கலைஞரின் சிலைகள் குறிவைத்து.. மர்ம நபர் தாக்குதல்! அடுத்ததடுத்து உடைக்கப்பட்ட அலுவலகங்கள்.. ஒன்று திரண்ட திமுக.. பதற்றதில் ஈரோடு

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி சிலையை, அந்த மர்ம நபர் இரும்பு கம்பியால் தாக்கும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
kalaingar karunanithi
Published on: 
Updated on: 
2 min read

ஈரோடு மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் திமுக கட்சி அலுவலகங்களின் கண்ணாடிகள் மற்றும் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் சிலைகள் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபரால் அடுத்தடுத்து உடைத்துச் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையேயும், திமுகவினரிடையேயும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

​ஈரோடு மாவட்டத்தில் உள்ள திமுக அலுவலகங்கள் மற்றும் கருணாநிதி சிலைகளைக் குறிவைத்து இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர் திடீர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். இதில், ஈரோடு தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தின் முன்பகுதி கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.

erode

இதேபோல், ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலையில் இருந்த கருப்புக் கண்ணாடியையும், முனிசிபல் காலனியில் உள்ள கருணாநிதி சிலையின் கண்ணாடியையும் அந்த மர்ம நபர் உடைத்துச் சேதப்படுத்தியுள்ளார்.

​மேலும், மொடக்குறிச்சியில் செயல்பட்டு வரும் 'அன்பகம் உதயம்' திமுக இளைஞரணி அலுவலகத்தின் கண்ணாடிகளும் உடைக்கப்பட்டுள்ளன. ஒரே நேரத்தில் நான்கு இடங்களில் நடைபெற்ற இந்தத் தாக்குதல் சம்பவத்தை அறிந்த திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் சம்பவ இடங்களில் திரண்டதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.

erode

​இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்று சேதமடைந்த பகுதிகளைப் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா (சிசிடிவி) காட்சிகளை கைப்பற்றி, இருசக்கர வாகனத்தில் வந்து தப்பியோடிய மர்ம நபரை பிடிக்கத் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

தற்போது முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி சிலையை, அந்த மர்ம நபர் இரும்பு கம்பியால் தாக்கும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுகவினர் ஆர்பாட்டதில் ஈடுபட்டு வருவதால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு சூழல் நிலவி வருகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்