழுதியுள்ள சுயசரிதை நூலுக்கு "Belonging: A Journey of Love" எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் புத்தகம் கடந்த 10-ம் தேதி விற்பனைக்கு வந்த நிலையில், அதன் அதிகாரப்பூர்வ வெளியீட்டு விழா டெல்லியில் உள்ள ஐடிசி மவுரியா நட்சத்திர ஓட்டலில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முதல்வர் விஜய், கர்நாடக முதல்வர் சிவகுமார், கேரள முதல்வர் சதீசன், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் முக்கியத் தலைவர்களும் விழாவில் கலந்துகொண்டனர். இவர்களுடன் இணைந்து சோனியா காந்தி தனது சுயசரிதை நூலை வெளியிட்டார்.
விழாவில் பேசிய சோனியா காந்தி, தனது வாழ்க்கை அனுபவங்களைப் புத்தகமாக எழுதுவத தூண்டுதலாக இருந்த காரணத்தையும் குறிப்பிட்டார். குறிப்பாக, தனது குடும்பத்தைப் பற்றி பல ஆண்டுகளாகப் பரப்பப்பட்டு வரும் தவறான தகவல்களும், உண்மைக்குப் புறம்பான கருத்துகளுமே தன்னை சுயசரிதை எழுதத் தூண்டியதாக அவர் தெரிவித்தார்.
தனது மாமியார், கணவர், மகன், மகள் மற்றும் தன்னைப் பற்றிப் பல்வேறு கதைகள் தொடர்ந்து பேசப்படுவதாக குறிப்பிட்ட அவர், அவற்றில் பெரும்பாலானவை உண்மைக்குப் புறம்பானது என்றும் கூறினார். தங்களது குடும்பத்தைப் பற்றி ஆதாரமற்ற கட்டுக்கதைகள் உருவாக்கப்படுவதாகவும், அவை மனதைப் புண்படுத்தும் வகையில் இருப்பதாகவும் வேதனை தெரிவித்தார். மேலும், தனது குடும்பத்தைப் பற்றி தனக்குத் தெரிந்த உண்மைகளையும், தனது சொந்த உணர்வுகளையும் மக்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இந்த சுயசரிதையை எழுதத் தொடங்கியதாகக் கூறினார்.
தற்போது சோனியா காந்தி-யின் சுயசரிதை புத்தகத்தில் இருந்து ஒரு நெகிழ்ச்சி பகுதியை விசிக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் பகிர்ந்துள்ளார். தமிழ்நாட்டைப்பற்றி சோனியாகாந்தி புத்தகத்தில் குறிப்பிட்ட ஒரு பகுதியாகும். “தமிழ்நாட்டில் நாங்கள் மேற்கொண்ட பயணத்தின் போது, பல்வேறு கிராமங்களில் வாகனத்தை நிறுத்தி ராஜீவ் மக்களை சந்தித்தார். அவ்வாறான கிராமம் ஒன்றில், ஜீப்பைச் சுற்றித் திரண்டிருந்த மக்களிடம் பேசுவதற்காக ராஜீவ் கீழே இறங்கினார். நான் ஜீப்பிற்குள் இருந்தபடி கவனித்துக் கொண்டிருந்தபோது, சற்று தொலைவில் நின்றிருந்த ஒரு முதிய பெண்மணி என்னையே உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டேன்."
"ராஜீவ் மீண்டும் ஜீப்பிற்குள் ஏறியபோது, அந்தப் பெண்மணி அருகில் வந்து, “நீ யார்?” என்று கேட்பது போல சைகை செய்தார். நான் ராஜீவிற்கு நெருக்கமாக நின்று, அந்தப் பெண்ணைப் பார்த்துக் கண்ணடித்தேன். அதைப் புரிந்துகொண்ட அவர், “ஆஹா, இப்போதுதான் புரிகிறது!” என்பது போலத் தலையை அசைத்து, பெரிதாகச் சிரித்தார். அவர் உரக்கச் சிரிக்க, நானும் அவருடன் சேர்ந்து சிரித்தேன். வெவ்வேறு உலகங்களைச் சேர்ந்த, வெவ்வேறு மொழிகளைப் பேசும் இரு பெண்கள், வெறும் சைகைகள் மூலம் ஒருவருக்கொருவர் கருத்துகளைப் பரிமாறிக்கொண்ட அந்த நெகிழ்ச்சியான தருணம், இன்றும் என் நினைவில் பசுமையாக உள்ளது." என்று தமிழக்கத்தில் நடந்த நெகிழ்ச்சி சம்பவத்தை குறிபிட்டுள்ளார்
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.