

இன்று கோவையில் பெரியார் அறிவுலகத்தை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் விஜய். இந்த நிலையில், "யார் திறந்தால் என்ன? திறந்து வைப்பதா பெருமை?" எனக் கேள்வி எழுப்பி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
அவரது பதிவில், "பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ வழித்தடத்தைத் தொடர்ந்து நமது திராவிட மாடல் அரசின் மற்றுமொரு மாபெரும் திட்டம் இன்று மக்களின் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட உள்ளது... மனம் மகிழ்ச்சியில் கூத்தாடுகிறது!" எனக் கூறியுள்ளார்.
பெரியார் அறிவுலகம் குறித்து, "2024-25-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், கோவை வாழ் பொதுமக்களிடையே, குறிப்பாக இளைய தலைமுறையினரின் அறிவுத்தாகத்தை மேலும் தூண்டும் விதமாக ஒரு மாபெரும் நூலகம் மற்றும் அறிவியல் மையம் அமைக்கப்படும் என அறிவித்தோம். அதனையடுத்து, 6-11-2024 அன்று அடிக்கல் நாட்டி, கோவை மத்தியச் சிறைச்சாலைக்குச் சொந்தமான இடத்தில், 1.98 இலட்சம் சதுர அடிப் பரப்பளவில் தரை மற்றும் ஏழு தளங்களுடன் சுமார் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இதனைக் கட்டி முடித்தோம். இப்படி நாம் விரைந்து செயல்பட்டு, அக்கறையோடு உருவாக்கியுள்ள அறிவுக் கோயில்தான் பெரியார் அறிவுலகம்." என விளக்கியுள்ளார்.
மேலும், "தரைத்தளத்தில் கலையரங்கம், மாற்றுத்திறனாளிகளுக்கான நூலகம் மற்றும் விண்வெளிப் பயணத் தூக்கி, முதல் தளத்தில் வரவேற்பறை, அறிவியல் மையம், இரண்டாம் தளத்தில் குழந்தைகளுக்கான நூலகம் மற்றும் சொந்தப் புத்தகம் படிக்கும் பிரிவு, மூன்றாம் தளத்தில் போட்டித் தேர்வுகளுக்கான நூலகம் மற்றும் தலைமை நூலகர் அலுவலகம், நான்காம் தளத்தில் தமிழ்ப் புத்தகப் பிரிவு மற்றும் பருவ இதழ்கள் பிரிவு, ஐந்து, ஆறாவது தளங்களில் ஆங்கில புத்தகப்பிரிவு மற்றும் இன்குபேஷன் சென்டர், ஏழாம் தளத்தில் அறிவியல் மையம் மற்றும் டிஜிட்டல் நூலகம் எனக் காண்போரின் கண்களைக் கவரும் விதத்திலும் சிந்தையைத் தூண்டும் விதத்திலும் உலகத்தரத்தில் இதனை அமைத்துள்ளோம். ஒரு இலட்சத்து 25 ஆயிரம் நூல்களைக் கொண்ட, மேற்கு மண்டலத்துக்கான மாபெரும் அறிவுச்சுரங்கமாக இது திகழவுள்ளது." எனப் பெருமிதம் கொண்டுள்ளார்.
அத்துடன், "இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நான் கோவைக்குச் சென்றிருந்தபோதே, பெரும்பாலான பணிகள் முடிவுற்று இருந்தன. அப்போதே இதனைத் திறந்து வைத்திடலாம் எனப் பலரும் சொன்னபோது, “அவசரம் வேண்டாம், முழுமையாகப் பணிகள் நிறைவடைந்த பின்னர் திறந்தால் போதுமானது” என்று சொன்னேன். யார் திறந்தால் என்ன! திறந்து வைப்பதா பெருமை? எதையும் திட்டமிட்டு உருவாக்குவதுதானே உண்மையான பெருமை! தமிழ்நாட்டில் அந்தப் பெருமை ஆக்கசக்தியான திராவிட முன்னேற்றக் கழகத்துக்கே உரியது..." எனக் கூறியுள்ளார்.
மேலும் திமுக அரசின் சாதனைகள் குறித்து, "கோவை மட்டுமல்ல, திருச்சியில் 290 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பெருந்தலைவர் காமராசர் பெயரில் பிரம்மாண்ட நூலகம், நெல்லையில் 100 கோடியில் கண்ணியத் தென்றல் காயிதே மில்லத் பெயரிலான மாபெரும் நூலகம், சேலத்தில் 104 கோடி ரூபாயில் பாரதிதாசன் அறிவுலகம், கடலூரில் 98.26 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமையவுள்ள அஞ்சலை அம்மாள் அறிவுலகம் எனத் தமிழ்நாட்டில் திசைதோறும் பிரம்மாண்ட நூலகங்களைத் திராவிட மாடல் அரசில் அமைத்து வந்தோம். இவையனைத்தும் வெகு விரைவில் அடுத்தடுத்து திறப்பு விழா காணவிருக்கின்றன.
நூலகங்கள் மட்டுமில்லாமல், சென்னையில் சைதாப்பேட்டை முதல் தேனாம்பேட்டை வரையிலான மேம்பாலம், சென்னை மெட்ரோ இரயில் திட்ட இரண்டாம் கட்டத்தின் எஞ்சிய வழித்தடங்கள், முட்டுக்காட்டில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் பன்னாட்டு அரங்கம் எனத் திராவிட மாடல் அரசு அமைத்த திட்டங்களை மட்டுமே இந்தப் புதிய அரசு இன்னும் பல ஆண்டுகளுக்குத் திறந்துகொண்டே இருக்கலாம். அந்த அளவுக்கு வலுவான அடித்தளத்தை ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைத்துவிட்டுச் சென்றிருக்கிறோம்..." எனப் பெருமைபட்டுள்ளார்.
தவெக அரசை விமர்சித்த அவர், "உள்ளங்கையால் உதயசூரியனை மறைத்துவிட முயல்வதைப் போல சில முட்டாள்தனமான செயல்களில் தற்போதைய ஆட்சியாளர்கள் ஈடுபடுவதைக் கண்டேன். பெரியார் அறிவுலகத்தின் அறிவியல் தொழில்நுட்ப அரங்கில் பிரமிட் வடிவிலான கணினி மேசையில் பொறிக்கப்பட்டுள்ள நான் முதல்வன் பெயரை மறைத்து வைத்துள்ளார்களாம். தான் முதலமைச்சராக ஆகிவிட்ட பின்பும் கூட, ‘முதல்வன்’ என்ற சொல்லைக் கண்டால் மக்களுக்கு இந்த ஸ்டாலின் நினைவுதான் வரும் என நம் எதிரிகளே அஞ்சுகிறார்கள் என்றால், அதுதான் நமது வெற்றி! நமது நான் முதல்வன் திட்டத்தின் வெற்றி!
அறிவுச் செயல்பாடுகளுக்கு எந்தத் தொடர்புமற்ற, அறிவார்ந்த சமூகத்தின் மேல் ஒவ்வாமை கொண்ட இந்த மூடர் கூட்டத்தின் ஆட்டம் முடிவுக்கு வந்தே தீரும்! அதை நிறைவேற்றுவதில், நாம் அமைத்த நூலகங்களும், வெளியிட்ட நூல்களும் நிச்சயம் பங்களிக்கும்! இன்று திறக்கப்படவுள்ள பெரியார் அறிவுலகம் இனி கோவையின் பெருமைமிகு அடையாளங்களுள் ஒன்றாகத் திகழும்!" எனப் பதிவிட்டுள்ளார்.
இதற்கு பதிலடி கொடுத்த தமிழக வெற்றிக் கழக ஐடி விங், "பெரியார் அறிவுலகத்தை மாண்புமிகு முதலமைச்சர் திறந்து வைக்கிறார் என்பதற்காக, ஒரு மணி நேரத்திற்கு ஒரு பதிவு போட்டு, புலம்பித் தனது insecurity-யை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார் Dummy Daddy!
அறிவுத் திருக்கோவில்களை உருவாக்கினோம் என்று தம்பட்டம் அடிக்கும் பண்ணையாரே! மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தூத்துக்குடியில் திறந்து வைக்கப்பட்ட ஆரம்பப் பள்ளி ஒன்றில் சுவரில் விரிசல் விழுந்து, தரை பெயர்ந்து, திராவிட மாடலின் தில்லுமுல்லுகளை வெளிச்சம் போட்டுக் கொண்டிருக்கிறதே! இதற்குப் பதில் இருக்கிறதா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அத்துடன், "அரசுத் திட்டங்களுக்கு திமுக ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு நீங்கள் ஒன்றும் உங்கள் அப்பா வீட்டு பணத்தைப் பாக்கெட்டிலிருந்து எடுத்துச் செலவு செய்யவில்லை என்பதை மிகவும் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்!
ஸ்டிக்கர் ஒட்டி credit steal செய்ய முனையும் Dummy Daddy அவர்களே! உங்களின் நிர்வாகத் திறனின்மையால் மாநிலமெங்கும் பரவிக் கிடக்கும் போதைப்பொருள் கலாச்சாரத்தால் இளைய தலைமுறையினர் சீரழிவதற்கும், அதனால் விளையும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளுக்கும் பொறுப்பேற்க வக்கிருக்கிறதா? Insecurity-யில் உழன்று புலம்பாமல், வீட்டில் நன்றாக உண்டு, உறங்கி ஓய்வெடுங்கள், Sweet Uncle!" என விமர்சித்துள்ளனர்." என்றும் கூறியுள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்