

ஸ்ரீவைகுண்டம் தவெக சட்டமன்ற உறுப்பினர் சரவணன் ரூ.60 ஆயிரம் பண மோசடி புகார் எழுந்துள்ளது. பதவி வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்றதாக குற்றச்சாட்டு தெரிவித்து வாலிபர் ஒருவர் வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள புதுமனை அம்மாள்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் வைணவ பெருமாள். அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த இவர், கடந்த 10 ஆண்டுகளாக தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் ஸ்ரீவைகுண்டம் தவெக சட்டமன்ற உறுப்பினர் சரவணன் குறித்து தற்போது பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
வைணவ பெருமாள், தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் சரவணனுடன் நெருக்கமாகப் பழகி வந்ததாகவும், அவரது தேர்தல் வெற்றிக்காக தீவிரமாக பணியாற்றியதாகவும் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். அப்போது தூத்துக்குடி மாவட்ட ஆதிதிராவிடர் நலவாரியத்தில் உறுப்பினர் பதவி பெறுவதற்காக விண்ணப்பித்திருந்ததாகவும்,அந்தப் பதவியைப் பெற்றுத்தருவதாக கூறி ரூ.60 ஆயிரம் முன்பணம் வேண்டும் என்றும் சரவணன் கேட்டுள்ளார்.
இதனை நம்பி,அதிக வட்டிக்கு கடன் வாங்கி ரூ.60 ஆயிரத்தை வழங்கியதாகவும், ஆனால் ஒரு மாத காலமாகியும் தற்போது வரை பதவி கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பலமுறை கேட்டபோதும் முறையான பதில் கிடைக்காமல் காலதாமதம் செய்யப்பட்டதாகவும் குற்றசாட்டியுள்ளார்.
இதற்கிடையே, அந்தப் பதவி கோரம்பள்ளத்தைச் சேர்ந்த வேறொருவருக்கு வழங்கப்பட்டதாக செய்தித்தாள் மூலம் தெரிந்துகொண்டதாகவும் வைணவப்பெருமாள் தெரிவித்துள்ளார். இதையடுத்து நேரில் சென்று MLA சரவணனிடம் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டபோது, பணத்தைத் திருப்பித் தராமல் தன்னை அச்சுறுத்தும் வகையில் பேசியதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
வட்டிக்கு கடன் வாங்கி பணம் கொடுத்ததால் தற்போது குடும்பத்துடன் கடும் சிரமத்தை சந்தித்து வருவதாகவும் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். தான் வழங்கியதாக கூறப்படும் ரூ.60 ஆயிரம் பணத்தை மீட்டுத் தருவதுடன், இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தி தனக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக முதல்வர் விஜய்க்கு கோரிக்கை விடுத்துள்ளார் வைணவப்பெருமாள். இது குறித்த வீடியோ வர வெளியிட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதற்குமுன் கடந்த செப்டம்பர் மாதத்தில், தவெக கட்சியை சேர்ந்த பெண் நிர்வாகி ஒருவர் ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ மீது பாலியல் புகார் அளித்ததாகச் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்